Saturday, May 12, 2007

உன் பாத ரசத் துளிகள்.


ழ் உறக்கத்தை விழிகளால் உறிஞ்சி விட்டு, கனவுகளை மட்டும் கண்களுக்குள் விட்டு வைத்தாய். ஒரு பேரரசி இடும் கட்டளைகளுக்கு, தாள் பணிந்து முத்தமிடும் அடிமை போல், காத்திருகின்ற நேரத்தில், கடந்து செல்கையில் தீண்டிச் செல்லும் ஆடை நுனிக்காகவே என் பாதச்சுவடுகள், உன் பாதைகளில் பதித்திருக்கிறேன். உன் கருங்கூந்தல் விரவின முன்னிரவுப் பொழுதில், வெள்ளைப் பந்தாய் நிலவு உருண்டோடும் வழியில், அமர்ந்திருக்கிறேன், ஒரு தேவதை போல் வருவாய் என!

கைகளில் சுமந்த பாதரசத் துளிகள் போல், உன்னைக் கைகளில் சுமக்கத் தடுமாறுகிறேன். என் விரலிடுக்குகள் வழி வழிந்து போகின்ற துளிகளாய், என் விழித்துளிகள் வழி வழிகின்ற உன் உருவத்தைச் சேகரித்து வைக்கிறேன்.

உன் உதறிப் போன வார்த்தைகளை நிரப்பி வைத்த என் இரைப்பை, வற்றிப் போய் குறைப்பையானது.

ஐந்து எருதுகளிடம் சிக்கிக் கொண்ட சிங்கமாய் உன் ஐம்புலன்களில் சிகிக் கொள்கிறேன்.

வனதேவதையாக ஒவ்வொரு முறையும் வருவாய் எனில், என் கோடரிகளை குளத்தில் எறிந்து விட்டு, கரையிலேயே அமர்ந்திருக்கும் மரவெட்டியாகிறேன்.

மரங்கொத்திப் பறவையாய் இன்றி, என் மனங்கொத்திக் குயிலாய் இருப்பதால், என் இதயத்தில் நான்கு அறைத்துளைகள்.

வளையல்களிலும், கொலுசுகளிலும் நிரப்பி வைத்த உன் வார்த்தைகளுடன் தான், உன் மெளன விரத நாட்களில், நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

(சிந்தா நதி - கவிதைப் போட்டிக்காக.)