Saturday, June 28, 2008

தலைமுறைகளுக்கு முன்னால்...!

ஹைவே ஜங்க்ஷனில் இருந்து இரண்டு நிமிடம் தொலைவில் இருந்தோம். மெயின் ரோட்டில் இருந்து விலகி, சைட் ட்ராக்கில் போய், ஒரு மோட்டலில் நின்றது. வேறு சில வண்டிகள் நின்றிருந்தன. குழுமத்தில் ஒன்றாக நான் பயணம் செய்யும் கலமும் நின்றது.

"ஸார்! வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம். டாய்லட் இருக்கு. யூஸ் பண்ணிக்கலாம்.." பக்க விளிம்பில் குரல் தேய்ந்து மறைந்தது.

பத்து நிமிடம் வண்டி நிற்கும்!

எந்தப் பத்து நிமிடத்திற்கு அப்பால், கலம் கிளம்பும்? முன்னால் போயா, இல்லை பின்னால் போயா..?

"Tஎ3@65gH..! உங்களது மெடிக்கல் ரிப்போர்ட் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..! பெற்றுக் கொண்டு, எங்கள் ஸ்கேனரில் ஒரு ஃபேஷியல் அக்னாலெட்ஜ்மெண்ட் அட்டாச் செய்து விடுங்கள்..! எங்கள் சர்வீஸை பயன்படுத்துவதற்கு நன்றி!" வயர்லெஸ் ரிஸீவரின் இன்பாக்ஸைத் திறந்தேன். செக்யூரிட்டி ரீஸன்களுக்காக அயனைஸ் செய்யப்பட்டு அட்டாச் செய்யப்படிருந்த ஃபைலை எடுத்தேன். டீ அயனைஸ் செய்வதற்காக சேர்க்கப்படும் பேஸின் இரகசியக் குறியீட்டைச் சொன்னவுடன், க்ரீன் சிக்னல் எரிந்தது. அதன் குளிர்வெப்ப பின்புலத்தில் என் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, ரிப்ளையாக அனுப்பப்பட்டது.

கருவியை அணைத்தேன்.

ரிப்போர்டை எடுத்தேன். ரீடரின் க்ளிப்பில் செருகி வைக்க, ரீடர் படிக்கத் தொடங்கியது.

"Tஎ3@65gH..! AD4534 செப்டெம்பர் 27 அன்று உங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மெடிஸினரி அனலிசிஸ் ரிப்போர்ட் இது! உங்களுக்கு அல்ஸர் இருப்பது உறுதியாகி உள்ளது. இது மாதாந்திர ரிப்போர்ட்களின் ரிசல்டுகளை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் டிஸீஸ் அண்ட் அனலிசிஸ் விங்கில் உங்கள் பெயரைப் பதிவு செய்கிறீர்களோ அவ்வளவு நல்லது. இன்றேல், அரசாங்கத்தின் கவனத்திற்கு ரிப்போர்ட் எடுத்துச் செல்லப்படும். நன்றி..!" ரீடர் தூங்கப் போனது.

நான் அவசரமாக என் சீஃபை அழைத்தேன்.

'Tஎ3@6gH! சீஃப் தற்போது உங்களால் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே என்னைத் தாங்கள் கருத்தில் கொள்ளலாம்..!" ரோப்_54G மாடல் கூறியது.

சீஃப் அவ்வளவு சீக்கிரம் சிக்கக் கூடியவர் அல்ல. அவருக்கு இருக்கும் வேலைகள் அத்தகையன. எனவே சீஃப் போன்ற அத்தியாவசிய பிரஜைகளுக்காக சிமுலேட்டட் ரோபோக்கள் டிசைன் செய்யப்பட்டு உள்ளன. ரோப்_54G அத்தகைய மாடல்.

இந்த மாடல்கள் தமது உரிமையாளரோடு நெருங்கிப் பழகும். அவரது உணர்ச்சிகள், கோபங்கள், தவறுகள், ஆசைகள், முடிவெடுக்கும் நுட்பம், க்ரைசிஸ் அனலைஸ் செய்யும் பாங்கு யாவற்றையும் தமது மெமரியில் பதிந்து கொள்ளும். செட் செய்யப்பட்ட டைமர் காலத்திற்குப் பிறகு இந்த மாடல்களை மட்டுமே ஒரு குறிப்பிட்ட ரேங்கிற்கு கீழ் உள்ள ஆபீஸர்கள் தொடர்பு கொள்ள முடியும். சுருங்கக் கூறின், ரோப்_54G தான் எனது இப்போதைய சீஃப்.

ஒரே வித்தியாசம். சீஃப் நல்ல சிவப்பாக இருப்பார். கிள்ளினால் ரத்தம் கட்டிக் கொண்டு சிவப்பாகத் தெரியும். சிரிப்பார். இந்த சிமுலேட்டட் சீஃப்க்கு சதையும் கிடையாது. ரத்தம் கிடையாது. லேசாகத் தட்டினால், 'நெர்வ் நம்பர் 0x234எ சிக்னல் ரிஸீவ் செய்யப்பட்டது. 0.3 ஆம்பியர் கரண்ட் பாஸ் ஆகியுள்ளது. மெமரி பாங்க் ஃபார் சிஸ்டம் ஸ்டேட் அப்டேட் செய்யப்பட்டு விட்டது. உங்களது அடுத்த எக்ஸைடேஷன் சிக்னல் என்ன?' என்று கேட்கும், உணர்ச்சியே இல்லாமல்! பொம்மை தலைவர்.

"சீஃப்! இன்று அர்ஜண்ட் மெடிஸினரி ரிப்போர்ட் கிடைத்தது. அது மந்த்லி ரிப்போர்ட்டை உறுதிப்படுத்தி உள்ளது. என்ன செய்வது இப்போது..?" கேட்டேன்.

"அறிவோம் Te3! எனக்கும் ஒரு காப்பி வந்தது..!"

"நீங்கள் தான் ட்ரீட்மெண்ட் பிறகு எடுத்துக் கொள்ளலாம். நியர் ஃப்யூச்சர் ரெகக்னைசரில் செக் செய்து எனது ஹெல்த்திற்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றீர்கள். ப்ராஜக்ட் முடித்துத் தர வேண்டியது தான் முக்கியம் என்றீர்கள். இப்போது கவர்ன்மெண்ட் ஆர்டர் வந்து விட்டது. கூடிய சீக்கிரம் டி.ஏ.வி.யில் பெயர் பதிவு செய் என்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்..?"

சீஃபை போல் மூக்கை சொறிந்து கொண்டது. இப்படி செய்தால் அவர் யோசிக்கிறாராம். சில சமயம் மூக்கின் மேல் குறுகுறுப்பு வரும் போதும் மனிதர்கள் இப்படி தேய்த்துக் கொள்ளுவார்கள் என்பது இந்த முட்டாள் ரோபோவிற்கு தெரிந்திருக்கவில்லை.

"Te3! நீங்கள் அட்மிட் ஆவது தான் சரி! அரசாங்கத்தினோடு முரண்பட முடியாது. கூடாது. ப்ளக்கை பிடுங்கி விட்டு விடும். நலம் ரிப்போர்ட் வந்தவுடன் சந்திப்போம்..! நன்றி! வணக்கம்..!" ஸ்க்ரீனில் புள்ளியாகச் சுருங்கி மறைந்தது.

சேனலை ட்யூன் செய்து அரசாங்கத்தின் மெடிசினரி தொடர்பாளரைப் பிடித்தேன். மற்றொரு மாடல் தோன்றியது.

"நான் டி.ஏ.வி.யில் அட்மிட் ஆக விரும்புகிறேன். எனக்கு ஒரு அட்மிஷன் கொடுக்கவும். மேலும் 60G ட்ராவலுக்கு விசாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்."

"Te3! நீங்கள் இந்த சமயத்தில் 60G ட்ராவல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? டி.என்.ஏ. பாங்கில் இருந்து ரீப்ளேஸ்மெண்ட் செய்து மாற்று அமைப்புகளோடு தங்கள் பணியைத் தொடரலாமே!"

"டாக்டர்! எனக்கு வந்திருக்கும் நோயை நீங்கள் ஜஸ்ட் மற்றுமொரு டிசீஸாகப் பார்க்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை இது டி.என்.ஏ. நூல் சரட்டின் சடைப் பின்னலில் ஒரு பிசிறு. ஒட்டிக் கொண்டு வந்துள்ளது. அறுபது தலைமுறைகளுக்கு முன்னால் எனது முன்னோரில் ஆரம்பித்து அறுபது தலைமுறைகளாக அமுங்கி இருந்து, இப்போது என்னில் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன். அந்த ஆரம்பப் புள்ளி! எப்படி இருந்தார்? எதனால் இந்த நோய்க் காரணம் ஆரம்பித்தது என்பதை அறிய விரும்புகிறேன்..."

"அதை நீங்கள் ஹிஸ்டாரிக்கிள் டேட்டாபேஸில் சேர்ச் செய்து, வீடியோவாகப் பார்த்துக் கொள்ளலாமே..?"

"டாக்டர்! அது எல்லாம், டைம் மெஷின் வருவதற்கு முன்பாக ரீஸனல் கால்குலேஷனுக்காக சேகரித்து வைக்கப்பட்டவை. இப்போது தான் மெஷின் வந்து விட்டதே. நேரிலேயே சென்று பார்க்கும் வாய்ப்பு இருக்கையில், எதற்காக டேட்டா பேஸ்..?"

பின் அனுமதி கிடைத்தது. இப்போது கலத்தில் அமர்ந்திருக்கிறேன்...! இன்னும் இரண்டு நிமிடத்தில் கிளம்பி விடும்.

இது போன்ற அனுமதி கிடைப்பது சிரமம். ஒரு கலீக் இவ்வாறு பாட்டி இறந்து விட்டதாகச் சொல்லி விடுமுறை கேட்க, டைம் மெஷினில் சென்று பிறகு பார்த்துக் கொள் என்று சொல்லப்பட்டது. அதே போல் ஃப்யூச்சருக்குப் போய் ப்ராடக்டை எடுத்து வரலாமே? அது தான் முடியாது. ஃப்யூச்சரில் போய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் திரும்பவும் ரிடர்ன் வருகையில் அந்தப் ப்ராடக்ட் கரைந்து கொண்டே வந்து, ஆரம்ப நிலைக்கு வரும் போது, அதே பழைய நிலையிலேயே நின்றிருப்போம். அந்த நினைவுகளும் அவ்வாறே படிப்படியாக அழிக்கப்பட்டு, சுழி நிலைக்கு வந்து விடுவோம். ஏனெனில் அப்பொது தான், லீனியர் ஸ்கேலில் ஃப்யூச்சரை நோக்கி போகையில் படிப்படியாக ஞாபகங்களும், ப்ராடக்ட் வளர்ச்சியும் கிடைக்கும் என்ற இயற்கையின் எளிமையான வழிமுறை.

Nature hates Discontinuity.

இந்த கட்டுப்பாடு இறந்த காலத்திற்கு செல்கையில் இல்லை. இறந்த காலத்திற்குப் போய் வருகையில் வெறும் நினைவுகளை மட்டுமே கொண்டு வருவோம். கடந்த காலத்தின் காட்சிகளை கலைக்க முடியாது. ஒரு சலனப்படம் பார்ப்பது போல் பார்த்து விட்டு வரலாம். அவ்வளவு தான். கடந்த காலத்தில் சென்று புதிதாக ஏற்றுக் கொள்ளும் நினைவுகள் மீண்டும் நிகழ்காலத்திற்குப் பயணம் திரும்புகையில் நடக்கும் சம்பவங்களைப் பாதிக்காத வகையில் மட்டுமே நினைவில் இருக்கும். இயற்கையின் மற்றுமொரு விளையாட்டு விதிமுறை இது..!

நான் பயணம் செய்யும் கலம் இந்த ட்ரிப்பில் கடந்த காலத்திற்குச் செல்கிறது. மேலும் சில கலங்கள் எதிர் காலத்திற்குச் செல்லும். அதாவது கடந்த காலத்தில் இருந்து கரண்ட் நிகழ் காலத்திற்குச் செல்கின்றன. நாங்கள் கடந்த காலத்திற்குச் செல்லும் ரூட்டில் மிட் வேயில் நின்று கொண்டிருக்கிறோம்.

"ம்மா..! பசிக்குதும்மா..!"

"கொஞ்சம் இருப்பா..! அப்பா வந்திடுவாங்க..! வரும் போது நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க..! இதோ அப்பா வந்திட்டாரு..? என்னங்க வெறும் கையோட வர்றீங்க..!"

"இன்னிக்கும் சம்பளம் அறுபது ரூபா தான் குடுத்தாங்க. வரும் போது மளிகை கடைக்காரர் பழைய கடனுக்கு வாங்கிட்டாரு..! புள்ள சாப்பிட்டுச்சா..?"

"ஐயையோ..! இல்லியே..! ஏங்க உங்களுக்கு சம்பளம் நூறு ரூபானு தானே வாத்தியார் அன்னிக்கு சொன்னாரு! சாலைப் பணியாளர்களுக்கு நூறு ரூபானு தான சொன்னாரு..?"

"அந்த மேஸ்த்ரி அறுபது ரூபா தானே குடுக்கறான்..! உன் சம்பளத்துல ஏதாவது வாங்கிட்டு வந்து பையனுக்கு குடுக்க வேண்டியது தானே..?"

"அதுல வாங்கி குடுத்து தான் கொஞ்சம் பசி அடக்கிருக்கான். ஆனாலும் வளர்ற வயசு..! நல்ல பசி எடுக்கும் இல்லியா..? உங்களுக்கு அறுபது ரூபா வந்தாலும் போதுமான சாப்பாடு குடுத்திட்டு இருந்தோமே? இப்ப என்னங்க ஆச்சு..?"

"வெலவாசி எல்லாம் ஏறிப் போச்சு..! இந்தியாவிலயே போதுமான சோறு இல்லியாம்..! வெளி நாட்டுல எல்லாம் சாப்பாட்டை எரிச்சு பெட்ரோல் ஆக்கறானாம். அதனால உலகம் முழுக்க சாப்பாட்டு பத்தாக்குறையாம்! அதனால வெலவாசி ஏறிப் போயிடுச்சுனு வர்ற வழியில வாத்தியார் சொன்னார்..!"

"அடக் கருமம் புடிச்சவங்களா..! அவனுங்க நல்லா இருக்கறதுக்கு ஏழைங்க நம்ம வவுத்துல அடிக்கறாங்களே..! அவனுங்க நல்லா இருப்பாங்களா..?"

"ம்மா..! வயிறு வலிக்குதும்மா..!"

"ஐயோ ! என்னடா கண்ணு பண்ணுது..?"

"தெரீலம்மா..! ஐயோ! பயங்கரமா வலிக்குதே..!"

"என்னங்க..! வாங்க புள்ளய கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போவோம்..!"

"ன்னங்க பையனை இந்த நிலைமையில கொண்டு வந்திருக்கீங்க..? சரியா சாப்பாடு குடுக்கறதில்லையா..?"

"ஐயா..! நாங்க என்னய்யா பண்றது..? வர்ற சம்பளம் கால் வயித்துக் கஞ்சிக்கு கூட பத்த மாட்டேங்குதே..!"

"பாருங்க..! பையனுக்கு சரியா சாப்பாடு போடாததனால, உணவுக்குடல் கொஞ்சம் புண்ணாகி இருக்கு. அல்சராக இருக்க வாய்ப்பு இருக்கு..! எதுக்கும் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குங்க..! பட் இது தலைமுறைகளாத் தொடரவும் வாய்ப்புகள் இருக்கு. கவனம்..!"

"முருகா..!"

நான் ஒரு பொம்மை போல் இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாட்டின் ஊழல், அக்கறையின்மை, சுயநலத் தன்மை எப்படி தலைமுறைகளைத் தாண்டியும் பாதிக்கின்றது...!

தாத்தா..! தாத்தா..! என்று மனம் அரற்றியது...!

6 comments:

யோசிப்பவர் said...

//The familial accumulation of peptic ulcer disease observed in several studies may be attributable to genetic effects, aggregation of environmental exposure (shared environment), or both. The intrafamilial spread of Helicobacter pylori infection has raised the question whether shared environment could explain the familial aggregation of peptic ulcer disease rather than genetic similarity of family members.
//
இதை வைத்துக் கொண்டு கதை பின்னியிருக்கிறீர்கள். ஆனால் அல்சருக்கு தலைமுறை வழி உறவு mandate ஆனதல்ல. அது ஒரு சாத்தியம். அவ்வளவுதான்.

கதை அருமையாக உள்ளது. ஒவ்வொரு கதையும் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. புத்தக பரிசை அடைந்தே தீருவதாக சங்கற்பமா?!;-))

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

ஹி..! ஹி..! பார்த்துட்டீங்களா...!

எனக்கும் டவுட் வந்திச்சு. பட், பாஸிபிளிட்டி இருக்குங்கறதுனால கதைக்குள்ள கொண்டு வந்தாச்சு...!

உங்க வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷங்க...! பரிசு கிடைச்சா மகிழ்ச்சி தாங்க...!

PPattian said...

நீங்கள் இந்த போட்டிக்கு எழுதி இதுவரை நான் படித்ததிலேயே இதுதான் உங்கள் பெஸ்ட்.

எதிர்கால, இறந்தகால பயணம் தொடர்பான விளக்கங்கள் சூப்பர். அதே போல மற்ற அறிவியல் சமாச்சாரங்களும்..

ஆனாலும், பெற்ற பிள்ளைக்கு சோறிட முடியாமல தவிக்கும் பெற்றோர் நிலை மனதை வருந்த வைக்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.. வெற்றிதான்..

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன் சார்...

மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு...!

இதுக்கு கொஞ்சம் கிட்டக்க வர்ற சயின்ஸ் பிக்ஷன் இன்னொண்ணு, இங்க இருக்கு பாருங்க. ::

http://kaalapayani.blogspot.com/2008/06/blog-post_24.html

Anonymous said...

Great !!! Touching !

இரா. வசந்த குமார். said...

Dear Xavier Sir...

Grateful for your presence and present.. ;-)