Sunday, November 16, 2008

மருதம்.

குறிஞ்சி!

நெய்தல்!

***

12.Mar.2006.

காலயில காட்டுக்குப் போகயிலயும், காலு, மேலு களுவ ஆத்துக்குப் போகயிலயும், உங்க வயக்காடு வழியாப் போய்ட்டு வர்றது, ஒரு தனி சொகந்தான். அதென்னவோ, ஒவ்வொரு செடியும் என்னப் பாத்து கையாட்டற மாதிரியும், வீசற காத்து, ஒன்ற பேரச் சொல்லிட்டு வர்ற மாதிரியும் இருக்கு, புள்ள..!

போன மாசம், மாசி நோம்பி! கோயில்ல தேர் இழுக்கணும்னுட்டு, உன்ற அப்பாவும், இன்னும் கொஞ்சம் பெரிய மனுசங்களும் வீட்டுக்கு வந்தாங்க! கூட நீ வேற வந்திருந்த! அடப் பாவி புள்ளகளா, அம்மனே இங்க தான் வந்திருக்க, எதுக்குய்யா தேர் இளுக்கறீங்கனு தோணுச்சு!

அதெப்படி, உங்க தோட்டத்துக் கெணத்தில மட்டும் இறைக்க, இறைக்க தண்ணி ஊறிக்கிட்டே இருக்குனு ஊரெல்லாம் பேச்சு! பக்கத்துக் காட்டுலயெல்லாம் மோட்டார் போட்டனுக! வரலியே, தண்ணி கொஞ்சம் கூட! அட முட்டாப் பசங்களா, அவ கண்ணு வெச்ச கல்லுலயே தண்ணி வரும்டா, கெணத்துல வர்றதுக்கென்ன!

அப்படியே தான் புள்ள, என்ற மனசுக்குள்ளயும் உன் மேல, ஏதோ ஒரு நெனப்பு ஊறிக்கிட்டே இருந்தது!

போன வருசம் முளாண்டுப் பரிச்ச லீவுன்னு நீ ஊருக்குப் போயிட்டயாம்! பட்டணத்துல உங்க மாமா வீட்டுக்கு! தங்கச்சி கண்டுகிட்டு வந்து சொன்னா..! அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவா! என்ற தங்கச்சில!

'டேய், அமாவாச அன்னிக்குக் காக்காக்கு சோறு வெக்காம திங்கக் கூடாதுடா'னு மாசாமாசம் ஆயா துரத்தும். பகல்ல ஏதுடா அம்மாசனு எனக்கே தோணும். நெசமாலுமே அமாசைனா என்னன்னு நீ ஊருக்குப் போன மாசந்தான் தெரிஞ்சது. தெனமும் வயலுக்குப் போறதுக்கு முந்தி, பொறாவுக்குச் சாப்பாடு வெக்கணுமின்னு அலைஞ்சது எனக்குத்தான் தெரியும், ஆமா..!

முந்தின வருஷம் என்னாச்சு தெரியுமா? அப்ப நீ சின்னப் புள்ள, உனக்கு என்ன தெரியும், பாவம்! பண்ணை வூட்டுப் பையன் பட்டணத்துல படிக்கறானாம்! அவனும், கூட்டாளிகளும் போற வர்ற பெண்டுகளப் பாத்து, சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க! உன்னப் பத்தியும் ஏதோ சொன்னாங்கனு தோணுச்சு எனக்கு! சும்மா உடலாமா அவனுங்கள? ஆத்துக்குக் குளிக்க வந்தப்ப, அவனுக உடுப்புல எல்லாம், சுள்ளெறும்பா போட்டு வந்துட்டேன். ரெண்டு நாளா பசங்க வெளிய தலைகாட்டலையே! என்ன நெனச்சுக்கிட்டிருக்காங்க, நம்ம ஊருக்கே வந்து, உன்னையே கேலி பண்ணினா, சும்மா உட்ருவனா..!

என்ட்ட ஏதோ பேசணுமின்னு வெள்ளிக்கெழம, கோயில்ல தங்கச்சிகிட்ட சொன்னியாம்! வந்து சொன்னா! எப்படியிருந்திச்சு தெரியுமா எனக்கு! வாரக் கடசியில வாத்தியார் படத்துக்கு மொதலாட்டம் டிக்கெட்டு கெடச்ச மாதிரி இருந்துச்சு! சொசைட்டில பாலுக்கு வெலை ஏத்துன மாதிரி, அய்யாகிட்ட திட்டு வாங்காத மாதிரி, புளியமரத்துல அடிச்ச கல்லுக்கெல்லாம் புளியங்கா வுளுந்த மாதிரி, முதலப் பாற வரைக்கும் மூச்சு வுடாம நீந்திப் போன மாதிரி ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு புள்ள!

சனிக்கெழம சாயந்திரம் ரைஸ் மில் பக்கத்துல, இருக்கற அம்மன் கோயிலுக்கு வரச் சொன்ன! நீ படிச்ச புள்ள, தைரியமா சொல்லிப்புட்ட, இந்த முட்டாப் பயலுக்குத் தெகிரியமே கெடயாது. பயந்துகிட்டே தான் வந்தேன். பொங்கலுக்கு எடுத்த மஞ்சள் முளுக்க சட்ட, எத்தனை கஷ்டப்பட்டேன் தெரியுமா, இதை எடுக்க! பொங்கலுக்கு நீ மஞ்சக் கலர் தாவணி தான் எடுத்திருக்கியாம்! அதான்! அப்புறம், ஒரு வேட்டி, தோள்ல துண்டு போட்டு ஒரு தோரணையாத் தான் வந்தேன், போ...!

நல்ல ஊதக் காத்து! கவுண்டர் வூட்டு வாய்க்கால்ல தண்ணி சும்மா சலசலனு ஓடிக்கிட்டிருக்கு! ரைஸ் மில் சாத்தியிருந்தாங்க! மினுக் மினுக்கு அம்மன் கோயில் வெளக்கு மட்டும் எரிஞ்சுக்கிட்டிருந்தது. கோயில்னா பெரிய கோயிலெல்லாம் இல்ல! புளிய மரத்துக்கு கீழ, கன்னிமார் பூச நடக்கற எடம். அவ்வளவு தான். நீயும் ஒரு அம்மன் மாதிரி தான் அங்க நின்னுட்டிருந்த!

நீ என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருந்த! பட்டணம், திருவிழா, தியேட்டரு, பண்ணை வூட்டுப் பையன், காதல், கடுதாசி, குடுத்திடுங்கனு என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருந்த! இந்தப் பயலுக்கு ஒண்ணும் புரியல!

'சோ'னு மழை பெய்யும் போது, ஊத்தற தண்ணி எல்லாம் எங்க போகுது? தோலே பொசுங்கற மாதிரி அடிக்கற வெயில் எல்லாம் ராத்திரியானா எங்க போகுது? ஊரே தூக்கற மாதிரி அடிக்கற பூவாசமெல்லாம், பூ காஞ்ச பெறகு எங்க போகுது?

அது மாதிரி, நீ பேசுன வார்த்தயெல்லாம் எங்க போகுதுனே தெரியாம காத்தோட போய்க்கிட்டே இருந்துச்சு! நான் என்னத்த கவனிச்சேன் தெரியுமா?

நீ பேசற போதெல்லாம், ரெண்டு தோடும் எப்படி ஆடுச்சு தெரியுமா? வயக்காட்டுல காத்துக்கு கதிரெல்லாம் ஆடுற மாதிரி! புருவம் ரெண்டும் எப்படி ஏறி, எறங்குச்சு தெரியுமா? பகலுல, வளர்ந்து, குறுகி மறுபடியும் வளர்ந்து மறையுற மலையோட நெழலு போல! நீ வெக்கப்படறேனு நான் புரிஞ்சுக்கிட்டது எப்பனா, தரையப் பாத்து குனிஞ்சு நீ பேசறப்ப தான்!

அப்புறம் என்னென்னவோ நடந்து போச்சு! எதுக்கு கதய வளக்கணும்! நீ குடுத்த கடுதாசிய நான் எங்கயோ தொலச்சிட்டதயும், உன்ற மாமா பாத்து பண்ணையார் வூட்டுக்காரங்க எல்லாம் வந்து பேசுனதயும், உன்ற அப்பாவும், அம்மாவும் தல கவுந்து நின்னதயும் ஊரே பாத்துச்சே!

பொறவு ஒரு ராத்திரி ஊர விட்டே போய்ட்டீங்க! அடி பாவி புள்ள, நான் ஒண்ணுமே பண்ணலனு உனக்கு எப்படி புரிய வெப்பேன். இவ கூட என்ன கேவலமா பாக்கறாளே!

நாம வெதக்கற நெல்லு தான் நமக்கு அரிசியா வருதா என்ன? வெதக்கறவன் எவனோ, வெலைக்கு வாங்கறவன் எவனோ, வெனயாத் திங்கறவன் எவனோ! அது மாதிரி நடந்ததெல்லாம் பல கை மாதிரி, என்னென்னவாகவோ நடந்து போச்சு!

ன்னும் கூட, அந்த வயக்காடு வழியாத் தான் போறேன், வர்றேன்! ஆனா இப்ப அது உங்களுது இல்ல! காஞ்சு போன தோட்டத்துக் கெணறு போல, காஞ்சு போயிருக்கு என்ற மனசும்...!

3 comments:

தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்திற்கு...
கொங்குத்தமிழ் எனக்கு அவ்வளவு பழக்கமில்லையெனினும் கதைநடை எளிதாகவே இருந்தது.அவள் பேசவேண்டுமென, இவன் தங்கை இவனிடம் கூறவும், இவனில் எழுந்த சந்தோஷங்களாக நீங்கள் காட்டியிருப்பவை அழகு.
//அடப் பாவி புள்ளகளா, அம்மனே இங்க தான் வந்திருக்க, எதுக்குய்யா தேர் இளுக்கறீங்கனு தோணுச்சு!//
அம்மன் அவங்க வீட்டுல இருக்கிறதுனால்தான் தேரை இழுத்து அவங்கூட்டுக்குக் கொண்ட்டு போலாம்ன்னு வந்துருக்காங்க கண்ணு...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். கொங்குத் தமிழ் எளிதே! அழகான, மரியாதையான பேச்சு!

தமிழ்ப்பறவை said...

ஏனுங்கோ....தேனுங்கோ...