Sunday, May 06, 2007

என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.



மிகச் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு எல்லாம் கோபித்துக் கொள்வது, அப்செட் ஆவது, வாழ்க்கை மேலேயே எரிச்சல் கொள்வது, வெறுத்து போய் ' ப்ச்.. என்ன சார் வாழ்க்கை இது ' என்று வெட்டி வேதாந்தம் பேசுவது என்றெல்லாம் திரிந்து கொண்டிருக்க நேரும் கணங்களில் கேட்க வேண்டிய பாடல் இது.

இந்தப் பாட்டில் வரும் குழந்தைகளை விட என்ன விதத்தில் குறைந்து விட்டோம் நாம்? எங்கேயோ படித்த ஒரு வரி.

' எதற்காக கவலைப்படுகிறீர்கள்? உங்களால் முடிக்க முடிகின்ற சிறு காரியமெனில் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்? உங்களால் முடிக்க முடியாத மிகப் பெரும் காரியம் எனில் அதற்காகக் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன? நீங்கள் செய்யப் போகும் வேலை மனித சமுதாயத்தில் எத்தனை பெரிய பங்காற்றப் போகின்றது என்று யோசித்துக் கவலைப்படுங்கள் '.

நாம் செய்கின்ற வேலைகள் அத்தகைய category-ல் வருகிறதா என்று அவரவரே யோசித்துக் கொள்ள வேண்டியது தான்.

சில விஷயங்களை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடிவதேயில்லை. அவற்றுள் மிக, மிக முக்கியமானது, உணவையோ, உணவுப் பொருட்களையோ வீணாக்குவது.

நாம் உண்ணுகின்ற ஒவ்வொரு பருக்கையும் எப்படி நம் கைக்கு வந்து சேர்கின்றது என்று என்றாவது நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
விவசாயி விதை நெல்லைத் தூவுவதில் பாறைகளில் விழாமல், நீரில் அழுகாமல், வெப்பத்தில் கருகாமல் பிழைப்பதில் துவங்குகிறது ஒரு நெல்லின் பயணம். உரங்களில் வளர வேண்டும். ஆடு, மாடு மேயாமல் வளர வேண்டும். பருவ மழை பொய்க்காமல் பொழிய வேண்டும். பக்கத்து மாநிலம் தண்ணீர் தர வேண்டும். பக்கத்து வயற்காரன் பகையால் எரிக்காமல் இருக்க வேண்டும். இவ்வளவையும் தாண்டி வளர வேண்டும்.

அறுவடையில் கீழே, மேலே சிந்தி வீணாகாமல் இருக்க வேண்டும். கதிரடிக்கையில் காற்றால் எறியப்படாமல் இருக்க வேண்டும். அளந்து கொட்டப்படுகையில் கீழே சிந்தாமல் சரியாக மூட்டையில் சேர வேண்டும். ரைஸ் மில்லில் பிரிக்கப்படுகையில் ஆங்காங்கே தெறிக்காமல் சேர வேண்டும். மூட்டை கட்டப்படும் போது வீணாகாமல் இருக்க வேண்டும்.

மழை பெய்து புழுத்துப் போகாமல் இருக்க வேண்டும். ரேசன் கடையிலோ, மளிகைக் கடையிலோ அள்ளித்தரப்படும் போது, வீட்டுக்குக் கொண்டு வரும் போது, பாத்திரத்தில் போடும் போது, அரிசி களையும் போது, அரிசி வெந்து தட்டில் போடும் போது வரை சிந்தாமல் இருக்க வேண்டும்.
இவ்வளவையும் தாண்டி நமக்காக வாய் வரை வந்து விட்ட அரிசியை எத்தனை பேர் மதித்திருக்கிறோம்? எடுத்த உணவில் பாதியை அப்படியே கேண்டீன் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள், இதை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்.



இயற்கை நமக்காகப் பொத்திப் பொத்தி வளர்த்துத் தந்த அரிசியை உபயோகப் படுத்தாமல் இருப்பதும், பெற்றெடுத்த தாய் ஆசையோடு பால் கொடுக்க வருகையில், அவள் நெஞ்சில் மிதிப்பதும் ஒன்றுதான் என்பது என் எண்ணம்.

விருந்துக்குப் போகும் போதோ, மதியம் உண்ணும் போதோ, என் தட்டு உண்ணும் முன்பும், உண்ட பின்பும் வித்தியாசம் காண முடியாது என்று பலர் கூறிச் சிரிக்கையில் நான் நினைத்து வருந்துவதுண்டு. ' இது கூட இல்லாமல் காலம் கழிந்ததுண்டு. நான் அறிவேன் இந்த ஒவ்வொரு பருக்கையின் மதிப்பு. இவர்கள் அறியவில்லை. அறியும் கட்டாயம் வரவும் வேண்டாம். இப்போதிருக்கும் நல்ல நிலைமையிலேயே இவர்கள் உணர வேண்டுமே, கடவுளே..! ' என்று.

தயவு செய்து நீங்களும் ஒவ்வொரு பருக்கைக்கும் மரியாதை தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

எப்படியோ இருந்த வாழ்வை இப்போது ஒரு நிலைக்கு கொண்டு வந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.



Get Your Own Music Player at Music Plugin

2 comments:

Balamurali said...

நல்ல சிந்தனைக்குரிய கட்டுரை!
அருமையான பாடல்
"கடவுள் உள்ளமே..!"

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி பாலமுரளி ஸார்...