Thursday, July 10, 2008

பேசும் பொம்மை.

வெள்ளை அலுமினியம் வர்ணம் பூசிய பழைய தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம், திருச்சிராப்பள்ளி தடம் எண் 1 எங்களை தெற்குவாசலில் தள்ளி விட்டது.

பாத்திரக் கடைகள். விளக்கு. ரங்கநாதர் ஓவியம். புகைப்படம். லாண்ட்ரி ஷாப். புத்தகக் கடை. காரை ரோடுகள். டிவைடர். அதில் சாரதாஸ். ரிக்ஷாக்கள். ஆடியோ, வீடியோ சி.டி. ஷாப். இருளான ஓட்டு வீடுகளில் கம்பித் தடுப்பு திண்ணைகள். பூக்கடைகள். இராஜகோபுரத்தின் மேல் வர்ணங்கள். நிறைய நிறைய பொம்மைகள்.

இந்த பொம்மைகள் ஏன் என்னிடம் பேசவில்லை? அவருக்கு இவை தேவையில்லையா..?

பார்த்துக் கொண்டே நடந்தோம்.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பேசுவதற்கான சந்தர்ப்பங்களும், பேசுபொருள்களும் குறைந்து கொண்டே வந்து இன்றைய காலகட்டத்தில் மெளனத்தால் நிரப்பப்பட்டு உள்ளோம். வாசலுக்குள் நுழைந்து பிரம்மாண்ட கருடாழ்வாரை சேவித்து விட்டு, பாம்பு வால் போல் வளைந்திருந்த வரிசைகளில் கூட்டத்தில் இணைந்து கொண்டோம். வழக்கமான சனிக்கிழமை முற்பகலின் திருவரங்கம்.

"என்னங்க ஒரு மாதிரியா பாக்கறீங்க..?"

என் பார்வை செல்லும் புள்ளியை பாத்தாள். முன் மண்டபத்தின் தூண்கள். தூண்களில் ஒன்று.
பின்னிரண்டு கால்களை ஊன்றி முன்னிரண்டு கால்களைத் தூக்கிக் கொண்டு பிளிறும் குதிரை. அதன் மேலிருக்கும் வீரனின் வலக்கை வேல் கீழிருந்து பாயும் யாளியைக் குத்திக் கொண்டிருந்தது, என்னைக் கவரவில்லை. வீரனின் கண்கள் என்னையே பார்ப்பதுவும், கண் சிமிட்டுவதும் என்னை ஈர்த்தன.

நான் பஞ்சாபகேசன்.

இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்நாட்களில் இது போன்ற பெயர்களை யாரும் வைப்பதில்லை. என் மகனுக்கு மகேஷ். எங்கு இருக்கிறான் இப்போது? சி.ஏ.வில் ஒரு எம்.என்.ஸி.யில் நிர்வாகத் துறையில். அவன் அவ்வப்போது அனுப்பும் டாலர் துளிகளிலும், பென்ஷன் தொகையிலும் ஜீவித்து வயலூர் அருகே ஒரு மனையில் இருக்கும் ஒரு ரிட்டையர்ட் கவர்ன்மெண்ட் சர்வென்ட் நான்.

திருச்சியும் அதன் பகுதிகளும் எனக்கு புதிதாகப் படவில்லை. சிம்லா, டேஹ்ராடூன், மைசூர் என்று தேசத்தின் பல வனப் பிரதேசங்களில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக இருந்து, சீஃப் செக்ரட்டரியாக உதிர்ந்தவன்.

காலையில் ஃபில்டர் காபி குடித்து விட்டு, இந்துவில் படர்ந்து விட்டு, அவ்வப்போது எழுந்து நடை பயின்று, முடிந்தால் மாநகருக்கு வந்து ஷாப்பிங் செய்து விட்டு, இடைப்பட்ட நேரங்களை குட்டித் தூக்கங்களால் கழித்து விட்டிருந்த ஒரு சாதாரணனாக இருந்தேன்.

இந்த விசித்திர பிரச்னை என்னை ஆட்கொள்ளும் வரையில்...!

சென்ற மாதத்தின் ஒரு நாள் மலைக்கோட்டைக்குச் சென்றோம். குறுகிய வாசல்களைக் கடந்து, ஜன்னல் கம்பிகளின் வழியே கீறலாய் விழுந்த சூரியக் கதிகளின் மென் வெம்மையில் நனைந்தபடி மேல் சென்றோம். டிக்கெட் வாங்கிக் கொண்டு 'ப்ஹா'வென திறந்திருந்த மலை உச்சிக்கு வந்தோம். பாறையை செதுக்கிய படிக்கட்டுகள். கம்பிகளைப் பிடித்து ஏறுகையில் 'விர்.. விர்' என அடித்த காற்றுக்கு தடுமாறினேன்.

பிள்ளையாரை வணங்கி விட்டு கீழ் இறங்குகையில் பார்த்தேன்.

ஒரு கறுப்பாடு. சில குட்டிகள். அத்தனை காற்றுக்கும், அத்தனை உயரத்திற்கும் அசையாது தாவித் தாவி மேலே ஏறியும், கீழே இறங்கியும் விளையாடிக் கொண்டிருந்தன. வியப்பாக இருந்தது. பந்திப்பூரில் பார்த்த புலிக்குட்டிகளின் அதே லாவகம், விறுவிறுப்பு, துடிதுடிப்பு இந்த ஆட்டுக்குட்டிகளிடமும்!

"ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா..?"

யார் சொன்னது? திரும்பிப் பார்த்தேன்.

அவள் கீழே சென்று சோடா கடையில் கலர் வாங்கிக் கொண்டிருந்தாள். சில கல்லூரி மாணவர்கள். ஒரு சிறுவன். நெற்றியில் குங்குமங்கள் அணிந்த ஒரு வடக்கத்து குடும்பம். காற்று. தலை விரித்து ஆடும் அரச மரம். கொஞ்சம் வெயில். கொஞ்சம் நிழல்.

வேறு யாரும் இல்லை.

வியப்பாக இருந்தது. கொஞ்சம் பயமாகவும். மனப்பிரமை என்று தீர்மானித்து கீழ் இறங்கத் தொடங்கினேன்.

"நில் பப்லு..! என்னைத் தெரியவில்லையா..?"

திடுக்கிட்டேன். பப்லு! எனது செல்லப் பெயர். இங்கே யாருக்குத் தெரியும்? உற்றுப் பார்த்தேன். பாறைகளின் செதுக்கில் ஒரு பிள்ளையார் சிலை. நான் பார்த்ததும் அதன் கண்கள் சிமிட்டின. சிரித்தது.. இல்லை.. சிரித்தார்.

"என்ன பப்லு! என்னை தெரியவில்லையா..?"

அருகில் சென்று அமர்ந்தேன். கடவுள் பேசுகிறாரா என்ன? இந்த கலியுகத்தில், ஏர்டெல் டவர்களும், நிமிடத்திற்கு ஒரு முறை பஞ்சாய் பறக்கும் விமானங்களும், கலர் குடித்து, என்னை கேள்விக்குறியாய் புருவம் வளைக்கும் சகதர்மிணி பார்க்கையில் எனக்கு கடவுள் பேசுகிறார். வியர்ட். டோட்டலி வியர்ட்.

"நீங்கள் யார்..?" எனக்கென்னவோ கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று தோன்றியது. எனது மனக்குரல் தான் வெளிப்பட்டு பேச வேண்டும் என்று நம்பினேன்.

"பப்லு..! நான் கடவுள் இல்லை. உனது பழைய முன்னோர்களில் ஒருவன். ஒரு சொத்து சம்பந்தமாக வியாஜ்யம் நடக்கின்றது அல்லவா? அதைப் பற்றி உனக்கு ஒரு உதவி செய்யலாம் என்று வந்துள்ளேன்..!"

நிஜம் தான். சிவரஞ்சனி தியேட்டர் அருகே ஒரு கையகல் நிலம் இருப்பதுவும் அது சம்பந்தமான பங்காளிச் சண்டை ஒன்று கோர்ட் வரை சென்று இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. அதை நாங்கள் எல்லோரும் மறந்து மாற்றி மாற்றி வாய்தாவுக்கும் வக்கீலுக்குமே செலவு செய்து கொண்டிருப்பதும் கூட!

"நம்புகிறேன்..! எனக்கு மட்டும் ஏன் உதவி செய்ய எண்ணுகிறீர்கள்..? அவனுக்கும் செய்ய வேண்டியது தானே..!"

"இல்லை. நியாயம் உன் பக்கம் இருக்கிறது. அதனால் தான் உனக்கு..!"

"ஏன் இப்படி சிலைக்குள் புகுந்து பேசுகிறீர்கள்..?"

"வேறு போக்கிடம் இல்லை எனக்கு.."

"என்னங்க என்ன ஆச்சு? டயர்ட் ஆகிட்டீங்களா..? படியிலயே உக்காந்துட்டீங்க..?" வந்து விட்டாள்.

"பாரு! பார்த்தியா? சிட்டி கேஸ்ல நமக்கு உதவி செய்வதற்காக ஒருத்தர் வந்திருக்கார். இந்த பிள்ளையார் சிலை மூலமா என் கூட பேசினார்.. "

அவள் பார்த்தாள். ஒன்றும் அசைவில்லை. பிடித்து வைத்த பிள்ளையார் போலவே இருந்தார்... இல்லை, இருந்தது.

"உடம்பு சரி இல்லையா..? ஏதேதோ பேசறீங்க? சிலை பேசுதா? வெளிய சொல்லாதீங்க..."

எழுந்து நடந்தோம். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. மலை ஏறி இருக்கிறோம் அல்லவா? குழப்பம்.

அடுத்து தாயுமானவர் கோயிலுக்கு சென்றோம். அங்கேயும் ஒரு சிலை. வேறு சிலை. பேசத் துவங்கியது.

"உன் மனைவி நம்ப மாட்டாள். அவள் மட்டும் அல்ல. யாரும் நம்ப மாட்டார்கள். ஏன் நானாக இருந்தாலும் நம்ப மாட்டேன். ஆனால் இது உண்மை..!"

நான் பயந்து போனேன் இம்முறை. எல்லா சிலைகளும் பேசின. நாங்கள் நடக்க நடக்க ஒவ்வொன்றில் இருந்து தாவித் தாவி அதுவும் வந்தது; கேட்டது.

இப்போது இந்த திருவரங்கத்திலும்!

சந்தேகமின்றி தெரிந்து விட்டது இது ஏதோ ஒரு நோய். யோசித்துப் பார்த்தேன்.

நான் யார்? ஒரு ரிட்டையர்ட் ஆபிஸர். அறுபது வருடங்களாய் காடு காடாய் சுற்றி விட்டு இப்போது கான்க்ரீட் காடுகளுக்குள் அமிழ்த்தப்பட்டு இருப்பவன். வேலை காரணமாய் ஊர் ஊராய்ச் சுற்றி விட்டு, இப்போது செய்வதற்கு வேலைகள் அற்று சும்மா சோம்பி இருப்பவன். சும்மா இருக்கும் உள்ளம் சாத்தான் விளையாடும் மைதானம். பழைய கேஸ் ஒன்று இழுத்துக் கொண்டிருக்கின்றது. அது எப்போது முடியும் என்ற கவலை.

எல்லாம் சேர்ந்து ஒரு குழப்ப நிலையில் என்னை நிறுத்தி இருக்கின்றன. என் ஆசைகள் வெளியேறி ஒரு குரலாய் உருவெடுத்து, என்னையே குழப்பி ஒரு மெண்டல் ஸ்டேட்டுக்கு கொண்டு வந்து...

பலே... பலே... என்னிடமா..?

தரிசனம் முடிந்ததும் உடனடியாக ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும். சுற்றுமுற்றும் சிலைகளின் குரல்கள் என்னை தொடர்ந்து கொண்டே வந்தன. "டாமிட்..!" என்று ஒரு முறை கத்தி விட்டேன். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

ருவரும் உள்ளே இருந்தோம். டாக்டர் தேவசகாயம் சிரித்தபடி இருந்தார். அறை கொஞ்சம் சிறியதாக இருந்தது. ஒரு ஸ்டெதஸ்கோப், ப்ரஷர் மீட்டர். வாசனையான சில ஊதுபத்திகள். டேபிள். சேர். மறைவான பச்சை துணிக்கு பின் உயரமான கட்டில். ஒரு கழுத்துயர பீரோ. பீரோவின் மேல் ஒரு தியான புத்தர்.

"சொல்லுங்க.. உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..?"

நான் புத்தரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இப்படித் தான் டாக்டர்..! எங்க போனாலும் ஒரு பொம்மையையே பார்த்துக்கிட்டு இருக்கார். கேட்டா, பொம்மை பேசுச்சு கேட்டியாங்கறார். வெளிய ஒரு எடத்துக்கு போய்ட்டு வர முடியல. பயமா இருக்கு. நீங்க தான் சரி பண்ணனும்..? அமெரிக்கால இருக்கற பையனுக்கு சொல்லி இருக்கேன். வர்றேன்னு சொன்னான். நீங்க சரி பண்ணாட்டி அங்க தான் கூட்டிட்டு போகணும்.."

"அழாதீங்கம்மா.. எல்லா ஃபெசிலிட்டீஸும் இப்ப இங்கயே வந்தாச்சு. நாங்க பார்த்துக்கறோம். மிஸ்டர் பஞ்சாபகேசன்! இங்க பாருங்க. உங்களுக்கு எப்ப இருந்து இந்த ப்ராப்ளம் இருக்கு. சார்! இங்க பாருங்களேன்..!"

"என்னங்க... டாக்டர் கூப்பிடறார் பாருங்க...! என்னங்க..?"

ஒரு குரல் தானே கேட்டுக் கொண்டிருந்தது? இப்போது இரு குரல்கள் கேட்கின்றனவே. ஆச்சரியமாக புத்தர் சிலையையே பார்த்தேன்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

5 comments:

யோசிப்பவர் said...

//இந்த பொம்மைகள் ஏன் என்னிடம் பேசவில்லை? அவனுக்கு இவை தேவையில்லையா..?
//

இங்கே ஏதாவது பிழையிருக்கிறதா?

முடிவை இன்னும் வேறு மாதிரி (வலுவாக) சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

ஆம். சிறு பிழை.

அவருக்கு என்று இருந்திருக்க வேண்டும். மன்னிக்க. 'பிழை'(த்துப்) போகட்டும்.

அவருக்கு நோய் அதிகமாகிக் கொண்டே போகின்றது என்று முடித்திருக்கிறேன்.

இதை எழுதும் போதே, வாத்தியாரின் 'ஆ' நினைவு வர ஆரம்பித்து விட்டது. எனவே இத்துடன் நிறுத்த வேண்டியதாகியது. இல்லாவிடில் 'காப்பி' பட்டம் கிடைத்திருக்கும். ;-)

PPattian said...

A Beautiful Mind படத்தை போல ஸ்கீசோப்ரெனியாவா?

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன் சார்...

இது exactly ஸ்கீசோப்ரெனியா அல்ல..! அதில் ஒரு வகை. ஆடிட்டரி ஹாலிஸினேஷன் என்று... முழுமையாகச் சொல்லி விட முடியாது.

அவரே சொல்கிறார் அல்லவா...

/*நான் யார்? ஒரு ரிட்டையர்ட் ஆபிஸர். அறுபது வருடங்களாய் காடு காடாய் சுற்றி விட்டு இப்போது கான்க்ரீட் காடுகளுக்குள் அமிழ்த்தப்பட்டு இருப்பவன். வேலை காரணமாய் ஊர் ஊராய்ச் சுற்றி விட்டு, இப்போது செய்வதற்கு வேலைகள் அற்று சும்மா சோம்பி இருப்பவன். சும்மா இருக்கும் உள்ளம் சாத்தான் விளையாடும் மைதானம். பழைய கேஸ் ஒன்று இழுத்துக் கொண்டிருக்கின்றது. அது எப்பொது முடியும் என்ற கவலை.

எல்லாம் சேர்ந்து ஒரு குழப்ப நிலையில் என்னை நிறுத்தி இருக்கின்றன. என் ஆசைகள் வெளியேறி ஒரு குரலாய் உருவெடுத்து, என்னையே குழப்பி ஒரு மெண்டல் ஸ்டேட்டுக்கு கொண்டு வந்து...
*/

அவருக்கே அது நோய் என்று தெரிகிறது. ஆனால் அவரையும் மீறி நோய் இழுக்கிறது. அதைத் தான் கடைசியில் கூறி இருக்கிறேன். ஒரு குரல் கேட்டது இப்போது மனைவி மற்றும் டாக்டரின் குரலும் பொம்மையில் இருந்து வருவதாக கருதுகிறார் என்று...!

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன் சார்...

A Beautiful Mind போன்ற விஷுவல் ஹாலுஸினேஷனும் எழுதி இருக்கிறேன், ஒரு குறு நாவலாக!

ப்ளீஸ் காண்க ::

http://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_25.html