Monday, April 30, 2007

அன்பே சிவம். வேறென்ன..?

ன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், கமலின் நினைவு கூறத்தக்க, கமலை நினைவு கூறத்தக்க அவரது படைப்பு என்றால், அது 'அன்பே சிவம்'-ஆகத் தான் இருக்க முடியும்.

கமல் மட்டுமல்ல, நாசர், மாதவன், சந்தானபாரதி ஆகியோரின் அருமையான பங்களிப்புகளோடு ஒரு உறைந்த புகைப்படம் போல, இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் இருக்கப் போகிறது. பெரும்பாலானோருக்கும் நம்பிக்கை ஏற்படாதவகையில் சுந்தர்.சி-க்கும் இப்படம், வாழ்வின் மைற்கல்.

இப்படம் பற்றி ,அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால், படத்தின் இரு காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு.



இப்பாடற்கோவையில் நான் கண்டு இரசித்த, சில பகுதிகள்:


  • கமலின் முகத்தில் கத்தி வைக்கின்ற போது, எப்படி குருதி, சைடுவாக்கில் காமிராவைப் பார்த்து விழுகின்றது? இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்பது இன்றுவரை எனது தீராத சந்தேகம்.
  • தனது அழகான, கம்பீரமான முகம், தையல்களால் விரிசல் கண்ட நிலம் போல் இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியாகின்ற கமலின் புருவங்களின் உயருதலும், இறுக்கமாகின்ற உதடுகளும், கண்ணீர் கொப்பளிக்கின்ற கண்களும், 'இப்படியாகி விட்டதே' என்ற சுயபரிதாபத்தில் தோய்கின்ற முக உணர்வுகளும், அற்புதம்.
  • எழுத்துக்கள் தெரியாமல், 'தெரியவில்லை' என்று மருத்துவரிடம் தலையசைப்பதும், கண்ணாடி போட்டபின் எழுத்துக்கள் தெரியும் போது, அந்த ஆனந்தத்தில், லேசாகத் தோள்கள் உயர்த்தியும், மகிழ்வில் அதிர்கின்ற தலையும், கண்கள் வழி வழிகின்ற கண்ணீரும்..!
  • உணவு நேரத்தில், சிஸ்டர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கையில், கம்யூனிஸ்டான, கமல், அவ்வாறு செய்யாமல், அவர்களது அன்புக்கு நெகிழ்ந்து, கண்ணீர் பிரார்த்தனை செய்வதும் படத்தின் தலைப்பை ஞாபகப்படுத்தும்.

அடுத்த காட்சியில் :

  • வாழ்வின் சுகபோகங்களை மட்டுமே கண்டறிந்து வந்த மாதவன், எமோஷனல் சீன்களை எல்லாம் பார்த்திராத அவர், வழியில் சந்திக்கும் ஏதோ ஒரு பையன் மரணத்திற்குக் கலங்குவதும், அவனது பெற்றோர், மாதவன் தான் இரத்தம் கொடுத்தார் என்று அறிந்ததும், அவரது காலில் விழுகையில், அதிர்வுறும் அவரது உடல். மரணத்தின் வாயிலுக்கே சென்று மீண்டு வந்த கமல், இதுவும் வாழ்வின் அங்கம் தான் என்பது போல் அதிக உணர்வற்று நிற்பதும்..!

அடுத்த காட்சியில் :

  • தன்னைக் கொல்லவரும் சந்தான பாரதியைத் தான் 'பொழச்சுப் போங்க' என்று சொல்கையில், ஏற்படுகின்ற முரணை நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கிறார் கமல். அட்டகாசம்.
  • கமலைக் கொன்று விட்டதாகக் கூறியதும், நாசர் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று கடவுளை நினைத்துக் கொள்ளும்போது, சந்தானபாரதி 'சட்'டென்று திரும்பி அவரைப் பார்க்கும் காட்சி, அவரது முகத்தில் தெரிகின்ற தவிப்பும், குற்றவுணர்வும்.

இப்பாடல் ஒலிக்கும் நேரங்களில் எல்லாம் பெய்கின்ற மழை, வீசுகின்ற காற்று, மெதுவான நடை எல்லாம் பாடலுக்கும், கதைக்களத்திற்குள் தாமும் ஒரு கதாபாத்திரமாக மாறி விடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வித்யாசாகர் என்ற இசைஞரின் உள்ளுக்குள் பொதிந்து கிடக்கும் மெலோடி என்ற புதையலின் ஒரு மணியாகக் கிளம்பி ஒளிக்கீற்றாய் வீசுகின்ற இசை.

தம்மை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த நாயை (சங்கு) - தம்மைப் போல ஊனமடைந்த நாயை - தாம் போகும் இடமெல்லாம் கூட்டிச் செல்லுகின்ற இறுதிக் காட்சி, 'எதிரிகளிடமும் அன்பு காட்டுங்கள்' என்ற மேன்மொழியை நினைவூட்டுகின்றது.

தலைப்பையும் நினைவுபடுத்துகின்றது.

உங்களுக்காக மற்றுமொரு நல்ல காட்சி :





இப்படி ஒரு படம் இயக்கியது திரு. சுந்தர்.சி என்பதை நம்புவது மிகக் கடினம், அவரது முந்தைய, பிந்தைய படைப்புகளைக் காண்கையில். யார் இயக்கி இருந்திருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகவே இருக்கட்டும்.

பெரும்பாலான நல்ல படைப்புகளை அதன் காலத்தில் மக்கள் மதித்ததில்லை என்ற சரித்திரம் காட்டுகின்ற உண்மையை, இப்படம் வெளிவந்த போது நன்றாக ஓடாதது மெய்ப்பிக்கிறது.

இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து நினைவு கூர்கையில் இப்படத்தின் அவசியத்தையும், இது போதிக்கின்ற கருத்துக்களின் அவசர அவசியமும் ,'அன்பே சிவத்தை' அப்போது உறுதிப்படுத்தும்.

அன்பு தான் சிவம்.... வேறென்ன...?

1 comment:

Ambasoft said...

திருமூலரின் திருமந்திரத்தை தவறாக மக்களிடம் காட்டும் ஒரு முயற்சி தான் "அன்பே சிவம்" திரைப்படம்