
இரவின் நதிக்கரையில் நெடும்பொழுது காத்திருந்தேன். இருளின் போர்வையும் தாண்டி நதியின் மேனியெங்கும் முத்தமிடும் பிரபஞ்சத்தின் நீலநிறம் போல், நம் பிரிவின் நீளத்தையும் மீறி, உன் மீது படிகின்றது, நம் உல்லாச நேரங்களின் ஞாபகங்கள்..!
உத்தர வானெங்கும் மினுமினுத்துக் கொண்டிருக்கும் மின்மினிகள், நம் நிழல்களையும் தீண்டாமல் மெளனமாய் நகர்ந்து சென்ற ஈரப் பூச்சிகள், நுரை சிந்தி அலை தூவும் கரைகள், சிலுசிலுப்பாய் வீசும் தென்றல் தனிமையில் அமர்ந்திருக்கும் என்னைக் கண்டு அனுதாபம் தெரிவித்துப் பின் போயின..!
இரவின் நீள ஆடையில் நூலாய்ப் பின்னிக் கொண்டிருந்த நம்மை அவிழ்த்து எறிந்தது, விதியின் வலுக் கரங்கள். பாலாடையில் ஓராடையாயும், நீரோடையில் நுரையாடையாயும் நீந்திக் கொன்டிருந்த நம்மை பிரித்துப் போட்டது, வெயிலின் வறண்ட கரங்கள்!
நாணல் கரைகளில் நனைந்திருக்கும் நம் கால்களை உரசிச் சென்ற ஈரமணல் உலர்ந்து போனது, என் அனல் மூச்சோடு!
ஒரு நாழிகை போல் நகராமல் நகர்ந்து செல்கின்றது, நொடி முட்களின் மேல் நடக்கின்ற நம் வாழ்க்கைப் பயணம்...!
கணினி ஓவியப் போட்டி.
No comments:
Post a Comment