Whatever Happens, Life must Go on...!
- வாரணம் ஆயிரம். அப்பா சூர்யா. :))
***
17.June.2006.
புகை போல் படர்கின்ற பனியால் நனைந்து கொண்டு இருக்கின்றது இரவு. வெள்ளைத் துளிகளால் ஈரப்படுத்தும் நிலவின் பயணத்தால், தலைதுவட்டிக் கொள்கின்றது, ஈரப்பூ!
மெளனத்தின் பேரதிர்வுகளை நிரப்பிய, பொன் பாத்திரமாய் மினுக்கும் கீழ்வானத்தின் ஜரிகையெங்கும் பறக்கின்றன, பறவைகளின் நிழல்கள். நடக்காத பயணத்தில், கிடைக்காத வலிகளால், சுருண்டு நகர்கின்றது ஒரு நதி.
அலைத்துளிகள் ஈரப்படுத்தும் மணல் ஓரங்கள், பிசிறடித்துப் பறக்கின்ற நாணல் பூக்கள், ஒற்றைக் கோடுகளின் பாதைகளில் ஒளிந்து கொள்கின்ற சில பயணங்கள், நுரை ததும்பி சிரிக்கின்ற கரையோரம்.
ஒரு நாளைப் போல் மறுநாள் இல்லை!
ஒரு பூவைப் போல் மறுபூ இல்லை!
ஒரு காதல் போல் மறுகாதல் இல்லை!
தோட்டத்தின் பூக்களைப் பறித்து, கூடைக்குள் நிரப்பி, தொட்டுக் கட்டுகையில் விரலின் இடுக்குகளில் எல்லாம் வியாபிக்கின்ற வாசனை போல் ஒரு காதல்.!
எண்ணி முடிக்க மாட்டாத மினுக்கும் நிகழ்வுகளின் முத்திரை பதித்த இரவுத் துணியின் விண்மீன்கள் போல், இரவில் மட்டும் விழிக்கின்ற நினைவுகளின் ஊடே, நகர்கின்றது, ஒரு காதல்..!
சொட், சொட்டென்று சொட்டுகின்ற மழைத்துளிகளை பேய்ப்பசியோடு விழுங்குகின்ற, வறண்ட நிலத்தின் விரிசல்கள் வழியே வழிந்து செல்கின்றது ஒரு காதல்...!
சொல்லிக் கிடைத்த சில தோல்விகளின் வலிகளும், சொல்லாமல் ஒளித்த சில புதைத்தல்களின் கனங்களும் கொண்ட வரைபடத்தின் மேலே வரைந்தபடி, நகர்கின்றது வாழ்க்கை!
4 comments:
நண்பர் வசந்த்துக்கு....
ஒரு சிறு ஆலோசனை...கடந்த நான்கைந்து பதிவுகள் படித்து, இதற்கு வருகையில் சற்றுச்சலிப்பேற்பட்டு விட்டது. திரும்பத்திரும்ப ஒரே வார்த்தைகள் வருவதுபோல். இது போன்ற பதிவுகளை சற்று இடைவெளி விட்டுப் பிரசுரியுங்கள்.
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். கடந்த பதிவுகள் எல்லாம் '05 - 06 காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால், எனது ஃபேவரைட்டான வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்திருக்கும்.
அல்லது, பேசும் பொருள் (பிரிவும், பிரிவு நிமித்தமும்) ஒன்றாக இருப்பதால், அந்த மெண்டாலிட்டி ஒரே மாதிரி இருந்திருப்பதால், சலிப்புடன் க்ளிஷேக்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன ஆலோசனைக்கு நன்றி. இனி இது போன்று தொடர்ந்து ஒரே களத்தில் எழுதாமல், வெரைட்டியாக எழுத முயல்கிறேன்.
நன்றிகள்.
ஒரே களம் அல்லது வெவ்வேறு களத்தில் நீங்கள் எழுதுவது உங்கள் விருப்பம்.ஆனால் எங்கள் பார்வைக்கு வைக்கையில் கலந்து, கலந்து வையுங்கள்(திட்டி விடாதீர்கள்...)
வசந்த எங்க போயிட்டீங்க ...
ஆளையே காணோம்..வந்து கதை எழுதுங்க....
Post a Comment