இரு எதிரெதிர் நிலைகளில் உள்ளவர்கள் மற்றவருக்கு ஆதரவாக எடுத்திருக்கும் நிலைகள் பற்றி.
தமிழக முதல்வர் 'கர்நாடகத்தில் தேர்தல் வருவதால் இப்போதைக்கு ஒகேனக்கல் திட்டம் ஒத்தி வைக்கப் படுகின்றது. அங்கு தேர்தல் முடிந்து நிலையான அரசாங்கம் அமைந்த பின் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை மேற்கொள்வோம்' என்று கூறி உள்ளார். கிருஷ்ணாவும் 'தமிழக முதல்வர் எடுத்துள்ள நிலை மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது' என்கிறார்.
இது சில கேள்விகளை எழுப்புகிறது.
*ஒரு மாநிலத்தில் தேர்தல் வரும் போது அங்கு நடத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படும். பின் தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பு ஏற்கப்பட்டவுடன், திட்டம் தொடரும் என்பது நிலையாக இருந்து வருகிறது. இப்போது கர்நாடகத்தில் தேர்தல் வருவதன் காரணமாக ஒகேனக்கல் திட்டம் நிறுத்தி வைக்கப்படுகின்றது என்ற அறிவிப்பால் என்ன சொல்ல வருகிறார்? ஒகேனக்கல் கர்நாடகத்தைச் சேர்ந்தது தான் என்று உறுதிப்படுத்துகிறாரா? இது அங்குள்ள அமைப்புகளுக்கு சாதகமான ஒரு பாய்ண்ட் ஆக அல்லவா ஆகி விடும்?
*இனி ஒரு வளர்ச்சிப் பணி மேற்கொள்ளப்படும் போது அண்டை மாநிலங்களின் நிலையையும் அவற்றின் அனுமதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையை அல்லவா இது ஏற்படுத்தி விடுகின்றது?
*காவிரிப் பிரச்னையில் ஏற்படுத்திய விவகாரத்தைப் போலவே இப்பிரச்னையிலும் ஏற்படுத்துகிறார். இனி இதுவும் ஒரு தீராத உயிர்வலியாக இருக்கப் போகின்றது.
*சரி, அங்கு தேர்தல் முடிந்து ஆட்சி ஏற்கப் போவது யார்? எல்லை தாண்டி வந்து ஊதி விட்டுப் போன எட்டியூரப்பா, பிரச்னையை மாற்றிப் போட்டு பெரிதாக்கிய கிருஷ்ணா, தமிழர்களை அடித்து நொறுக்குங்கள் என்று ஆணையிட்ட குமாரசாமி, இவர்களிள் யாரேனும் ஒருவர் தானே? சும்மா இருக்கும் போதே இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனில், ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மட்டும் வேறு மாதிரி நடந்து கொள்ளுவார்கள் என்பது என்ன நிச்சயம்?
*ஒன்று மட்டும் உறுதி! ஒற்றுமையாய் இருந்து இந்தப் பிரச்னையில் உறுதியான நிலையை எடுத்திருக்கும் தமிழர்களை குலைத்துப் போட்டு, காங்கிரசுக்கு பல்லிளித்திருக்கிறார், கூட்டணி தயவால் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதல்வர். இவர்களது பேச்சுவார்த்தை எந்த இலட்சணத்தில் நடக்கும் என்று தெரியாதா? ஒகேனக்கலையும் மறந்து விட வேண்டியது தான். அடுத்து ஈரோடு வரை கேட்டிருக்கிறார்கள். எல்லோரும் தயாராய் இருக்கவும். எதற்கு? கன்னடம் கற்றுக் கொள்ளத்தான். பின் கர்நாடகத்தோடு இணைந்து விட்ட பின் ஆட்சி மொழி தெரியாமல் தடுமாறக் கூடாதல்லவா?
சென்ற வாரம் குமுதத்தில் , விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் 'சிவா மனதில் சக்தி' என்ற படத்தைப் பற்றி விலாவரியாக மூன்று பக்கங்களில் எழுதி இருக்கிறார்கள். அதிலும் முக்கால்வாசிப் பக்கங்களை குமுதத்தின் பாரம்பரியப்படி நாயகியின் போஸ்களே அடைத்துக் கொண்டன.
இவ்வார விகடனில் குமுதம் குழுமத்தால் நடத்தப்படும் 'ஆஹா எஃப்.எம்' பற்றி இரண்டு பக்கங்களில் ,அதன் 'சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து' வாழ்த்தி எழுதி இருக்கிறார்கள்.
இது போன்று இப்போது தான் முதன்முதலில் பார்க்கின்ற நிலை? இதற்கு காரணம் என்னவாய் இருக்கும்? பத்திரிக்கைகளின் விற்பனை குறைந்து கொண்டு வருகின்றதா? சீரியல்கள், திரைப்படங்கள், வலைப்பதிவுகள், விளையாட்டு என்று கவனம் திருப்பும் துரைகள் அதிகரித்ததால் இது போன்ற கூட்டணி அவசியமாகின்றதா? பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் சொந்த வலைப்பதிவு வைத்துக் கொண்டு விட்டதால் கூட்டணி ஏற்படுகின்றதா?
புரியவில்லையே.
No comments:
Post a Comment