Monday, April 07, 2008
பனி விழும் மலர்வனம்...
சிவந்த ரோஜாக்கள் பூத்திருக்கும் சாலை அது.
முந்தின இரவின் மழையில் நனைந்திருந்தது. இருளின் குறுக்கே சால் ஓட்டி வெளிச்ச அரிவாள்களால் ஒளியை அறுவடை செய்து லாரிகள் நடத்திய தொடர் விவசாயத்தால், அழுக்குச் சாயம் கலைந்து புத்தம் புதிதாய்ப் பூத்திருந்தன பகலில்!
யாரோ ஒருவர் தான் நட்டிருக்க வேண்டும். ஏழா, ஐந்தா என்ற எண்ணிக்கைகளில் குழப்பம் அடையாமல், சைவக் குழந்தையாய் வளர்க்காமல் முட்டைக் கூடுகளைத் தொப்பியாக்கி, சாணித் துளிகளை எருவாக்கி, தினமும் நீரூற்றி யாரோ ஒருவர் தான் இத்தனை கவனமாய் பார்த்து வந்திருக்க வேண்டும்.
மொட்டு விட்டிருக்கும் போது எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள்? மெல்ல, மெல்ல இதழ்கள் திறக்கையில் எப்படி கைகொட்டிச் சிரித்திருப்பார்கள்? இன்று ஈரமான துளிகளைத் தாங்கி நிற்கையில் எத்தகைய ஆனந்தம் கொண்டிருப்பார்கள்?
யாராயிருக்கும்?
ஒற்றைக் கம்பிகளைக் கைக் கொண்டு, சற்று பெரிய கறுப்புக் குல்லாயில் தன்னை நுழைத்துக் கொண்டு, நடைபாதைகளில் நடக்கும் இவர்களில் யாரோ ஒருவரா? மலர்ப் படங்கள் பதித்த சின்ன கலர்க்குடையை தலையோடு பொருத்தி, நூற்பையைச் சுமந்து சாலைகளில் தேங்கி இருக்கும் மழைக் குட்டைகளில் குதித்து குதித்து ஓடும் இந்தச் சின்னப் பட்டாம்பூச்சிகளில் ஒன்றா?
இன்னும் பெய்து கொண்டே இருக்கின்ற மழையின் தாக்குதல்களில் இருந்து தற்காலிகத் தப்பித்தல்களுக்காக பேருந்துக் கூடைக்குள் ஒளிந்து கொண்ட கூட்டத்தில் ஒருவனாய் நின்று பார்த்துக் கொண்டே நிற்கிறேன்.
'உனது பேருந்து நிற்கிறதே, போகவில்லையா?' ஊமைக் கேள்வியைத் தொடுத்து என் மேல் எறிய, தினம் காசு போடும் நான் இன்று மெளனத்தையே அவனுக்கு இடுகிறேன். மெல்ல மெல்ல கூட்டம் கரைய, நானும் அவனும் மட்டும் தனித்து விடப்படுகிறோம்.
பகல் பொழுது புலர்ந்தாலும் இன்னும் ஈரத் தோடு அணிந்த இலைகளில் இருந்து ஈரத்தோடு சொட்டிக் கொண்டே இருக்கின்ற மரங்கள் சப்தித்தன. 'பட பட'என எங்கிருந்தோ பறந்து வந்த வெண் புறாக்கள் ஒரு வட்டமிட்டு மீண்டும் வேறு திசையில் மிதந்தன. மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது.'சட சட'என ஷட்டர்கள் பூமியை முத்தமிட்டன.
கொலுசொலி கேட்டது.
ஒரு மஞ்சள் நிலா போல் மிதந்து வருகிறாய். நீ கால் வைத்து நடக்க நடக்க தெறித்த மழைத் துளிகள் உன்னைப் பிரிய மனமின்றி, உன் கொலுசு மொட்டுகளோடு ஒட்டிக் கொள்கின்றன. நடக்கையில் கையில் பிடித்திருக்கும் வெண் குடையின் விளிம்புகளில் இருந்து தெறிக்கின்ற துளிகள் உன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை உற்பத்தி செய்கின்றன. மழை மெதுவாக கனிய, சில்லென்று எங்கிருந்தோ காற்று வந்து அப்பிக் கொள்கின்றது. மேகக் கூட்டங்கள் பறக்கின்ற தினுசில் கரிய கூந்தல் பறபறக்க, ஈரம் பூத்திருந்த காற்றில் இன்னும் குளிர் ஏறுகின்றது.
சாலையோரம் பதிந்திருந்த ரோஜாக் கூட்டங்கள் சுறுசுறுப்பு கொள்கின்றன.
மெல்ல அவற்றின் அருகில் குனிகிறாய். கொத்தான ரோஜா மலர்களை செடிக்கு வலிக்காமல் ,கிள்ளாமல் அள்ளிக் கொள்கிறாய். ரோஜாக்கள் மேல் சிரித்திருந்த மழைத்துளிகள் 'நீ முட்கள் தொட மிளிருமோ ரத்தத்துளி என்ற பயத்தில் கலங்கிய கண்ணீராகவே' எனக்குப் பட்டது. மெள்ள அவற்றை முத்தமிடுகிறாய்.
எது அதிக சிவப்பு, பூவிதழ்களா, பெண்ணிதழ்களா என்ற குழப்பத்தில் திணறியது என் மூளையெனும் கீறல்களின் கூடல். ஏதோ கூறினாய் அவற்றின் காதுகளில், என்னவாய் இருக்கும்?
'குளிர்கிறதா உங்களுக்கு? பாவம், இரவு முழுதும் மழையின் மயக்கத்தில் நனைந்து நனைந்து உங்களுக்கு ஜலதோஷமா என்ன? காற்றின் அலையாடலுக்கு அசைந்து அசைந்து தும்முகிறீர்களா? பகலின் இந்த மழை உங்களுக்கு பிடிக்கவில்லையா? பாதுகாப்பான தோட்டங்களில் உங்களை வைக்கவில்லையென்ற கவலையா? எவரேனும் பறிப்பர் என்ற பயமா? சிவப்புக் குழந்தைகளே!..'
கையோடு கொண்டு வந்திருந்த வெண் குடையை ரோஜாச் செடிகளின் மேல் மூடினாய். இனி நான் நம்புவேன், முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரியென..! மலருக்கு குடை கொடுத்தது இப்பூவென..!
குடையின் கீழ் கும்பலாய் நின்றிருந்தன மலர்கள். வைத்து விட்டு நீ மழையில் நனைய நனைய நகர்ந்து செல்கிறாய்.
நகரா மலர்களுக்கு குடை கொடுத்து, நகர்ந்து செல்லும் நகர மலராய் உன்னைக் காண்கிறேன்.
திருப்பத்தில் நீ திரும்பி நடந்து மறைந்து விடுகிறாய். காற்றோடு ஆடிக் கொண்டே இருக்கின்ற குடையின் அடியில் சிரித்துக் கொண்டே இருக்கின்ற சிவந்த ரோஜாக்களையும், காதலின் அடியில் ஆச்சரியமாய் நிற்கும் என்னையும், கடைசித் துண்டு பீடியை வலிக்கின்ற ஊமைப் பிச்சைக்காரனையும் தவிர்த்து இங்கே மழையும் பெய்து கொண்டிருக்கின்றது.....!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
படம் நன்றி :: http://gallery.photo.net/photo/5690317-lg.jpg
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Excellent picture
Thanks Mr.Amateur Yogi....
Our thanks goes to :: http://gallery.photo.net/photo/5690317-lg.jpg
Thiru vasantha kumar avarkalukku,
Ungal panivilum malarvanam padithaen. mika alagana sindhanai, kavithaithuvam niraindha ungal urai nadai ennai mihavum kavarndhathu. Keep posting good articles.All the Best!
Thanks!
அன்பு கே.எஸ்.செந்தில் குமார்... தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். தாங்கள் ஏன் தீந்தமிழிலேயே தொடர்ந்து பதிவுகள் எழுதக் கூடாது? உங்கள் வலைப்பக்கத்தில் சில பதிவுகள் ஆங்கிலத்திலும், சில பதிவுகள் தமிழிலும் உள்ளன. நன்றாகவே உள்ளன.
தமிழிலேயே எழுதலாமே...! ;-)
Post a Comment