Monday, October 27, 2008

வாழ்க்கை ஒரு சினிமா...சினிமா...!

ண்பர் தமிழ்ப்பறவை, சினிமா தொடர்பான தொடர்ப்பதிவுக்கு என்னையும் இணைத்து உள்ளார். நன்றி.

ஒரு காலத்தில் படங்களின் மேல் வெகு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறேன். குலதெய்வம் கும்பிட, செல்கையில், உணவு முடித்து தூங்கி விட்டேன். திடுக்கென இரவு 1 மணிக்கு எழுந்து, 'என்னை ஏன் எழுப்பவில்லை?' என்று அம்மாவைச் சத்தம் போட்டு, பேய்த்தனமாக 'நாயகன்' பார்த்திருக்கிறேன்.

சட்டென எல்லாம் காணாமல் போயிற்று. பத்தாவதில் பார்த்த ஒரே படம், 'முத்து'. அதுவும் தலைவருக்காக!

பிற்காலத்தில் பார்த்த படங்களின் கேட்டகிரிகள் எக்குத் தப்பாய் எகிறிப் போய், தற்சமயம் எல்லாம் போரடித்து, மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரிக்குத் திரும்பி இருக்கிறேன்.

இப்போது வெகு செலக்ட்டிவ்!

1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயது. 'பயணங்கள் முடிவதில்லை'. குமாரபாளையத்திற்கு நான், அம்மா, அத்தையுடன் கே.ஓ.என். தியேட்டருக்குச் சென்றதாக அம்மா கூறுகிறார்கள். நான் செம தூக்கமாம். படத்தினாலா, மீ குழந்தைப் பருவத்தாலா என்று தெரியவில்லை.

ஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

இதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை. 'மெல்ல திறந்தது கதவு' அல்லது 'உயிரே உனக்காக'.

இ)என்ன உணர்ந்தீர்கள்?

அப்போது என்ன உணர்ந்தேன் என்று ஞாபகம் இல்லை. ஆனால இந்த இரண்டு படங்களில் ஏதோ ஒன்று தான், நான் பார்த்திருக்கும் முதல் படமாக இருக்கலாம் என்று தோன்றக் காரணம், இவற்றின் பாடல்கள்.

'மெ.தி.க.'வில் வரும் 'குழலூதும் கண்ணனுக்கு' மற்றும் 'உ.உ'வில் வரும் 'பன்னீரில் நனைந்த பூக்கள்' பாடல்களைக் கேட்கையில் மனதின் திறக்காத ஜன்னல் திறப்பது போல் ஒரு பரவச உணர்வு வரும். அதை என்னவென்று விளக்க முடிவது கடினம். பரமஹம்சர் சொல்லும் சமாதி நிலை என்றெல்லாம் எண்ணிக் கொள்வேன்.

மீச் சிறு வயதில், இன்னும் சரிவர நீங்கியிராத முன் ஜென்ம வாசனையை, இந்தப் பாடல்கள் தம்மோடு பிணைத்துக் கொண்டனவோ என்று நினைக்கிறேன்.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இந்த கேள்வி வரிசையில் மிகவும் கடினமான கேள்வியாக நான் கருதுவது இதைத் தான். 2006 மூன்றாம் க்வார்ட்டரில், பெங்களூரில் நண்பர்களோடு நட்ராஜில், 'சில்லென்று ஒரு காதல்'. இன்னும் கொஞ்சம் குழப்பம். இதுவா இல்லை அதே கால கட்டத்தில்,கோவை அர்ச்சனாவில் 'வேட்டையாடு விளையாடு'வா?

3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று தீபாவளித் திருநாளில், எல்லாத் தொலைக்காட்சிகளும், பில்லாவும், சந்திரமுகியுமாக அலறிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டு பி.சி.யில் 'சரோஜா' பார்த்தேன். தியேட்டர் ப்ரிண்ட். சரியாகவே தெரியவில்லை. ஒரு படம் பார்க்கும் முன் அதன் விமர்சனங்களைத் தெரிந்து கொள்வதில், அதை ரசிப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்தேன்.

4)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

'மெ.தி.க.' தான்.

ஒரு ஞாயிறு மாலை டி.டி.யில் போட்டிருந்த படத்தை மூன்றாம் மாடியில் இருந்த சித்தப்பா வீட்டில் பார்த்து விட்டு, வீட்டுக்கு அவசரமாகச் செல்ல இறங்கிக் கொண்டிருந்த போது, கரண்ட் கட்டாகி விட, பயத்தில் அவசரமாக ப டி க ள் தாவித் தாவி இறங்க, தரைத்தளத்தில் ஒரு 'சுரீர்'.

வீட்டுக்கு வருவதற்குள் கரண்ட் வந்து விட, வெளிச்சத்தில் பார்க்க இடது காலின் முட்டியில் ஒரு வெட்டு. தசையைக் காணவில்லை. ரத்தமே வராமல், ஆழம் வரை வெட்டி... வெள்ளையாகத் தெரிந்தது.

மாரிமுத்து டாக்டரிடம் கூட்டிச் சென்று, அடுத்த நாள் தையல் போடுகையில், நான் கத்தாமல் இருக்க என் கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த அப்பா மயக்கம் போட்டு விழ, (உங்கப்பாக்குத் தான் ஊசி போடணும் போல! - டாக்டர்.) மரப்பு மருந்து போட்டு, தையல் போட்டு, வீட்டுக்கு வந்து இரண்டே மணி நேரத்தில் தையல் 'பா' வென பிளந்து, உடலே ஆட்டோமேட்டிக்காக சதை சேர்ந்து கொண்டு... எஸ்.எஸ்.எல்.சி., டி.சி.யில் அடையாளத்திற்காக ஒரு தழும்பை விட்டுச் சென்றது.

அடிபட்ட காரணம், காம்பவுண்ட் கேட்டில் இடுக்கிக் கொண்டிருந்த ஒரு கூர்த் தாழ்ப்பாள். 'மெல்லத் திறந்தது கதவு' பார்த்து விட்டு, அவசரமாக கதவைத் திறந்ததால் ஏற்பட்ட தாக்கம் இது.

மற்றொரு படம் 'உருவம்'. அப்பாவுடன் போய், பாதிப் படத்திலேயே பயந்து 'வீட்டுக்குப் போகலாம்'..! திட்டு வாங்கிக் கொண்டே ரிடர்ன் ஆனோம். நினைத்துப் பார்த்தால், மோகன் அந்தப் படத்திற்கு மேக்கப் போடாமல், நார்மலாக நடித்திருந்தாலே பயம் கிளப்பி இருக்கலாம் என்று தோன்றியது.

மற்றொரு மறக்க இயலாத படம், The Never Ending Story.

இன்றைய கற்பனை என் உள்ளத்திற்கு அடிப்படை வித்து இப்படம் எனில் அதிகமன்று.

5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி எதுவும் இல்லை.

நமக்கு சினிமாவும், அரசியலும் இல்லாமல் பொழுது போக்கு இல்லை. அதிலும் சினிமாவில் நிகழும் அரசியலும், அரசியலில் நடக்கும் சினிமாத்தன சீன்களையும் பார்க்கையில், இவற்றால் எல்லாம் பாதிக்கப்படக் கூடாது என்று தெளிவாக இருக்க முயல்கிறேன்.

ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

பேசும் படம் மற்றும் The Sixth Sense.

உண்மையான சினிமா என்பது வசனங்களை விட, காட்சி ஊடகத்தால் மட்டுமே நிறைவு பெறச் செய்வது என்ற என் எண்ணத்தைப் பேசும் படம் High Extreme லெவலில் சொல்லியது என்றால், TSS ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை அழகாகப் பின்பற்றி முடிந்திருக்கும்.

இயந்திரத் தொழில்நுட்பங்களை விட, மன உணர்வுகளைத் தொட்டு ஏதேதோ தளங்களுக்கு கூட்டிச் செல்லும் டெகினிக்குகளைப் பெரிதும் ரசிக்கிறேன்; மதிக்கிறேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சுண்டல் மடித்துக் கட்டிய பேப்பரில் இருந்து சுஜாதா காட்டும் திசைகள் வரை எது கிடைத்தாலும் படிப்பதால், பலசரக்கோடு சினிமாவும் கலந்து விடும். தனியாகத் தேடிப் படிப்பதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

இதுவும் படிப்பது போல், எல்லோரையும் கேட்பேன். மற்றபடிக்கு இசை பற்றி ஏதும் ஞானம் இல்லாததால், மெளனம் காப்பது மேல்! ஆதி ஒலி மெளனம் அல்லவா...?

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சுந்தர வசனங்களுக்காகத் தெலுங்கு, அழகிய மங்கைகளுக்காக மலையாளம், ஹள்ளி ஹள்ளி டயலாக்குகளுக்காக கன்னடம், கலர்ஃபுல் காட்சிகளுக்காக ஹிந்தி, அதிரடி ஏக்ஷனுக்காக ஹாங்காங், தைவான், ஜப்பானீஸ், சைனீஸ் (என்ன வித்தியாசங்கள்...?), ஹாலிவுட், ஒரே ஒரு ஈரான் படம், பார்க்கிறேன்.

தாக்கம்...? ம்ஹூம்...!

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இதுவரை ஏதும் இல்லை. பிற்காலத்தில் நல்ல கதைகளைக் கொடுக்க நேரிடலாம்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தக்கன தப்பிப் பிழைக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஆப்டிமிஸ்டாக நினைக்கையில், நிறைய பேர் இன்னும் படிப்பின் பக்கம் திரும்ப வேண்டும். படிக்க Roald Dahl கவிதை. ப்ராக்டிக்கலாகப் பார்த்தால், மெகா சீரியல்கள் பக்கம் தாய்மார்கள் சாய்ந்திட, வீடியோ கேம்ஸ், போகோ, கார்ட்டூன்கள் பக்கம் சிறுவர்கள் பாய்ந்திட, ஆண்கள் தயவால் A படங்கள் ச்சும்மா பிச்சுக் கொண்டு ஓடும்.

சரி, A படங்களுக்கு மொழி பிரச்னை இல்லை அல்லவா? அவை வரலாம் தானே...!

***

எம்.எல்.எம்.மின் ட்ரீ ஸ்ட்ரக்சர்படி, கிளைகள் விரிய விரிய கை மாற்றிக் கொடுக்க வேண்டியவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். நான் அழைப்பது வீரசுந்தர், சீனிவாஸ், அனீஸ்.

9 comments:

வீரசுந்தர் said...

அழைப்பிற்கு நன்றி வசந்தகுமார். விரைவில் பதிவிடுகிறேன்.

நீங்க சினிமாவைப் பத்தி நிறைய எழுதியிருக்கீங்க. என்னால இதுல பாதியாவது எழுத முடியுதான்னு பார்க்குறேன். :)

வெண்பூ said...

என்னது ரெண்டு வருசமா தியேட்டருக்கே போகலியா? ஆச்சர்யமா இருக்கு..

இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

விரைவில் பதியுங்கள். படிக்க ஆவலாய் இருக்கின்றோம்.

***

அன்பு வெண்பூ...

ஹி...ஹி...!!!

தமிழ்ப்பறவை said...

ஹேய்ய்ய் மேன்...
வாட் ஈஸ் திஸ்...?! வித் இன் ஹாஃப் டேய், யு புட்டிங் போஸ்ட். பட் சேம் கேஸ்,ஐ டுக் எயிட் டேய்ஸ். ஹாட்ஸ் ஆப் டூ யு...
நீங்க 'உருவம்' பார்த்தது மாதிரி நான் 'நூறாவது நாள்' பார்த்துட்டு பாதியிலேயே திரும்பி வந்தேன்(எயித் ஸ்டாண்டர்ட்...?!)
அப்புறம் சின்ன வயசுல 'பூவிழி வாசலிலே' பார்த்துட்டு, நைட் தூக்கத்துல புலம்பி இருக்கேன். காரணம், சத்யராஜ் 'பாபு ஆண்டனி' படம் வரையறப்போ,விட்டுவிட்டு சில சாமியார்கள் டான்ஸ் ஆடுற மாதிரிக் காட்டுவாங்க.அந்த நேரத்துல இசை என் திகிலைக் கூட்டுச்சு.
இதெல்லாம் உங்க பதிவைப் படிச்ச பின்னாடி ஞாபகம் வந்தது.
//சுண்டல் மடித்துக் கட்டிய பேப்பரில் இருந்து சுஜாதா காட்டும் திசைகள் வரை எது கிடைத்தாலும் படிப்பதால், பலசரக்கோடு சினிமாவும் கலந்து விடும். தனியாகத் தேடிப் படிப்பதில்லை.//
மீ டூ. பதிவிடும்போது வார்த்தைகள் கிடைக்கலை.

வீரசுந்தர் said...

பதிவு போட்டுட்டேன் :

http://veerasundar.com/tamil/2008/10/29/cinema-cinema/

RAMG75 said...

You are a gifted writer. Your writing style is very good and enjoyable.

Panneril Nanaintha Pookal song. I feel something different when i hear that song.

I think Scent, Song, these two can remind our past i guess.

இரா. வசந்த குமார். said...

Dear RAMG75...

Hearty Thanks for your wishful Comments...! I take your wishes as a catalyst to improve my writings...!

Sure, Scents and Songs which were linked with any events, will always in our minds...!!!

Please see Pavlov's Dog.

நாடோடி - noMAD said...

அன்பு காலப்பயணி,
அழைப்பிற்கு மிக நன்றி ..நானும் பதிவ போட்டுட்டேன் ...

உருவம் , மை டியர் லிசா , குட்டி சாத்தான் இதெல்லாம் பார்த்துட்டு பல பேர கதி கலங்க பயமுறுத்தி இருக்கோம். ரெண்டு பசங்களுக்கு காய்ச்சல் கூட வந்து இருக்கு

முரட்டு தனமான கலாய்ப்பு அதெல்லாம்

இப்போ அதே மாதிரி மச்சான் புதுசா ஒரு ரஷ்ய படம் பார்த்தேன் இத்தாலியன் படம் பார்த்தேன் அதுல ஒரு சீன் மச்சி'ன்னு பல பெற கதி கலங்க வச்சிட்டு இருக்கோம்

ரெண்டுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை

:)

இரா. வசந்த குமார். said...

அன்பு நாடோடி & சுந்தர்...

மிக்க நன்றிகள் நீங்கள் எழுதியதற்கு...!!