நெடுங்கனல் பொழிந்து கொண்டிருந்த நேரம். வெம்மை நிரம்பிய காற்று வீசாதிருக்கும் மதியப் பொழுது. கருந்தார்ச் சாலையின் மீது நடனமிடும் கானல் நீர்த் துளிகள்.
ஆங்காங்கே வழிப்புளிய மர இலைகளின் விளிம்புகளைப் பொசுக்கி வழிகின்ற வெயிலில் நனைந்து கொண்டே நடக்கிறேன்.
வெயிலில் கருகிய தூரத்து மொட்டை மரங்களின் மேலிருந்து கசியும் உலர் நாற்றமும், சாலையோரப் பழங்காலப் பாழ் கோயிலின் இருள் நிறை உயர் சுவர்களின் மேல் முனைகளில் இருந்து சுரக்கின்ற வெளவால்களின் அசுத்த நெடியும், அந்த வறட்டு வெப்பக் காற்றுக்கு ஒரு வர்ணத்தைப் பூசின.
நிழல் தேடி அலைகையில் நீள்கின்ற மதியப் பொழுதுகளின் மந்த வெயில் படிந்த சாலையோர மணலில் புதையப் புதைய நடக்கிறேன்.
மதிய நேரங்களின் நகராக் கணங்களை விழுங்கியவாறு விரைந்து வந்து கொண்டிருந்தது, மாலை நேரம்.
மஞ்சள் பருக்களைப் போல் நகரப் பெண்ணின் முகமெங்கும் புள்ளிகளாயின் தெரு விளக்குகள். அப்புள்ளிகளைச் சுற்றியவாறு கரும்புகையுமிழ் வாகனங்கள் போடும் கோலங்கள், அலங்கோலங்கள்.
பெருவாய் திறந்து வரும் கரும்பூதம் போல் வரும் இருள் போர்வையால் போர்த்திய பின்னும், ஆங்காங்கே மினுமினுத்துக் கொண்டிருக்கும், நெடிதுயர்ந்த மின் கம்பத்தின் உச்சிப் புள்ளிகளும், பனி பொழியும் அகண்ட வெளியின் கருந்துணியில் பதித்த வைரத்துளிகளும்..!
No comments:
Post a Comment