Saturday, May 19, 2007

முகேஷ் குமாரும் சனிக்கிழமை மாலைகளும்..!


(ஆஷா போன்ஸ்லேக்கும், எனக்கும் மிக மிகப் பிடித்த இப்பாடல், அற்புதமான வரிகளால் பின்னப்பட்டுள்ளது. படம் : The Great Gambler)

ஹிந்தி எனக்கு எப்படி அறிமுகமாயிற்று என்று நினைக்கிறேன்.

ஐந்தாண்டுத் திட்டம் போல், ஒவ்வோர் ஐந்தாண்டுக்கு மட்டுமே, ஒரு தேர்வு என்று முறை வைத்து எழுதினதில், இரண்டு தேர்வுகள் மட்டுமே முடிக்க முடிந்தது. 10-வதற்குப் பிறகு, ஹிந்தி தொடர்பே இல்லாமல் போன பின்னும், இன்னும் மொழியின் வார்த்தைகள் அர்த்தம் புரிகின்றது; பாடல்கள் அர்த்தம் கொள்ள முடிகின்றது; அட, எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளவும், எழுதவும் முடிகின்றது என்றால், அதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

தொடர்ச்சியான உபயோகம் இல்லாமலே எப்படி, இப்படி?

காரணம், தொடர்பு விட்டுப் போகாத அளவுக்கு ஒட்டி வந்த இந்தி திரைப்படங்களும், பாடல்களுமே என்று தான் சொல்ல வேண்டும்.

10-வது வரை எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. அதனால் வாராவாரம், அருகில் உள்ள ஊரில் இருக்கும் எங்கள் பெரியம்மா வீட்டுக்குப் போய் விடுவோம், நானும் எங்கள் தம்பியும். அவன் அங்கு செல்லம் வேறு!

அந்தக் காலங்கள், பொற்காலங்கள்...!

ஒண்ணே ஒண்ணே என்பது போல், தூர்தர்ஷன் மட்டுமே, அப்போது!

சனிக்கிழமை மாலை 5 மணி சுமாருக்கு இந்திப் படம் போடுவார்கள். மசாலப் பொரியோடும், சூடான இராகிக் கஞ்சியோடும், கழுத்தின் கீழ் இரண்டு தலையணைகள் வைத்து, சாப்பிட்டுக் கொண்டே, படம் பார்ப்பது.. ஆனந்தம்!

சசிகபூர், ரிஷிகபூர், திலீப் குமார், அசோக் குமார், ரேகா, ஹேம மாலினி, அம்ஜத்கான், தர்மேந்திரா, அமிதாப், தெரிந்தும், தெரியாத மொழி, வித்தியாசமான இசை, (நாளை விடுமுறை என்ற இனிய நினைவில் இருக்கும்) சனிக்கிழமை மாலை.... ஆஹா, வேறு ஓர் உலகத்திற்கே அழைத்துச் சென்று விடுபவை, அந்தப் பழைய இந்தித் திரைப்படங்கள்.

அக்காலத்தில் நான் பார்த்த எல்லா இந்தித் திரைப்படங்களில் சில காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

நாயகன்/ நாயகியின் அம்மா கண்டிப்பாக விதவையாகத் தான் இருப்பார்கள். நாயகனின் அப்பாவை வில்லன்கள் தான் கொன்றிருப்பார்கள். வெள்ளைப் புடவை கட்டிய தாய் வீட்டில், ஒரு கிருஷ்ணன் விக்ரகம், ஒரு சின்னக் கோயில் போல் இருக்கும் (சாலகிராமம்?). தாய் அங்கு தான் சோகப் பாட்டோ, வேண்டுதல் பாட்டோ பாடுவார்கள்.

நாயகன் கண்டிப்பாக மீசை வைத்திருக்கக் கூடாது. நாயகிக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்காது.

THE END என்பது 'சினிமாஸ்கோப்' முறையில், ஆரம்பம் மற்றும் இறுதியில் விரிந்தும், இடையில் குறுகியும் இருக்கும்.

ஆனால் எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் அருமையான சில பாடல்கள். அதில் ஒன்றைத் தான், மேலே பார்க்கிறீர்கள்.

'காபாரதம்', 'இராமாயணம்' போன்ற அக்காலத்து மெகா சீரியல்களில் இந்தி மேலும் பழக்கமானது. இத்தொடர்கள் முழுதும் இந்தியில் இருப்பதால், அதன் தமிழ்ப் படுத்திய வசனங்களை, தினமலர் ஞாயிறு தோறும் வெளியிடும். அப்படி ஒப்பிட்டுப் பார்த்ததில், மேலும் கொஞ்சம் தெரிந்தது. (இந்தத் தொடர்களுக்கு வசனங்கள் புரிய வேண்டுமா என்ன? கதை போகும் போக்கு, காலங்காலமாய் நாம் அறிந்தது தானே. வசனமே புரியாமல், வெறும் கதாபாத்திரங்களின் போக்கை வைத்து, இவர் இது தான் சொல்கிறார் என்று உணர்ந்து கொண்டது, இப்போது, மீட்டிங்குகளில், அரைத் தூக்கத்தில், மேலாளர் கூறுவது ஒன்றும் காதில் விழாமல், அவர் இது தான் சொல்லக் கூடும் என்று உணர்வதற்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது).

சித்ரஹார், சித்ரமாலா என்று பாடல் தொடர்கள், மந்தமான ஞாயிறு மதியத்தை நிரப்பும் மாநில மொழித் திரைப்படங்கள் என்று நாங்கள் தொலைக்காட்சி வாங்கிய புதிதில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

'சாந்தி -ஏக் கர் கா கஹானி', 'சக்திமான்', பேர் மறந்து போன வியாழக் கிழமை தோறும் வரும் ஒரு தொடர் (நல்ல தீம் பாடல் அதில்), மர்மமான தொடர்கள் என்று சில காலம் போனது. ஆனால், இவற்றையும் தமிழ்ப் 'படுத்தி' விட்டதில், தொலைந்தது இந்திப் பழக்கம்.

தூர்தர்ஷனோடு என் பழக்கத்தைப் பற்றி தனியே ஒரு பதிவு தான் இட வேண்டும். அவ்வளவு கதை இருக்கிறது அதில்!

இப்போது 'ஆஜ் தக்' ஒன்றைத் தொடர்ந்து பார்ப்பதில் மட்டுமே, இந்தித் தொடர்பு இருக்கிறது. அதுவும் 'கோலங்கள்', 'அரசி', 'கே.டி.வி. படங்கள்' வழி விட்டால்.

ப்போதும் அவ்வப்போது 'இராஷ்டிரபாஷா' முயற்சி செய்து பார்க்கலாமா என்று தோன்றுகின்றது.

பக்குவப்பட்ட நடைமுறை மனது, 'இனிமேல் இந்தி படித்து என்ன ஆகப் போகின்றது? தில்லிக்கா வேலைக்குப் போகப் போகிறாய். சென்னை அல்லது பெண்களூரு மட்டுமே. தமிழ் தெரிந்தால், பெண்களூருவில் பிழைத்துக் கொள்ளலாமே, அடி விழ ஆரம்பிக்காத வரை!' என்கின்றது.

ஆனால் ஆழ்மனதோ, ' வெறும் காசு பணம் தருகின்ற வேலை வாய்ப்புக்காக மட்டுமா, அன்று இந்தி படித்தாய்?' என்று கேட்கின்றது.

மொழி படித்து ஒன்றும் பெரிய இலக்கியம் படைக்கப் போவதில்லை என்ற போதினும், ஒரு அந்நிய மொழி தெரிந்திருப்பது, ஒரு கூடுதல் அழகைத் தருகின்றது என்பது என்னைப் பொறுத்த வரை உண்மை. ஒரு நிறைவை ஏற்படுத்தும்.

சில கதைகளைப் படிக்கையில், சில பாடல்களைக் கேட்கையில் அதன் மெய்யான(Original) மொழியில் அனுபவிப்பதில் தான் உண்மையான சுகம் உள்ளது.

அதுவும் நமது தேசிய மொழியை முழுதும் அறியாமல் இருப்பது, அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருக்கின்றது.

இந்தப் பாடலைக் கேட்டு நான் என்னை சமாதானப் படுத்திக் கொள்வது போல், நீங்களும் அமைதியுறுங்கள்.Get Your Own Music Player at Music Plugin


இன்றும் ஒரு சனிக்கிழமை இரவு என்பது இப்போது தான் நினைவுக்கு வருகின்றது. ஆஹா..!

2 comments:

PPattian said...

//நாயகன் கண்டிப்பாக மீசை வைத்திருக்கக் கூடாது. நாயகிக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்காது.//

:)))))))

அப்புறம், கதையை எப்போதுமே இரண்டாக பிரிக்கலாம். பீஸ் சால் பெஹெலே & பீஸ் சால் பாத். அந்த இருபது வருட இடைவெளி முக்கியம்..

ರಾ.ವಸನ್ತ ಕುಮಾರ್. இரா.வசந்த குமார். रा. वसन्त कुमार्. said...

ppattian ஸார்.. சரியாகச் சொன்னீர்கள்... இந்த ப்ளாஷ்பேக் கதைகள் அனைத்து மொழிப் படங்களிலும் அப்போது வியாபித்திருந்தது அல்லவா..?