உன் வார்த்தைகளின் வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்ட மனம், உன் மெளனத்தின் எடை தாங்க முடியாமல் தவிக்கிறது. அந்த கனத்தையெல்லாம் கரைத்து ஊற்றிய மையில் எழுதிய கவிதைகளின் எழுத்துக்கள், நான் இறக்கி வைத்த எடை தாளாமல் வளைந்தும், நெளிந்தும் கிடக்கின்றன.
சொல்லாமல் நீ நகர்ந்து சென்று விட்ட பின்பு, உனது ' நாளை பார்க்கலாம் ' என்ற சொல்லுக்காக, என் மனதில் நான் ஒதுக்கி வைத்த உள்ளம், காலியான வெறும் பள்ளமாக உள்ளது.
ஆயிரமாயிரம் கரங்களால் கரை தழுவும் நுரைகளால் ஆர்ப்பரிக்கும் கடலும் அந்த மெளனத்தை நிரப்ப முடியாமல் பின்வாங்கிச் செல்கிறது.
வழக்கமாய் நீ பிரிந்து செல்கையில், உடையிலிருந்து உதிரும் மணற்துளிகளை தாங்கி முத்தமிடுவதை, திரும்பிப் பார்த்துச் சிரித்துச் செல்வாய். இன்று நீ உதறாத மணற்துகள்களுக்காக, என் உதடுகள் உலர்ந்து கிடப்பதை, திரும்பிப் பார்க்காமலேயே அறிவாயா?
நீ சென்று விட்டபின்பு, கடற்கரை மணலில் நீ பதித்த பாதச் சுவடுகள், ஐந்து புள்ளிக் கோலங்களாய் மின்னுகின்றன.
அவற்றின் ஓரமாகவே என் மனமும் சென்று கொண்டிருக்கிறது.....
2 comments:
அழகாக எழுதுகிறீர்கள்.
நன்றி அம்மா..
Post a Comment