Tuesday, May 08, 2007

பூ - காதல் - பேரருவி. (A)



ரவின் இடுக்குகளிலிருந்து ஆர்ப்பரிக்கின்ற சில்வண்டுகளின் சிரிசிரிப்பைப் போல் தெறிக்கும் சாரற்துளிகள்.

நுரை சுழித்து ஓடும் வெண் ஆற்றின் போக்கிற்கே போக்குக் காட்டி விட்டுப் பாய்கின்ற நீர்ப் பாம்பின் வளைவுகளைப் போல், நெளிந்து ஓடுகின்ற மலைச் சாலைகளின் வழியே பயணித்து, நாம் வந்திருக்கும் பேரருவி, தனிமையின் அடுக்குகளில் நம் மனதில் புகுந்த கள்ளம் போல் பொழிகின்றது.

இளமாலை வெயிலில் பூப்படைந்து, பொன்னிறத்தோடு களித்து, பின் களைத்து, மென் இதழ்களை அவிழ்த்து உதிர்கின்ற பூக்களாய், தம்மோடு தாமாய்ப் பின்னிப் பிணைந்து இருக்கும் நூலாடைகள் நழுவி, நம்மைப் பிரிகின்றன.

குளிர்க் காற்று குளிப்பாட்டி, நிலா நனைந்த ஓர் முன்னிரவின் பொழுதில், அலையாடிய குளத்தில் இறங்கத் தயங்கிய நாம், வானம் விலகி, ஊற்றுகின்ற பால் அருவியில், இரு குழந்தைகளாய்க் குதிக்கிறோம்.

குழலின் நவதுவாரங்களில் புகுந்து இராகம் எழுப்பும் பூங்காற்றைப் போல், நம் மேனியெங்கும் மோதிப் பரவசமூட்டும் நுரை நீர், வெற்றுத்தாளில் பல வண்ணக் கலவைகளால் ஓவியம் வரைவது போல், நம்முள் வெவ்வேறு உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது.

கருமேகங்கள் நடக்கையில் மறைக்கின்ற வெண்மதியைப் போல், உன் நிலவுகளை அவ்வப்போது காண்பித்தும், கண்ணுக்கு மறைத்தும் விளையாடுகின்றது, வெண் நீர்.

கருங்காட்டில் பெய்கின்ற கருக்கல் மழையின் துளிகள் அடிவாரம் வந்து சேர்வது போல், உன் கூந்தலை நனைக்கும் நீர்த்துளிகள் நிறைந்த ஈரப்பிரதேசத்தின் வழியெங்கும் என் விரல்கள் தடம் பதித்துச் செல்கின்றன.

கற்பக் காலமாய் நீர் விழுந்து நிரம்பிய இப்பள்ளம், விழுங்கியிருக்கும் வழுவழுப்பான, கற்களின் மேல் நிற்க முடியாமல், தடுமாறி ஒருவர் மேல் ஒருவர் விழும் சமயங்களில் எல்லாம், ஏதோவொன்று எழுகின்றது நமக்குள்..!

பேய் இரைச்சலாய் வெளியே இரையும் பேரருவியையும் மீறி நமக்குள் இரைகின்ற ஒலி நம் விரல்களைப் பின்னச் செய்கின்றது.

உயிர்ப் பரிமாற்றம் செய்யும் இறுதி நொடியை நோக்கி நடக்கச் செய்கின்ற பயணத்தின் முதற்படியாக, முத்தத்தில் நாம் துவக்குகின்ற காலம், துளித் துளியாய் நகர்கின்றதெனினும், சில்லென்று உறையச் செய்யும், குளிர்ப் பேரருவியின் அணைப்பில், யுகம் யுகமாய் இனிக்கின்றது, இந்த நிலை...!

(சிந்தா நதி - கவிதைப் போட்டிக்காக.)