Thursday, May 01, 2008

வ.வா.வின் வா.வ.

சென்ற வாரம் ஊருக்குச் சென்ற போது நடைபெறத் துவங்கிய நூல் அழகத்தில் இருந்து சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அவற்றுள் இரண்டு புத்தகங்கள் பற்றி.

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் நாங்கள் பார்த்து வந்த போது ஞாயிறு என்றாலே பரவசமாக இருக்கும். சுவையான சாப்பாடு, விடுமுறை, மதியம் ஏதாவது ஒரு மாநில மொழித் திரைப்படம், மாலை ஏதேனும் ஒரு தமிழ்ப் படம் என்று பொழுது பறந்து போகும். படம் பார்த்து முடிந்ததும் இரவு உணவு முடித்து விட்டு உறங்கப் போகலாம் என்று முடிவுக்கு வரும் போது ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

அமுல் சுரபி.



சித்தார்த் ரே மற்றும் ரேணுகா சஹானே (ஆஹா! என்னவொரு வாய் கொள்ளாத சிரிப்பு இவருக்கு!) இருவரின் கலந்துரையாடலில் நிகழ்ச்சி இனிமையாக இருக்கும். சித்தப்பா , பெண் போல் இருவரும் விடாமல் பேசிக் கொண்டும், அவ்வப்போது பலப்பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதுமாக நல்லதொரு நிகழ்ச்சி.

அமுல் ப்ராண்டின் ஒரு விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. 'Utterly Butterly Delicious' என்ற வாசகம் ஞாயிறின் இரவுகளோடு ஒன்றிப் போனது.

குஜராத்தின் ஒரு மூலையில் இருந்த ஆனந்த் என்ற கிராமத்தை இந்திய பால் வளத்தின் மையப்புள்ளியாக்கி அமுல் ப்ராண்டை நாடெங்கும் அறிமுகப்படுத்தி, ஒரு சிறந்த கூட்டுறவு உற்பத்திப் பொருளாக ஆக்கிய திரு.வர்கீஸ் குரியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் தான் முதலாவதாகப் படித்தது.



கேரளாவின் கள்ளிக்கோட்டையில் '21ல் பிறந்து வில் பணியாற்றி, அமெரிக்காவில் மெட்டாலஜி மற்றும் அடாமிக் ஃபிஸிக்ஸில் முதுநிலைப் பட்டம் பெற ஆசைபட்டு, பால்வளப் பொறியியலுக்கே அரசு உதவித் தொகை கிடைக்கப் பெற்று, ஆனந்தில் கைரா கூட்டுறவு பால் நிறுவனம் அமைத்து, 'விவசாயிகளே உரிமையாளர்கள்' என்ற உண்மையான கூட்டுறவுக் கொள்கையை அமல்படுத்திய ஒரு இந்தியாவில் ஓர் அரிய மனிதரின் வாழ்க்கையைக் கூறுகின்றது இந்நூல்.

ஓர் எளிய மனிதர் எவ்வாறு அரசின் இறுகிய கொள்கைகளுக்கு மத்தியிலும் ஒரு நிறுவனத்தின் சக்தியைக் கைக் கொண்டு, இலட்சக்கணக்கான ஏழைக் குடியானவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க முடிந்தது என்ற இக்கதை நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு.



புத்தகம் : எனக்கும் ஒரு கனவு (I TOO HAD A DREAM)

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : வர்கீஸ் குரியன்

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்.

விலை : 150 ரூ.

டுத்ததாக வின்சென்ட்.

இந்த ஓவியரின் ஓவியங்கள் அவர் இருந்த காலகட்டத்தில் யாரும் சீந்தாமல் இருந்தன. இவரது மறைவிற்குப் பிறகு அவை இன்று உலகமெங்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களின் வரவேற்பறைகளிலும், பணக்காரர்களின் ஹால்களிலும் அலங்கரிப்புக்காக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவரது 'உருளைக்கிழங்கு உண்பவர்கள்' மற்றும் 'சூரியகாந்திப் பூ' என்ற ஓவியங்கள் இன்றும் அவரது பாண்டித்யமையை இன்றும் கூறி வருகின்றன.

அவரது குடும்பப் பெயரைச் சொன்னால் போதும். எல்லோர்க்கும் தெரியும்.

வான்கா.



வான்கா கேலரி.

இர்விங் ஸ்டோன் எழுதிய 'Lust For Life' என்ற வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சுரா மொழிபெயர்த்து வந்த வரலாற்று நூல். பிறந்த நாள், இடம், பெற்றோர் யார் என்பன போன்ற அந்த வரிகளோடு கண்ணையும், கவனத்தையும் கடந்து போகின்ற தகவல்களால் நிரப்பப்படவில்லை. மாறாக அவரது வாழ்வின் நிலைகளோடு நாமும் பயணப்படும் வகையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது, நூல்.

கலை வடிவத்தின் ஏதாவது ஒரு கூறோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாழ விரும்புகிற வாழ்வை, இயற்கையை, அதன் கடைசிச் சொட்டு வரை ருசித்துக் குடித்த ஓவியன், அவன்.

நூலில் இருந்து சில என்னைக் கவர்ந்த பகுதிகள்.

***

"அப்பா... ஒரு வேளை நீங்க சொல்றது சரியாக இருக்கலாம்.ஆனா, ஆரம்பத்துல இயற்கை ஒரு கலைஞனையோ, ஓவியனையோ எதிர்க்கத்தான் செய்யும்" - பென்சிலைக் கையில் பிடித்தவாறு வின்சென்ட் சொன்னான்: "இயற்கையோட எதிர்ப்பை ஒரு பொருட்டா நினைக்காம பலத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாச் சேர்த்துக்கிட்டு அதை எதிர்த்துப் போராடினா மட்டுமே ஒருவனால் கடைசில வெற்றி பெற முடியும்."

***

"வின்சென்ட், நான் சொல்றதை நம்பு. ஒரு கலைஞன் தான் அடைய வேண்டிய இடத்தை மிகவும் சீக்கிரமாகவே போய் அடைஞ்சான்னு வச்சுக்கோ. அவனோட கலை அதே மாதிரி சீக்கிரமே அழிஞ்சிடும். தற்காலிக வசதிக்ககவும் - புகழுக்காகவும் முயற்சி பண்ரவனோட கலை, தற்காலிகமா மட்டுமே அவன்கிட்ட இருக்கும். உண்மையிலேயே ஒரு கலைஞனுக்கு அவசியம் வேண்டியது என்ன தெரியுமா? உண்மை, நேர்மை, மனசாட்சிக்கு விரோதமில்லால நடத்தல். நாலு பேரோட கை தட்டலையும், பாராட்டையும் பெறணும்ன்றதுக்கக சாலையில் போற கண்ட புழு, பூச்சி பின்னாடி எல்லாம் ஓடாம, ஒழுங்கா கத்துக்க வேண்டிய விஷயங்களைக் கத்து உன்னோட கலை பற்றிய அறிவை வளர்த்துக்கிறதுக்கு வழியைப் பாரு."

***

'உள்ளதை அப்படியே பார்த்து வரைவதாக இருந்தால், அது வீண். அது தோல்வியில் தான் முடியும். உள் மனதிலிருந்து புறப்பட்டு வரும் உணர்ச்சிகள் அமைதியாக, மெதுவாக படைப்பின் மீது இறங்க வேண்டும். அப்படி நடந்தால், இயற்கை தானே படைப்பிற்குப் பின்னால் வந்து நிற்கும்' - பீட்டர்ஸென் சொன்ன வார்த்தைகள் வின்சென்ட்டின் ஞாபகத்தில் வந்தன. தன் முன் மாடல் அமர்ந்திருந்தது, தன் பார்வையை திசை திருப்பியிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். இயற்கையின் பிடிக்குள் தன்னையே உருக்கி அர்ப்பணித்தான் வின்சென்ட். இதுவரை இயற்கையை உருக்கி தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் என்று அவன் மனமே உணர்ந்தது.

***

வின்சென்டிற்கு கிடைத்தது போன்ற ஒரு தம்பி (தியோ) கிடைத்தால், கலை ஆர்வம் பெருக்கெடுத்து கட்டுகளில் இருந்து விடுபட்டு ஓடத் துடிக்கும் ஒருவனின் வாழ்க்கை தான் எத்தனை அதிர்ஷ்டவசமானது! ஆனால் வின்சென்ட் அப்படி ஒன்றும் அதிர்ஷ்டக்காரனாகத் தன் வாழ்வை வாழவில்லையே...

புத்தகம் : வான்கா

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : இர்விங் ஸ்டோன் (தமிழில் : சுரா)

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : புதுமைப்பித்தன் பதிப்பகம் (piththan@yahoo.com)

விலை : 100 ரூ.


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

4 comments:

NewBee said...

அமுல் சுரபி! யெஸ்...நல்லா ஞாபகம் இருக்கு.சித்தார்த், ரேணுகா இருவரின் இந்தியும் இனிமையாகவும் இருக்கும்,உற்சாகமாகவும் இருக்கும்.

நான் இந்தி கற்றுக் கொண்ட நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.:)

Anonymous said...

அமுல் சுரபி உண்மையிலேயே நல்ல ஹிந்தி programe. அதிலும் ஒரு குட்டி சிறுமி வெண்ணையை பேப்பெரோடு சேர்த்து சுவைப்பது மிகவும் இனிமையாக இருக்கும். ம் , அது ஒரு 'பொதிகை ' காலம்.

இரா. வசந்த குமார். said...

NewBee என்னது இந்தி கத்துக்கிட்டீங்களா... நான் பார்க்கும் போது தமிழ்ல டப் பண்ணி ஒளிபரப்புவாங்க... அதனால் நான் தமிழ் தான் கத்துக்கிட்டேன்... இது வேறு தமிழ்.. தூர்தர்ஷன் தமிழ்.... ;-)

அம்மா... நீங்க சொல்றது கரெக்ட்... அந்த விளம்பரங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.. உண்மை, அது ஒரு பொதிகை காலம்....

Unknown said...

இப்பவும் நீங்க அமுல் சுரபி பார்க்க விரும்பினா இங்க பார்க்கலாம்!


http://www.amul.tv/amultv/televisionshows.html