Thursday, August 24, 2006
குறிஞ்சி.
எண்ணி விட வேண்டும் இந்த விண்மீன்களை, ஒரு நாளைக்கேனும்.
கொண்டையில் மின்பூ அணிந்த, ஒற்றைக் கோபுரம், பனிப்பழிவில் நனைகிறது. சரம் சரமாய் மினுக்கிற ஒளித்துளிகள் கொண்ட கோயிலில் ஒரு பண்டிகை நாளின் முன்னிரவு அது.
படர்ந்திருக்கும் அடிவார நகரின் செயற்கை ஒளிச்சிதறல்கள்.
பிரம்மாண்டமாய் விரைந்து செல்லும் மேகங்களுக்கிடையே எட்டிப் பார்க்கும் இயற்கை ஒளித்தெளிப்புகள் தீண்டுகின்ற, ஒரு குன்றின் மேல் அமர்ந்திருக்கின்றோம்.
மற்றுமொரு வள்ளிக் கதையில் ஆழ்ந்திருக்கும் பெரியவர்களின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தனர், குழந்தை முருகனும், குறவள்ளியும்.
பெளர்ணமி நிலவின் வெண்ணொளியை உறிஞ்சி நகர்கின்றன, பெரும் கரும்பூத மேகங்கள்.
செதுக்கிய பின் படிக்கட்டுகளான பாறைகளின் இடுக்குகளில் இருந்து எட்டிப் பார்க்கிறது இருள்.
இப்படியும் அமைதியாய் நீ அமர்வாய் என முன்பே அறிந்திராதலால், ஊதற்காற்றுக்கு ஆடுகின்ற பெரு மரங்கள் நிறைந்திருக்கும் இம்மலைக்கு வர பெருமுரணாய் உள்ளது.
முன்பொரு பெரும்பனிக் காலத்தில், உன் கூந்தல் சரிக்கும் பூக்கள், மலைச்சரிவின் பாறைகள் என்று சொன்னதில், மேலுமொரு முறை சிரித்தாய். மற்றுமிரு பாறைகள் உருண்டன.
வெள்ளி மாலைகளில், வள்ளியைக் காண ஒரு கையில் தட்டுகளோடு, மறு கையில் ஒரு சிறுமியோடு வருவாய்.
காத்திருக்கும் என்னைக் காட்டி, பூதம் என்பாயோ, பூச்சாண்டி என்பாயோ, பயம் ஒட்டியிருக்கும் கண்களால் தான் என்னை இன்னும் பார்க்கிறாள் அவள்.
ஒரு மதியப் பொழுதில், நாம் தனித்து அமர்கையில், தூரத்தில் தெரிந்த மயிலைக் காட்டி நீ பரவசமடைந்தாய்.
அருகில் இருந்த மயிலைக் கண்டு, நான் ஆனந்தப்பட்டேன்.
...................................
நெருங்குகிறது, உனது திருமண நாள், நமது அல்ல.
முன்பனி இரவில் தனித்து விட்டு,கிளம்பி விடுகிறாய். இனி வெளிச்சம் இல்லை என்பதாய், நீள்கிறது இரவு.
உறைந்த புன்னகையும், ஒளிர்ந்த நகைகளும் அணிந்த சிலைகளின் அறையெங்கும் கவ்விக் கொள்கிறது, எண்ணெய்த் திரி விளக்குகள் பொறிகின்ற, காரிருள்.
காய்ந்த மாலைகளும், ஓய்ந்த சத்தங்களும், சாய்ந்த பந்தல்களுமாய் நகரப் போகின்றன நாளையப் பொழுதுகள்.
முடிந்து போன பண்டிகைகளின் மிச்சம் போல் ஒட்டியிருக்கும், கழிந்து போன என் கண்ணீர்த் துளிகளின் தடங்கள்.
உன் வார்த்தைச் சூட்டில் பொறிந்த கொப்புளங்களாய் மினுக்கும்,
இந்த விண்மீன்களை எண்ணி விட வேண்டும், ஒரு நாளைக்கேனும்...!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நண்பர் வசந்த்திற்கு...
பதிவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும், என்னவளின்(இது எனது தனிப்பட்ட என்னவள் அல்ல. எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ள அவனது என்னவள்)எழில்மேனிப்பாகங்கள் போல், கொஞ்சம் கூடாமலும், கொஞ்சம் குறையாமலும் அவற்றுக்கான இடங்களில் அழகாக அமர்ந்திருக்கின்றன.
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். அழகுக் காதலிகள் அபாயமானவர்கள். பெருமலைகள் அவர்களது மனங்கள்.
Post a Comment