Saturday, October 07, 2006

வாங்கிய விடுதலை.


பெற்ற தாயினும்
பெரிது
எனினும்,
தெருவில் துப்புகின்ற
வாய்
வாய்த்தது!

இந்தியத் தொலைக்காட்சியில்
முதன்முறை
என்ன படம் என்பதை,
நினைவூட்டாததால்,
வேகமாகப் பாடப்படுகிறது,
ஜனகணமண!

வாங்குகின்ற
ஆரஞ்சு மிட்டாயிலும்
தெரியவில்லை,
கொடியின் ஒரு வண்ணம்!

வெள்ளிப் பனிமலையின்
மீதுலாவும்
வீரர்தம்
கல்லறைப் பெட்டியில்
கறையாய்
இரத்தம் அல்ல,
ஊழல்!

பிறந்த நாள் என்று
மூடிய கதவுகளைத்
தட்டித் தட்டி
ஓய்கிறது,
வீரம் விளைந்த மண்ணின்
மைந்தர் கை!

குடி கெடுக்கும் குடியை
ஊற்றிக் கொடுக்கும்,
அரசாங்கத்தின்
அதிகாரக் கை!

கள்ளக் காதல்,
விபத்து ஒழித்த
பத்திரிக்கைப் பக்கங்களை
நிரப்பும்,
முன்னாள்,
இன்னாள்
ஆட்சியாளர்களின் அறிக்கை!

வாங்கிய விடுதலை
வீரியம்
இழந்து போனது,
சகோதரனுக்கு
தண்ணீர் தராத போது.

ஓடிப்போ
உன் மாநிலத்துக்கு
என்ற போது.

இனி
பொஞ்சாதி என்றபோதும்,
உஞ்சாதி இல்லை
எனப் பிரித்த போது.

கொள்கையென்றொன்றின்றி
குரங்குகளாய்க்
கூட்டணி தாவிய போது.

எத்தனையோ இல்லாத போதும்,
தென் சுனாமிக்கு
சூரத்திலிருந்து
நீண்ட கைகளின்
வழி கசிந்தது,
வாங்கிய விடுதலையின்
மூச்சு ஓயவில்லை
என்ற நம்பிக்கை.

இசுலாமிய முதல் குடிமகனின்
வழிகாட்டலில்,
கிருத்துவப் பெண்
விரலசைவில்,
சீக்கிய மூளையின்
சீரிய தலைமையில்,
இயங்குகின்றது
இந்துப் பெரும்பான்மை நாடு
என்று நினைக்கையில்,

வாங்கிய விடுதலை
வீண்
போகவில்லை...!

வந்தே மாதரம்.

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

4 comments:

ராசுக்குட்டி said...

வாவ் கவிதை மிக அருமை!

//கொள்கையென்றொன்றின்றி
குரங்குகளாய்க்
கூட்டணி தாவிய போது.

எத்தனையோ இல்லாத போதும்,
தென் சுனாமிக்கு
சூரத்திலிருந்து
நீண்ட கைகளின்//

சடார்னு gear-அ மாத்திட்டிங்களா கொஞ்சம் தடுமாறுது...positive shift வருவதற்கு முன் logical-aa கொஞ்சம் முடிச்சிங்கன்னா நல்லா இருக்கும்னு தோணுது

மற்றபடி எல்லாரையும் பெருமைப்பட வச்சதோட சிந்திக்கவும் வச்சுருக்கிங்க நன்றியும் வாழ்த்துக்களும்!

Anonymous said...

"நச்"

Anonymous said...

//இந்தியத் தொலைக்காட்சியில்
முதன்முறை
என்ன படம் என்பதை,
நினைவூட்டாததால்,
வேகமாகப் பாடப்படுகிறது,
ஜனகணமண!

வாங்குகின்ற
ஆரஞ்சு மிட்டாயிலும்
தெரியவில்லை,
கொடியின் ஒரு வண்ணம்!
//

சிறப்பு !

இரா. வசந்த குமார். said...

ராசுக்குட்டி, சேவியர், நிர்மல் மற்றும் சதீஸ்க்கு நன்றிகள்....