வெளியே தூறலாய் மழை பெய்து கொண்டிருக்கிறது. மெதுவாய் வீசிக் கொண்டிருக்கும் பனிக்காற்றின் ஈரம் மெல்லத் தடவிச் செல்கிறது. என் கண்களில் இருந்து உறக்கத்தைக் களவாடிச் சென்று விட்டது. தொலைந்து விட்ட என் இதயத்தைத் தேடித் தேடி, அலுத்துப் போன களைப்பில் மெதுவாய்ப் படுக்கையில் சாய்கிறேன்.
ஏதோவொன்று அழுத்திக் கொண்டிருக்கும் கனமான, மனதில், வரிகள் வாசகங்களாய் வடிவாகிக் கொள்கின்றன. நீல எழுத்தாணி வழியே வரும் எழுத்துக்கள் சொல்ல முடியாத என் துயரையெல்லாம் சுமந்து கிடக்கின்றன. இலேசாக வியர்வை பூக்கின்ற என் நெற்றியின் மேலெல்லாம் உன் முகவரிக் கோடுகள்.
ஓர் உஷ்ணப் பெருமூச்சாய் வீசுகின்ற அனல் காற்றின் அணுக்களில் எல்லாம், அழகாய் நீ அமர்ந்திருக்கின்றாய். உன்னோடு கதைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டு, நான் உறங்கா இராப் பொழுதுகளிலெல்லாம் உன் நினைவுகளோடு மனமே, கதை!
பார்க்கும் போது கண்கள் வழி என் அன்பு கசிந்திடுமோ என்று காண மறுக்கிறேன்.
பேசும் போது வார்த்தைகள் வழி என் அன்பு வழிந்து விடுமோ என்று விலகி நடக்கிறேன்.
கண்களைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை என்பதால், என் கண்களை மூடும் போதெல்லாம், உன் கண்கள் திறக்கக் காண்கிறேன்.
என் வெள்ளை, வெள்ள அன்பே பிரிக்குமோ என்று அஞ்சுகிறேன், உள் நெருப்பு உன்னையும் தீய்த்திடுமோ என்றும்!
புதையல் காக்கும் பூதம் போல் உனைக் காத்து நிற்கிறேன், என் மெளன விரதத்தின் பிரசவ வலியைத் தாங்கிக் கொண்டும்!
என் மெளனத்தின் பூட்டுக்களைத் தயவித்துத் திறந்து விடாதே!
வார்த்தை அருவி பொங்கிப் பெருகுகையில், அதைத் தாங்கிக் கொள்ள உன்னால் இயலாது...
என்னாலும்...!
1 comment:
http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html
Post a Comment