Wednesday, July 30, 2008

மண்ணடி மகாவிஷ்ணு.

ண்ணடி வந்திருக்கிறீர்களா?

மளிகைக் கடைகளும், லாரி புக்கிங் ஆபீஸ்களும், வெஜ், நாந்வெஜ் ஓட்டல்களும், மாட்டு வண்டிகளும், சைக்கிள் ரிக்ஷாக்களும், கட்சிக் கொடிகளும், பேனர்களும், முத்தாலம்மன் கோயிலும், ஊதுபத்தி புகையும் எஸ்.டி.டி. பூத்தும், மஞ்சள் மண்டிகளும், வேப்ப மரங்களும் நிரம்பிய எந்தவொரு நகரின் வணிகப் பகுதி போலத் தான் இருக்கும்.

ஆனால் மண்ணடி எனக்கு வித்தியாசமானது.

குறுகிய படிக்கட்டுகளால் செல்லும் ஒற்றை அறையினை மேல் கொண்டு, கீழே வீட்டுக்காரர் இருக்கும் குடித்தனத்தின் எனக்கான பாத்ரூமில் ஒருநாள் மஹாவிஷ்ணு காட்சி அளித்தார் என்றால் நம்புவீர்களா?

"ஏ பசங்களா! கீழ போய் விளையாடுங்க போங்க!" கொஞ்சம் கம்ம்பிய குரலில் கம்மியான வால்யூமில் கூவினேன். சம்மர் லீவுக்கு மாமி வீட்டுக்கு வந்திருக்கும் வானரக் கூட்டம் எனக்கான குளியலறையில் இருந்து தண்ணீரை வாரி இறைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

கையில் வாளி, இடுப்பில் வேட்டி, தோளில் ஒரு துண்டுடன் பரிதாபமாக நின்ற என்னைப் பார்த்து என்ன தோன்றிற்றோ, என் மேல் ஒரு வீசு வீசி விட்டு, ஓடியது ஒரு கு.குரங்கு.

மூன்றடிக்கு இரண்டடியில் இருந்தது. தகரத் தடுப்பு. மேல் கீழ் முனைகள் கூர்மையுடன் ஆங்காங்கே பொத்தல்கள் விழுந்து, உள் இருப்பவனின் மானத்திற்கு வேட்டு வைக்கும். ஒரு பக்கெட். மஞ்சள் கலந்த உப்பு நீர். பலியாடு போல் நான். தகரத்தை இழுத்து சாத்தி கொக்கினேன். 'க்றீச்'.

காற்றில் ஈர லக்ஸ் வாசம். கைக்கு எட்டும் உயரத்தில் பதிந்திருந்த கல்லில் ஒரு மஞ்சள் துண்டு கரைந்து சுவரில் வழிந்திருந்தது. சுமித்ரா வந்து குளித்திருக்க வேண்டும். மாமி மகள். நெல்லை காலேஜில் இரண்டாம் ஆண்டு.

நன்றாக மூச்சை இழுத்து மஞ்சளை உள் நிரப்பிக் கொண்டேன். துண்டை உதறி கட்டிக் கொண்டு, தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு, சுவரில் வழிந்திருந்த மஞ்சள் கரைசலின் படிவத்தைப் பார்க்க தூக்கி வாரிப் போட்டது.

க்ரீடம். சாந்தமான முகம். சக்கரம். சங்கு. கதை. முத்து மாலைகள். மஞ்சள் வேட்டி.

எனக்கு சிலிர்த்துப் போனது. அவரது கண்களில் ஓர் அமைதி தெரிந்தது. என் கண்களை தேய்த்து தேய்த்துப் பார்த்தேன். அது மகாவிஷ்ணுவே தான். முன்னரே நேரில் கண்ட அனுபவம் இல்லை எனினும், 'நான் தான் விஷ்ணு' என்று சொன்னால் கண்ணை மூடி நம்பலாம் போன்ற முகம்.

பாட்டியின் ஞாபகம் வந்தது.

"வேலு! அளுவாதப்பா. நீ எங்க போனாலும் பொழச்சுக்குவ. நான் உனக்காக சேர்த்து பாகவதம் படிக்கிறேன்பா. ஒரு நாள் இல்ல, ஒருநாள் நான் வைகுண்டம் போனவுடனே, பெருமாள்கிட்ட வேண்டிக்கறேன். என் பேரனைக் காப்பாத்துனு. நீ கவலைப்படாம பட்டணம் போப்பா!"

ரெண்டு வருடங்களுக்கு முன்பு பாட்டி போய் பெருமாளிடம் போட்ட பெட்டிஷனுக்கு, இப்போது தான் தரிசன்ம் சாங்ஷன் ஆகி இருக்கின்றது.

கண்களில் வழிந்த லைபாய் சோப்பின் நுரை மறைக்க, வழித்து விசிறினேன்.அது படலமாய் தெறித்து விழுந்தது.

ஒரு காட்சி அதில் தெரிந்தது.

ஒரு கப்பல். நான்கு புகைபோக்கிகள். கடல்.

ஏதோ ஒன்றை பெருமாள் என்னிடம் உணர்த்துகிறார் என்று தோன்றியது.

"வேலு! நாயக்கர் மண்டிக்கு எத்தனை பெட்டி போயிருக்கு? காதர் லாரி தான..?"

"..."

"டேய்! என்ன ஆச்சு உனக்கு? காலையில இருந்து ஒரு மாதிரியா இருக்க?"

"இல்லண்ணே! ஒரு கப்பல் ஹார்பருக்கு வந்து எறங்கறாப்ல எனக்கு தோணுதுண்ணே! அத பத்தி தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்! எதுக்கும் நம்ம லாரி எல்லாத்தையும் தயாரா வெச்சுக்குங்க. முடிஞ்சா வாடகைக்கு கிடைச்சா அதையும் ரெண்டுக்கு எடுத்து வெச்சுக்குங்க. மொத்தமா லாபம் வரும்னு எனக்கு தோணுது."

"என்ன உளற்ரே? புயல் சின்னம் வலுத்து 100 கி.மீ. தூரத்துல இருக்கு. எல்லா கப்பலையும் வைசாகுக்கு திருப்பி விட்டுட்டு இருக்காங்க. இப்ப போய் கப்பல் வருதுன்னுட்டு! போ! பகல் கெனா காணாத! பொழப்ப பாரு!"

அடுத்து நடந்தது தான் அதிசயம்.

புயல் வலுவிழந்து ஒரிசா, ஆந்திரா பார்டரை நோக்கி நடக்க, கொழும்புவில் இருந்து ரங்கோன் செல்லும் இலங்கையின் சரக்கு கப்பல் ஒன்று சுழலில் இருந்து தப்ப சென்னைக்குத் திருப்பப்பட்டது. சரக்கு முழுதும் வாழைத்தார், தேங்காய், அரிசி, எண்ணெய் - அத்தனையும் விவசாய வணிபப் பொருட்கள். கப்பலிலேயே வைத்திருக்க பொருள் கெடும் என ஹார்பரிலேயே சரக்கு இறக்கி பேர்பாதி விலைக்கு விற்று தீர்க்க, சிட்டி முழுதும் உணவு லாரிப் போக்குவரத்து அதிகரிக்க, இந்தப்பக்கம் செங்கல்பட்டு வரை, அந்தப்பக்கம் சித்தூர் வரை ராத்திரி , பகல் பாராமல் லோடு அடித்து... எல்லா லாரி ஓனர்களுக்கும் அந்த வாரம் செமத்தியான தீபாவளி.

"எப்படிப்பா வேலு உனக்குத் தெரிஞ்சுது?"

"எல்லாம் கடவுள் என்கிட்ட சொன்னதுண்ணே!"

கோடை விடுமுறை முடிந்து எல்லா வாண்டுகளும் சுமித்ராவும் அவரவர் வீட்டிற்கும் ஹாஸ்டலுக்கும் சென்று செட்டிலாகி விட, மகாவிஷ்ணு எனக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் காட்சி அளித்தார்.

சுவரில் படிந்த மஞ்சள் கரைசலும், விசிறி அடிக்கும் லைபாய் நுரையும் என் வருங்காலத்தை வளமாக்கின.

"அண்ணாச்சி! நீங்க இன்னிக்கு பூடான்ல 34-ல சீட்டு வாங்குங்க! அஞ்சு லட்சம் லம்ப்!"

"பீட்டரு! 1Cல போ! திருவொற்றியூர்லயே கை வெச்சிடாத! அடயறு ப்ரிட்ஜ் திரும்பும் போது கைக்கு கிடைக்கற பாக்கெட்டுல ப்ளேடிடு! மாசக் கடைசி தான். ஆனா கை நிரம்பும்னு தோணுது!"

"முருகா! இன்னிக்கு மங்காத்தா வேணாம். ரெய்டு இருக்கலாம்!"

"மாணிக்கம்! கிண்டில மூணுல காடு! மொத்தமும் அள்ளிக்கலாம்!"

"பாய்! இன்னிக்கு வாணியம்பாடி போவேணாம். லெதர் சரக்குல உன்ன ஏமாத்திருவான்!"

"நாயகம் சார்! இன்னும் ஒரு வாரத்துக்கு ஏர்போர்ட் பக்கமே போயிடாதீங்க! தூண்டிலோடு கஸ்டம்ஸ் காத்திட்டு இருக்கு.!"

"சார்! ஐ.டி. எப்ப வேணா உங்க மேல பாயலாம். இன்னும் மூணு நாள்ல எப்ப வேணா! தப்பிக்க ஒரு வழி தான் இருக்கு! வில்லிவாக்கம் பஸ் ஸ்டேண்ட் போனிங்கனா மேரி பிஸ்கட் ஸ்டால்னு ஒண்ணு இருக்கு. அங்க போய் ஜோசப்னு கேட்டீங்கனா வர்றவன்ட்ட என் பேரை சொல்லி பணத்தை குடுத்து வைங்க! நல்லதே நடக்கும்!"

"பரிமளம் அம்மா! கவலைப்படாதீங்க! உங்க பொண்ணுக்கு இன்னும் ஒரு மாசத்துல கரு உண்டாகும். இந்த எலுமிச்சம் பழத்தை பொண்ணை சுத்தி போடுங்க!"

ஏ.ஸி., சாட்டிலைட் டி.வி., பொலிட்டீசியன்ஸ் சப்போர்ட், பக்தர்கள் கூட்டம், பக்தைகள் வரிசை, சிஷ்ய கோடிகள், பால், செம்பு, காவி, தாடி, குங்குமம் என இப்போது ஃபுல் டைம் ஸ்வாமி வேல்முருகானந்தாவாக மாறிவிட்ட அடியேனைப் பார்க்க எப்போதாவது

மண்ணடி வந்திருக்கிறீர்களா?

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

5 comments:

வேளராசி said...

சூப்பர்

இரா. வசந்த குமார். said...

அன்பு வேளராசி...

நீங்க ஓட்டறீங்களா? இல்லை நெஜமாலும் தான் சொல்றீங்களானு தெரியல..!

இருந்தாலும் நன்றிங்கோ....!

Anonymous said...

மண்ணடிக்கு வருகிறேன் அந்த மஹாவிஷ்ணு வை பார்க்க ஆயினும் கதை நடை சூப்பர் ,

thamizhparavai said...

கதையோட்டம் அருமை.
மஞ்சளில் மஹாவிஷ்ணு...
அறிவியல் சிறுகதைக்கு இந்தக் கதையா...? நோக்கம் புரியவில்லை...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

இதில் அறிவியல் 'சைக்காலஜி' வடிவில் உள்ளது. ஒரு உருவத்தை மனித மனம் ஏதோ ஒன்றாக உருவகித்து, அதன் படி சொல்லிச் செல்ல சில பலிப்பதால், வேல்முருகன் வாழ்வே மாறிப் போகிறது.


மனித மனம் என்பது இன்னும் புரிபடாத ஒரு மாயக் கரும் குகை. அதில் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு.