Thursday, October 30, 2008

அவள் அத்தனை அழகு!

ன்று ஆனந்த தாண்டவம் பாடல்கள் கேட்டேன்.

வாத்தியாரின் அருமையான ரொமாண்டிக் நாவலான 'பிரிவோம் சந்திப்போம்' கதை என்று, இயக்குநர் காந்தி கிருஷ்ணா சொல்கிறார். மதுமிதாவாக தமனா. ரகுவாக ஒரு புதுமுகம். பார்ப்போம், எப்படி வருகின்றது என்று!

ஜி.வி.பிரகாஷ் குமார், இசை இளமையாக, ஃப்ரெஷ்ஷாக வர வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டிருப்பது போல் தெரிகின்றது.

ரேடியோ கம்யூனிகேஷனில், நிகழ்ச்சி அலைகள் குறைவான ஃப்ரீக்வென்ஸியில் (அதிர்வெண்) இருக்கும். அப்படியே அனுப்பினால், கொஞ்சம் தொலைவு செல்வதற்குள் ஆற்றல் காலியாகி காணாமல் போய் விடும். எனவே நெடுந்தொலைவு அனுப்புவதற்கு, கேரியர் வேவ் என்ற அதிக அதிர்வெண் அலையின் மேல் ஏற்றி அனுப்புவார்கள். அலையின் ஆற்றல், அதிர்வெண்ணிற்கு நேர்த் தகவு. அதாவது அதிர்வெண் அதிகரிக்க, அதிகரிக்க, அந்த அலை அதிக தொலைவு வரை செல்லும்.

ட்ரான்ஸ்மிட்டர் ஏரியாவில் கேரியர் அலையின் மேல், செய்தி அலையை ஏற்றி அனுப்ப, ரிஸீவர் ஏரியாவில், அழகாக அவற்றைப் பிரித்து, செய்தி அலையை மட்டும் ஸ்பீக்கர் வழியாக அனுப்பி, கேரியர் அலையை கெப்பாசிட்டர் வழியாக க்ரவுண்ட் செய்து விடுவார்கள்.

ஆனந்த தாண்டவம் பாடல்களைக் கேட்கும் போது, அத்தனை பாடல்களும் எங்கோ கேட்ட, பிரபலப் பாடல்கள் போலவே இருக்கின்றன.

வள் அத்தனை அழகாக இருந்தாள்.

உடலில், ஒளி ஊடுறுவும் சிவப்பு. சுண்டவே வேண்டாம். சுண்ட நினைத்தாலே சிவக்கும் மென்னியள்; மேனியள். பேர் பூஜா என்றிருந்தது, அவளது கார்டில்! யாரும் அறியாத வண்ணம் அவள் அருகில் சென்றேன். சுற்றுமுற்றும் பார்த்தேன்.

யாரும் என்னைக் கவனிப்பதாகத் தோன்றவில்லை.

ஒரு சிறுமி, ப்ரிட்டானியா க்ரீம் பிஸ்கட்டைக் காட்டி அடம் பிடித்துக் கொண்டிருக்க, கண்ணாடி போட்டிருந்த அம்மா மறுத்துக் கொண்டே இருந்தாள். அவர் கையில் இருந்த பேகில், மசாலா ஐட்டங்கள், ஹார்லிக்ஸ் பேக், பட்டர், ஜாம், ஸ்பின்ஸ், டவ். ஒரு மஞ்சள் வேட்டி ஆண் 'ஷேவிங் செட் எவிட?' என்று கேட்டார்.

அலை பாயும் சீருடை மங்கைகள் பற்றிய பயமும், கழுத்து திரும்பி கண்காணிக்கும் கேமிராக்கள் அச்சமும், ஜூம் வட்டக் கண்ணாடி காட்டும் பயங்கர உருவம் பற்றிய கவலையும் இன்றி நெருங்கினேன்.

'தொட்டுப் பார்க்கலாமா?'. ஒரு தயக்கம். யாரேனும் பார்த்து விட்டால்..?

இன்னும் நெருங்கி... நெ...ரு...ங்....கி....

ஹாப்பா...! என்ன ஒரு வாசம். மூக்கின் வழி நுழைந்து, மூளை வரை ஜிவ்வென்று ஏறும் சொர்க்க வாசம்.

ஆட்காட்டி விரலால் மெல்லத் தொட்டேன்.

என்ன ஒரு வழவழப்பு..! என்ன ஒரு வளைவு...!

"ஸார்...! வேணுங்கில் பறஞ்சால் மதி..!"

சட்டென குரல் இடையூற, கண்களைத் திறந்தேன். கிறக்கத்தில் கண்கள் மூடியிருந்ததையே அப்போது தான் உணர்ந்தேன். வெட்கம்.

"எத்ரா...?"

"பதினஞ்சு..!" அவள் லேசாக சிரித்தது போல் இருந்தது.

ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி என் கேரி பேகில் வைத்துக் கொண்டேன். பூஜா சோப் அத்தனை பிடித்துப் போனது எனக்கு...!!

"ருக்குப் போயிருந்தியளா..? இன்னிக்குத் தான் வந்தியளா...?" ஸ்ரீகார்யம் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் ஒரு தமிழ் ஹோட்டலில் இன்று காலை, பழக்கமான சர்வர் கேட்டார். நெல்லைப் பக்கத்தில் இருந்து வந்திருக்கிறார்.

"அண்ணாச்சி..! சொல்றதைப் புரிஞ்சுக்கோங்க. நான் தொடர்ந்து ரெண்டு, மூணு நாளா வரலைன்னா ஊருக்குப் போயிருக்கேன்னு அர்த்தம். அப்புறம் எப்ப வர்றேனோ, அன்னிக்குத் தான் திரும்பி வந்திருக்கேன்னு அர்த்தம் இல்லை. அதுக்கு ஒரு ரெண்டு நாள்... இல்ல, ஒரு நாள் முன்னாடியே வந்திட்டேன்னு அர்த்தம்.

அந்த ரெண்டு நாளும் வீட்டில இருந்து குடுத்து விட்ட முறுக்கு, கச்சாயம், ஸ்வீட்ஸ், பலகாரங்கள் சாப்பிட்டுட்டு காலி பண்ணிட்டு, அதெல்லாம் தீர்ந்து போனப்புறம், வேற வழியில்லாம பதினெட்டு ரூபாய்க்கு நீங்க கொடுக்கற என் நகம் அளவு கூட தடிப்பு இல்லாத இந்த ரெண்டு ஒல்லி தோசைகளும், இட்லியும் சாப்பிட வருவேன்..."

அவர் உடனடியாக இடத்தைக் காலி செய்தார்.

கொஞ்சம் கம்பராமாயணத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில பாடல்கள். விளக்கம் எல்லாம் அவசியமில்லை. நன்கு புரியும் என்று நம்புகிறேன்.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநய் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரையி லாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால்.

தருவனத்துள் யானியற்றும் தவவேள்விக்(கு)
இடையூறாத் தவஞ்செய் வோர்கள்
வெருவரச்சென் றடைகாம வெகுளியென
நிருதரிடை விலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் திடுதியென உயிரரக்கும்
கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்.

(வெருவர : அஞ்ச; நிருதர் : அரக்கர்;செரு : போர்; உளைய : வருந்த)

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகிற்கெல்லாம்
உய்வண்ணமன்றி மற்றோர் துயர்வண்ணம் வருவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே நின்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்.

எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்.

(இனையள் : இப்படிப்பட்டவள்)

"ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனே ஆள நீபோய்த்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டின் வாவென்(று) இயம்பினன் அரசன்" என்றாள்.

(பூழி : புழுதி)

"தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை யென்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!"

நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே வந்து, ஆங்காங்கே செய்யுள்களைச் சேர்த்துள்ளார். விளக்கங்களை விட, செய்யுள்கள் இனிமை! சும்மாவா, கம்பர் அல்லவா..?

கம்ப ராமாயணம் - உரைநடைச் சுருக்கம் - ஆசிரியர் : வரதமணி. லிப்கோ பதிப்பகம். இப்போது தான் சுந்தர காண்டம் வந்திருக்கிறேன்.

2 comments:

வெண்பூ said...

ஆனந்த தாண்டவம் பாடல்களுக்கு உங்க ஏரியாவில இருந்தே கொடுத்த உதாரணம் அருமை..

//
ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி என் கேரி பேகில் வைத்துக் கொண்டேன். பூஜா சோப் அத்தனை பிடித்துப் போனது எனக்கு...!!
//
நான் பர்ஃப்யூம்னு நெனச்சேன்.. நல்லா எழுதியிருந்தீங்க.

//
வேற வழியில்லாம பதினெட்டு ரூபாய்க்கு நீங்க கொடுக்கற என் நகம் அளவு கூட தடிப்பு இல்லாத இந்த ரெண்டு ஒல்லி தோசைகளும், இட்லியும் சாப்பிட வருவேன்...
//
ஆனாலும் நக்கல்தான் உங்களுக்கு.. அடுத்த முறை போறப்ப அதுவும் இல்லன்னு சொல்லிடப்போறாரு.. :))))

கம்பராமாயணம்லாம் படிக்கிறீங்களா நீங்க.. கலக்குங்க.. என்னை மாதிரி ஆளுங்களுக்காக (நர்சிம் மாதிரி) இதுக்கு நீங்க விளக்கம் குடுத்திருக்கலாம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

அ. ஹப்பாடி...! தொடர்பு இருக்கின்ற மாதிரி எழுதினோமா இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. நன்றிகள்.

ஆ. பூஜா சோப் பற்றி மற்றொரு ரகசியம். இது அப்படியே 'பியர்ஸ்' மாதிரியே இருக்கின்றது. வடிவம், வாசம் எல்லாமே! ஆனால் பெயர் மட்டும் 'பூஜா' என்று மோல்டில்! மேக்கிங் பார்த்தால், மண்ணின் தயாரிப்பு! மேட் இன் திருவனந்தபுரம்.

இ. ஆமாங்க..! இப்ப எல்லாம் அவர் முறைக்கிறார். நான் வேறு டேபிளில் அமர்ந்து கொள்கிறேன். ;-)

ஈ. ஏற்கனவே குறுந்தொகைப் பாடல்களை வைத்து கதைகள் எழுதத் துவங்கி, அப்படியே நிற்கின்றது. குறுந்தொகைப் பாடல்களைப் படித்துக் கொண்டிருப்பதிலேயே அமுதமாக இருக்கின்ற படியால்!

நர்சிம் எளிமையாகச் சொல்கிறார். நன்றாய் இருக்கின்றன.