Saturday, April 05, 2008

ஸ்ரீரங்கம்.



ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!

ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் மங்களம் செய்யடி!

ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்நதம் சொல்லடி!

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி
தென்றல் போல் ஆடடி!

மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி! (ஸ்ரீரங்க)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்!
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்!

செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்!

அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்!

அம்மாடி என்ன சொல்லுவேன்
கோயில் கோபுரம் ஆயிரம்!

தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்! (ஸ்ரீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும்!

கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்!

நீர்வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி!

ஊர்வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வ லோகமே தானடி!

வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி! (ஸ்ரீரங்க)



ப்போதும் யாராவது புதிதாக நண்பர்கள் அறிமுகமாகும் போது, பெயர் கேட்ட பிறகு, நீங்கள் எந்த ஊர் என்று தான் கேட்பேன். எல்லோர்க்கும் சொந்த ஊர் பேரைச் சொல்லுவதற்குள், ஒரு மேப்பே போட்டு விடுவார்கள். கல்லூரியில் ஒரு நண்பர் சொல்லும் போது, முதலில் சேலம் என்றார். சேலம் தெரியும் என்றேன். அப்போது நாமக்கல் என்றார். 'தெரியும்'. 'அப்படியா, பரமத்தி வேலூர்..?'. 'தெரியும்..!' . 'அப்ப கிட்டக்க, கபிலர் மலை தெரியுமா?' . 'தெரியாது..!' 'அப்ப அது தான் என் ஊர்!'

இப்படி பொதுவாக தெரியும் என்று சொல்லுவதற்கு காரணம் பல ஊர் சுற்றி இருந்த முன் அனுபவங்கள் இருந்தமையால்!

ஒன்பதாம் வகுப்பு நுழைவதற்கு முன் வருடா வருடம் ஏதேனும் உறவினர் வீட்டுக்கு சென்று கொளுத்தும் வெயிலில் பொழுது ஓட்டுவது என்று ஆனது.

அதிலும் முக்கியமாக நான் திருச்சி சென்ற பொழுதுகளைப் பற்றி பேசலாம், இப்போது!

திருச்சியில் அத்தை வீடு இருக்கின்றது. வருடா வருடம் அங்கு வெயில் காலங்களில் சென்று வருவது நடந்து வந்திருக்கின்றது.

சத்திரம் பேருந்து நிலையம் அல்லது அண்ணா சிலை நிறுத்தத்தில் இறங்கி, குறுகலும், நெடுகலுமான சந்து, பொந்துகளில் நுழைந்து வெளிப்பட்டு தான் அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஒரு சிறு ஊரில் இருந்து மாநகரிற்கு செல்லும் பையனின் மலைப்பும், திகைப்பும், வியப்பும் எனக்கும் கிடைத்தன.

கட்டம் கட்டமாக செதுக்கப்பட்ட தரைகளில் விரவி இருந்த தெருக்கள், எங்கெங்கு காணினும் படுத்தும், உட்கார்ந்தும், நடந்தும், சுவரை உரசிக் கொண்டும், போஸ்டர்களைத் தின்று கொண்டும், சாணி இட்டும் இருக்கும் கோமாதாக்கள், அகன்ற திரையின் குளிர்த் திரையரங்குகள், தோலே கொப்பளித்து, தார்ச் சாலைகளின் கருப்புக் குழம்புகள் தெறிக்கச் செய்யும் கடும் வெயிலின் கோர தாண்டவத்தால் கொதிக்கும் கந்தக பூமியின் வெயில்....

காலையில் ஒருமுறை மலைக்கோட்டை சென்று விடுவேன்.

வீட்டிலிருந்து கிளம்பி சீதாலக்ஷ்மி - இராமசாமி வளைவில் நுழைந்து தெப்பக்குளம் வந்து, இடது புறம் கட் செய்து, சாரதாஸை கடந்தால் மலைக்கோட்டையின் பிரதான வாசல் வரும். காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு வரலாம். இல்லாவிடில், நடுவில் ஒரு பிள்ளையார் கோயிலைக் கடக்கும் போது மாட்டிக் கொள்வோம். மேலே சென்றால், கார் செல்லும் அளவிற்கு ஒரு ரோடு போகின்றது. அதற்கு வேறு வழியில் செல்ல வேண்டும்.

படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டே கடக்க, சித்தர் கோயில் வருகின்றது. அதன் எதிரில் சிறிய ஜன்னல் வைத்திருக்கின்றது. அதில் எட்டிப் பார்க்க தங்கக் கோபுரமும், தெப்பக்குளத்தின் அந்தப்பக்கம் உள்ள தேவாலயத்தின் கோபுரமும் தெரியும். இன்னும் மேலே ஏறிப் போய், இடது கட் அடித்து, மேலே சென்று வலப்புறம் திரும்பும் முன், அஷ்டலக்ஷ்மி சிலைகள் உள்ளன.

பின் கொஞ்சம் செங்குத்தான படிக்கட்டுகள் வழிச் செல்ல இரண்டு வழிகள் வருகின்றன. வலது புறம் சென்றால் உச்சிப் பிள்ளையார் இருக்கிறார். இடது புறம் சென்றால் பெரிய தாயுமானவர் கோயில் வரும். முதலில் பிள்ளையாரைப் பார்ப்போம். அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு வலது புறம் திரும்புகிறோம்.

இது வரை மலையைக் குடைந்து அமைத்த படிக்கட்டுகள் வழி சென்றதால், அடைத்து வைத்தாற் போல் இருந்திருக்கும். இப்போது வெட்டவெளி. காற்று சும்மா பிய்த்துக் கொண்டு போகின்றது. அதனால் ஆசுவாசமாக , மெதுவாக படிக்கட்டுகள் ஏறுகிறோம். வாட்டர் டேங்க் இருக்கிறது. குடித்துக் கொள்ளலாம்.அட, கூல்ட்ரிங்ஸ் கடை கூட இருக்கின்றது.ஹைஜீனிக் மக்கள் இங்கே கூல் வாட்டர் அடித்துக் கொள்ளலாம்.

உச்சிக் கோயிலுக்குச் செல்ல, சரியான படிக்கட்டுகள் என்ற வரையறைக்குள் வராத படிக்கட்டுகள் உள்ளன. அவை பாறைகளைச் செதுக்கி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இருபுறமும் அமைந்த கம்பிகளைப் பிடித்து மேலே ஏறுகிறோம். சிறுவர்கள் விடுவிடுவென ஓடுகிறார்கள். மேலே ஏறும் போதே வலது புறம் பார்க்க அகண்ட காவிரியில் நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது.

நாம் செல்கின்ற காலத்தைப் பொறுத்து, தமிழகத்தின் நல்ல நேரம், கெட்ட நேரத்தின் அளவுகளைப் பொறுத்து, ஆற்றில் பெருவெள்ளம் ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது கேரள வெண் பட்டாடையில் ஓரத்தில் மட்டும் மஞ்சள் ஜரிகை ஓடுவது போல், அகண்ட நதியின் ஓரத்தில் மட்டும் சாக்கடை போல் ஓடிக் கொண்டிருக்கலாம். அட, தண்ணீரே இல்லாமல் வெண்மணலாய் மட்டுமே கூட இருக்கலாம்.

நதியின் மறுகரையில் இராஜகோபுரம் கம்பீரமாய் நின்றிருக்க, பின் பல கோபுரங்கள் பளிச்சென்று தெரிய, ரங்கநாதர் ஆலயம் தெரிகின்றது. மாலை அங்கு போக வேண்டும் என்ற நினைவு வருகின்றது. இடது புறம் திரும்பிப் பார்க்க All India Radio,Tiruchirappalli-யின் டவர் தெரிகின்றது. (இதெல்லாம் நான் போயிருந்த போது. இப்போது 1008 செல்டவர்கள் வந்திருக்கலாம்.)

பிள்ளையார் இருக்கிறார். வணங்கி விட்டு, பிரகாரம் சுற்றுகிறோம். காற்று பலமாகத் தான் வீசுகிறது. இடதுபுறம் ரேடியோ டவரைத் தாண்டி பார்த்தால் மசூதியும், பச்சை வயற்காடுகள் பனிப் புகையின் ஊடாக தெரிகின்றது. பிள்ளையாருக்கு பின்புறமாக மேற்குத் திசையில் பார்க்க, தெப்பக்குளம், தேவாலயம், சத்திரம் பேருந்து நிலையம், தங்க கோபுரம் தொலைவின் மலைகள் தெரிகின்றன. வலது புறம் பார்க்க காவிரியும், ரங்கமும், ஆற்றைக் கடந்து வரும் பாலமும் தெரிகின்றன.

மீண்டும் வந்த வழியே இறங்கும் போது தான் கவனிக்கிறோம். மலையின் முகடுகளிலும், விளிம்புகளிலும் கருப்பாடுகள், ஆட்டுக் குட்டிகள் நின்று கொண்டிருப்பதை! எப்படி இந்த ஆடுகள் இவ்வளவு உயரத்திற்கு ஏறி இருக்க முடியும்? பயமாக இருக்காதோ..?

தாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் நுழைகிறோம். வழி பிரம்மாண்டமாய் தான் இருக்கின்றது. இடது புறம் பிள்ளையார். வலதுபுறம் சுப்ரமணியர் குடும்பத்துடன்! வழியில் நுழைந்து , இடது பக்கம் திரும்பி மேலேறி, செல்ல, தாயுமானவர் மேற்குத் திசை பார்த்து அமர்ந்து லிங்க ரூபத்தில் இருக்கிறார். தொழுது விட்டு பிரகாரம் சுற்றி வர, தங்க கோபுரம் கம்பிக்கூண்டுக்குள், வெயிலில் மின்ன பத்திரமாய் சிரிக்கிறது.

பெருமானுக்கு தாயுமானவர் என்ற பேர் வரக் காரணமான நிகழ்வு சித்திரங்களாகவும், பெருமானின் பல அவதாரங்கள் ஓவியங்களாகவும் தீட்டப் பட்டிருக்கின்றன.

பின் அம்மையையும் தரிசித்து விட்டு வந்த வழியே கீழிறங்க, அமைதியாய் இருந்த நமது சுற்றுப்புறம் பஜாரின் இரைச்சலுக்கு மாறுகிறது.

*சிங்காரத் தோப்பில் இருந்த (இருக்கும்?) ஒரு விடியோ ஷாப்பில் தான் முதன்முறையாக வீடியோ கேம்ஸ் பார்த்தேன். ஐந்து ரூபாய் கொடுத்தால் மூன்று நிமிடங்கள் விளையாடலாம்.

*மின்சாரம் செத்துப் போன ஒரு மொட்டை வெயிலின் நாளில் வீட்டில் அனலின் அடியில் இருக்க முடியாததால், மாவட்ட தலைமை நூலகத்திற்குச் சென்றோம். அங்கு தான் முதன் முறையாக , ஓவியங்கள் வரைதல் தொடர்பாக புத்தகங்களை அள்ளிப் போட்டு (ஓவியர் ஆழி அவர்களின் கோர்ஸ் புத்தகங்கள்), குறிப்புகள் எடுத்து, கொஞ்சம் கொஞ்சம் ஓவியக் கலையின் மீதும் ஆர்வம் வர ஆரம்பித்தது. அதுவரை எழுத்தை மட்டுமே ஓவியம் போல் கிறுக்கிக் கொண்டிருந்தவன், உண்மையிலேயே ஓவியம் கிறுக்க ஆரம்பித்தேன்.

*ராயல் தியேட்டரில் தான் முதன்முறையாக ஏ.ஸி. தியேட்டரில் படம் பார்த்தேன். படம் 'கேப்டன் பிரபாகரன்'. அகன்ற திரையில் அருவிகள் பாய்ந்து வர, தியேட்டரின் ஏ.ஸி.குளுகுளுப்பில் 'அட, நம்ம ஊரு கதை' என்ற நினைப்பும் மறக்க இயலாத வகையில் செய்து விட்டது.

*வயலூர், சமயபுரம் என்றெல்லாம் சுற்றி சுற்றி பல கோயில்கள் வலம் வந்தேன்.

*தெப்பக்குளம் அருகில் ஜம்புநாதர் கோயில், குளத்தின் கரைகளில் இருக்கும் சிறு சிறு கோயில்கள் என்று பயணித்தேன்.

*பஜாரில் இருக்கும் அகஸ்தியர் புக் ஸ்டோர் தான் இப்போது கொஞ்சமாவது இந்தி தெரிந்திருக்கும் தமிழ்மக்களுக்கு பரீக்க்ஷை சமயங்களில் பெரிதும் உதவி இருக்கிறது, எனக்கும்!

* சிவரஞ்சனி தியேட்டரில் 'மெளனம் பேசியதே' படத்திற்காக நிற்கையில் அதன் காம்பவுண்ட் சுவர் முழுக்க தலைவரின் 150 படங்களையும் பேர் எழுதி வைத்து, 'பாபா'விற்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். மதுரையிலும், திருச்சியிலும் தான் தலைவரின் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதாக வந்த செய்திகளின் உண்மையை அன்று அறிந்தேன்.

*ஒரு நண்பரை சந்திக்க போனதால், மாலை 4.30 மணிக்கு பிடிக்க வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸை கண் முன்னே தவற விட வேண்டியதாகிப் போனது.கிண்டி, சைதை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என்று ஒவ்வொரு நிலையமாக பார்த்துக் கொண்டே வர, சரியாக எழும்பூருக்கு முன்னே சேத்துப்பட்டில் ரயில் என்னைக் கடந்து செல்கின்றது. பின் 6.30 மணிக்கு ராக்போர்ட் பிடித்து, சரியாக 11:15க்கு திருச்சியை அடைந்து, மிகச் சரியாக அர்த்தராத்திரி 12 மணிக்கு அத்தை வீட்டை பேய் போல் தட்டினேன். பயந்து விட்டார்கள் முதலில். பின் கதையைக் கூற, உணவு கிடைத்தது. பின் காலை திருவரங்கம் சென்று போன் நம்பர் கண்டுபிடித்து, நண்பர் வீட்டைக் கண்டுபிடித்து... அந்த ஆண்டு வைகுண்ட ஏகாதஸி வைபவம் இப்படியொரு சிறப்பான முறையில் நிறைவேறியது.



*திருவரங்கத்தின் மீதிருக்கும் பிரேமையும், ரங்கநாதனின் மேல் இருக்கும் காதலும் பற்றி தனியாகத் தான் சொல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில், 1-ம் நம்பர் பேருந்தில் ஏற, ஆற்றைக் கடந்து திருவரங்கத்தில் சென்று சேர்ப்பிப்பார்கள். மற்றுமொரு முறை சென்று பின் திருவரங்கம் பற்றி தனியாக எழுத முடிவெடுத்துள்ளதால், இப்போது நஹி.

*+2 படிக்கையில் டூருக்காகச் சென்னை சென்று, மகாபலிபுரம், வேளாங்கன்னி, நாகை என்று சென்று திருச்சி வழியாகச் செல்ல, பெருமழை பிடித்து ரங்கம் செல்ல முடியாமல் வருத்ததோடு தான் ஊர் திரும்பினோம்.

*சென்னையில் இருக்கையில் கோயமுத்தூர் எக்ஸ்பிரஸில் செல்கையில் திருச்சி வழியாக கோவை செல்லும். அப்போது 'இவ்வளவு தூரம் வந்து பிளையாரையும் , ரங்கனையும் பார்க்காமல் செல்கிறோமே' என்றெல்லாம் தோன்றும். இப்போது அந்த வழியாகச் செல்ல வேண்டியதே இல்லை. இனிமேல் ஏதாவது சுற்றுலா திட்டம் போட்டால் தான் உண்டு.

இத்தனை கோயில்கள் சுற்றி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து செல்லும் போதும், திரும்பும் போதும் கடந்து செல்ல வேண்டி இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும் போதும், 'இம்முறை கண்டிப்பாக செல்ல வேண்டும்' என்று முடிவெடுத்தே சென்றாலும் தட்டிப் போய்க் கொண்டே இருக்கின்றது, திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயம் மட்டும்!

என்ன காரணம் என்றே தெரியவில்லை.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

4 comments:

PPattian said...

மிக அழகிய ஓர் பதிவு..

திருச்சி அப்படியே என் கண்முன்னே இப்போது.

இரா. வசந்த குமார். said...

புபட்டியன் சார்... மிக்க நன்றி தங்கள் வருகைக்கு. நீங்கள் திருச்சியா..?

பட்டாம்பூச்சி said...

மிக அழகாக ஊரை பற்றிய காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்துள்ளீர்கள்.
ஜலகண்டேஸ்வரர் கோவிலும் மிக சிறப்பு வாய்ந்ததே.அடுத்த முறையேனும் சென்று வர முயற்சி செய்யுங்களேன்.
அரவரங்கம் எனக்கும் மனதிற்கு நெருக்கமான தலமே.இருப்பினும் அங்கு இருக்கும் பொலிடிக்ஸ் எரிச்சலை ஏற்படுத்தும்.மேலும் ஒரு நிமிடம் கண்ணை மூடி அந்த ரம்மியமான ரங்கநாதனை உள்வாங்குவதற்க்குள் திருப்பதி போலவே தள்ளிவிட்டு விடுவார்கள்.
நீங்கள் கும்பகோணம் சக்ரபாணி கோவில் சென்றுள்ளீர்களா?அதே அரங்கனை எந்த கவலையும் இன்றி மனம்குளிர தரிசிக்கலாம்.சற்றே இருட்டின,மங்கலான விளக்கொளியில் தூபம் காட்டும்போது அரங்கனின் அழகு பன்மடங்கு கூடி பொலிவுடன் தெரிவதை மனம் உணரும்.சிலிர்க்கும் அந்த பக்தி பரவசத்தை நீங்களும் அனுபவியுங்கள்.

Karthik said...

நான் ஒரு முறை கூட மலைக்கோட்டை போனதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் திருவானைக்காவல் போவோம்.

இந்த பதிவு படித்து மலைக்கோட்டை போகவேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

படி ஏற வேண்டுமா?