Sunday, April 06, 2008

சின்னக் கண்ணன் அழைக்கிறான்.



லசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது யமுனை நதி.

வெளிச்சம் மெல்ல மங்கிக் கொண்டு வருகின்றது. தன் அன்றைய தினத்தின் பயணத்தை முடித்துக் கொன்டு மேற்றிசையில் மறைகிறான், கதிரவன். வல்லினங்களும், மெல்லினங்களும், இடையினங்களும் தத்தம் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ குளிர்க்காற்று வீசத் தொடங்கி இருப்பதை கானகத்தின் மெல்லிய இலைகள் அசைந்து அசைந்து பரப்பிக் கொண்டிருந்தன.

கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே சின்னப் பறவைகள் வானின் கூரை மேல் சிதறிக் கொண்டு பறந்தன. மேகங்கள் பூத்திருந்த பூமியின் நீலப் போர்வையில் எங்கிருந்து வந்தன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு முத்து முத்தாய் மின்னத் தொடங்கின மீன்கள். அவற்றின் வெண் நிழல்களைப் போல் நதியின் அலைகள் மேல் துள்ளித் துள்ளி விலையாடிக் கொண்டிருந்தன மீன்கள்.

நதிக்கரையின் ஒரு பாறை மேல் நந்தனும், அவன் திருப்பாதங்களின் அருகில் இராதையும்!

ஓராயிரம் தீப்பொறிகள் தெறித்து நீரில் விழுகையில் 'ஸ்...' என்ற ஒலியை எழுப்பி அணையுமே, அந்த ஒலியை எழுப்பி அக்காட்சியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன ஆவினங்கள். பகல் முழுதும் காட்டின் பச்சைப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தாலும், அவற்றின் அடிமனதில் இந்த மாயன் குழல் நாதம் தரும் தருணத்தை எண்ணித் தானோ காத்திருக்கும்? வள்ளுவரின் 'செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்ற குறளை அறிந்திருக்குமோ?

நதிக்கரையோர மரங்கள் எல்லாம் வானளாவ பரந்து விரிந்திருந்தாலும் கண்ணன் குழல் இசையைக் கேட்க , தம் பெரிய உடலை வளைத்து தம் செவிகளை கூர்ப்படுத்தி, அவன் இருக்கும் இடத்தில் குவித்திருந்தன. அவ்ற்றின் கவனத்தைக் குறும்பாய் காற்று கலைத்து, இலைகளை அசைத்துப் போக, தம் இலைகள் கொண்டு காற்றைத் திருப்பி அடிக்க, சலசலப்பாய் இருந்தது. நதியின் சலசலப்பிற்குப் போட்டியாக, இவற்றின் சலசல விளையாட்டு இருக்க, 'ஸ்...' என்று சொல்லிக் கொண்டு ஆநிரைகள் மீண்டும் குரல் கொடுத்தன.

சின்னச் சின்ன பூக்கள் தம் இதழ்களை ஆவலாய்த் திறந்து வைத்திருந்தன. தம் பொட்டுத் தேன் துளிகளுக்கு அவை இசை வர்ணம் பூச காத்திருந்தன.தத்தம் மகரந்தத் துகள்களுக்கு சொல்லிக் கொண்டன. ' துகள்களே! தூவானத்தின் துளிகள் போல் சிறிது சிறிதாய் சிரிப்பவர்களே! நன்றாய் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த கான மழையில் நனைந்து செல்லும் வழி எல்லாம் நமது கண்ணனின் குழலின்பத்தைக் கூறிக் கொண்டே இருங்கள்.'

இராதையின் கிறக்கத்தைத் தான் என்னவென்று சொல்லுவது?

யமுனா நதிக்கரையின் அலைகள் தம் நுரைகளை கரையெங்கும் பரப்பிக் கொண்டே செல்லும். அனத்த நுரைகளை அள்ளி, அவற்றில் மாலைகள் செய்து அணிய அவை முத்து மாலைகள் ஆயின. கதிரவனின் கிரணங்களை வடிகட்டி, பரிபூரண சுத்தமான பொன்னிறக் கதிகளை மட்டும் அள்ளிப் போட்டுக் கொண்ட ஸ்வர்ண நகைகளை அணிந்திருந்தாள். வண்ண வண்ண பூக்களைக் கிள்ளி அவற்றின் இதழ்களைக் கோர்த்து தம் வளையல்களாக்கி கொண்டாள். கண்ணாடியின் முன் போய் நின்று, 'கண்ணா..! கண்ணா..!' என்று மொழிய அது அப்பேர் இன்பத்தில் சொக்கி, தன் கடினம் இழந்து, இளகி, உருகி வர, அந்த ஜொலிக்கும் கண்ணாடிக் கரைசலை அள்ளி ஆடை நெய்து கொண்டாள்.

கிக வைகறைப் பொழுதில் விழித்துக் கொள்வாள். இரவு இன்னும் முழுதாகப் பிரியாத அந்த குளிர்வேளையில் வானம் நீலப் பட்டாடை உடுத்தி இருக்கும். அது அந்த நீலமேகவர்ணனின் மேனியை ஒத்திருக்கும். பிரம்மாணடமாய் தன்னை மாற்றி வானை அமைத்தானோ அவன் என்ற எண்ணம் பூக்க யமுனை நதி வருவாள் இராதா.

வெட்கம் கொண்ட நதி, நீலவானை அள்ளி தன் மேனி முழுதும் ஆடையாய் அணிந்திருக்கும். அந்த நீல நீரலைகளை அள்ளி தன் மென் சூட்டின் இதழ்களால் இனிக்க முத்தமிடுவாள். கேட்கவும் வேண்டுமா? குழைந்த நதியலைகள் இறுகி நீலப் பட்டாடையாய் மாறி இருக்கும். அதை அணிந்து கொள்ளுவாள்.

இத்தனை அழகோடு இருந்தாலும், இராதையின் மனத்தில் குறை இருக்கும். யாருக்காக அவள் இத்தனை அழகணிகிறாளோ, அந்த மாயக் கள்ளன் கண்களுக்கு தட்டுப்படவே மாட்டான். நாள் பொழுதுகளில் கானகத்தில் இருப்பான்; இரா நேரத்திலோ அன்னை யசோதையின் மாளிகைகுள் சென்று மறைந்திருப்பான். மாலைப் பொழுதுகளில் மட்டுமே அவன் நதிக்கரைகளில் இசை நர்த்தனமிடுவான்.

இன்று வந்து விட்டாள்.

ஆஹா...! அந்த நாயகனின் எழிலை எப்படித் தான் எடுத்துச் சொல்லி இயம்புவதோ?

மாலை நேர வெயில், அலையாடும் நதியின் மேல் ஆனந்த நர்த்தனம் இடும் அல்லவா, அப்போது அந்த அலைத்துளிகள் உல்லாசப் பரவசத்தில் குதித்துக் கூத்தாடுமே அந்த பொன்னிறச் சிதறல்கள் அவனது பாதங்களில் வர்ணம் பூசி இருந்தன. அந்தி மயங்கி வருகையில் அடிவானெங்கும் செந்தூர நிறத்தில் ஜரிகை போட்டிருக்குமே, அது போல் அவனது திருப்பாதங்களின் ஓரங்கள் எங்கும் சிவந்த நிறம் கரை கட்டி இருந்தது.

அதிகாலைப் பொழுதில் கதிரவன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கையில் அலையாடும் பெருங்கடல் ஆர்ப்பரிக்கும் போது, அதன் பேரலைகள் முழுதும் கதிரின் மஞ்சள் வர்ணத்தை வாரி இறைத்திருக்கும். அந்த அழகில் அவந்து இடையைச் சுற்றிலும் மஞ்சள் நிற ஆடை அலங்கரித்திருக்கிறது. கதிரவன் வானில் வலம் வருகிறான். அப்போது கருமேகத்தின் பின் பதுங்கி, பின் வெளிப்படுகையில் மேகத்தின் எல்லைகள் முழுதும் பொன்னிறத்தில் ஜொலிக்கின்றது அல்லவா, அதை அவனது கருநிறத்தை மூடிச் செல்லும் மஞ்சள் நிறவாடை நினைவூட்டுகின்றது.

காடுகளில் முளைத்த அந்த சின்னப் பூக்களும் என்ன தான் புண்ணியம் செய்தனவோ? இவன் மார்போடு ஒட்டி உறவாடுகின்றதே? குழலெடுத்துச் சிரிக்கின்ற விரல்களில் கனிந்திருக்கும் அன்பை எல்லாம் அவன் இசையெனும் அமுதத்தில் அள்ளித் தர யாவரும் மயங்குகின்றனர் அல்லவா?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

No comments: