Saturday, November 15, 2008

நெய்தல்.

ந்திணைத் தமிழ் நிலங்களைக் களங்களாக வைத்துக் காதலைப் பாட நினைத்து முயன்றதில் முல்லை மட்டும் கையில் சிக்காமல் போனது. மற்றவை கொஞ்சம் கொஞ்சம் கிடைத்தது.

குறிஞ்சி இங்கே..!

***

நெய்தல் இங்கே உப்புக் கரிக்கின்றது..!

அலைகளில் நனைந்த பாதி நிலவின் உப்பு நிழல், மீன் நாற்றமுடைத்த படகின் மேல் மோதி உடைந்து கொண்டிருக்கும் முன்னிரவுக் காலம்.

பெருநகரில் இருந்து தப்பி வந்த பேரிரைச்சல், கரையெங்கும் நுரை ததும்பிக் களிக்கும் நேரம்.

தனிமையில் மிதக்கின்ற விண்மீன்களின் துயர் நிரம்பிய ஒளியைச் சுமந்து வரும் குளிர்காற்றின் ஈரம் பிசுபிசுப்பை வழியச் செய்கின்றது.

ஒற்றை விளக்கின் வழியே தம் பயணச் செய்தியைச் சொல்லியவாறு நகர்கின்றன, தூரத்துக் கப்பல்கள்.!

பல்லாயிரம் பாதச் சுவடுகள் பதிந்த, மணற்பரப்பின் மேல் ஊர்கின்ற நண்டுகளின் குறுங்கால்கள் ஈரம் பூக்கச் செய்கின்றன.

உன் பெயரை நானும், என் பெயரை நீயும் எழுதிப் பார்த்து, அலைகள் வந்து கலைக்காமல், கோர்த்த விரல்களால் அணை கட்டிய நாம், இப்போது மெளன முலாம் பூசிய முகமூடி அணிந்திருக்கிறோம்.

காலடியில் மணல் அரிக்கும், இந்த மகாசாகரம் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதைக் கண்டு, கைகட்டி அமர்ந்திருக்கிறோம்.

"இது தான் கடைசி இரவா.?"

"இனி மீண்டும் வருவதில்லை இந்த இரவும், மீண்டு வருவதில்லை நம் உறவும்..!"

பிரிதலில் கசிகின்ற கண்ணீரால் நிரம்பிய , இந்தக் கடலின் உப்புநீர், காற்றின் சுவையையும் மாற்றி விடுகின்றன.

தினம் பிரிந்து செல்கையில், நீ பதிக்கின்ற ஐந்து புள்ளிக் கோலங்கள் மேல், நான் நடந்து தொடர்வதை நீ அறிகிலையா?

ஒவ்வொரு முறையும் கலங்கரை விளக்க ஒளி தொடுகையில் எல்லாம், நீ முகம் மறைக்கையில் வெளிப்படும் வெட்கமோ, பயமோ, உன் வளையல்கள் மேல் தெறிப்பதை நீ அறியவில்லையோ?

அருகிய சிலுவைக் கோயிலின் இரவுமணி கேட்டு, அவசரமாக எடுத்திருப்பாயோ, அப்போதெல்லாம் அந்த சிலுவை என் மீது பாய்வதை அறியமாட்டாயா?

இன்னொரு முறை கடற்கரையிலும், கோயிலும், பேருந்து நிறுத்தத்திலும், பால் பூத்திலும் சந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் செல்கின்றாய். ஒரு தூரம் சென்ற பின் புள்ளியாய் மறைகின்றாய்.

ஊனமுற்ற ஓர் உடைந்த வெண்சங்கின் உலர்ந்த, உள்ளார்ந்த மெளன ராகம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது..!

2 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்திற்கு...
// உடைந்த நிலாவின் //
//பாதி நிலவின் உப்பு நிழல், மீன் நாற்றமுடைத்த படகின் மேல் மோதி உடைந்து கொண்டிருக்கும்//
நிலா முழுசா இருந்தா பிடிக்காதா...? அவள் ஒரு குழந்தை, நெய்தல் இரண்டிலும் முதல் வரியிலேயே நிலவை உடைத்து ரசிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
//நீ பதிக்கின்ற ஐந்து புள்ளிக் கோலங்கள்//
அவ்வப்போது கூகுள் ரீடரில் உம்து பதிவுத்தலைப்புகளில், நான் பார்த்த ஐந்துபுள்ளிக்கோலத்திற்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்தது. நல்லுவமை.

கசந்த காதல், டிக்காஷன் தூக்கலான காஃபியாய்ச் சுவை கூட்டியது.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். உடைந்த நிலாக்கள் என்பது கவிஞர் பா.விஜய்ந் ஒரு கவிதைத் தொகுப்பு. எனக்கு நிலா பிடிக்கும். அது உடைந்திருந்தால் ஒரு அழகு! உடையாதிருந்தால் மற்றோர் அழகு!

பெண்களைப் போல்! உடையை உடையவர்களாயிருந்தால் ஓர் அழகு! உடையை உடைத்துப் போட்டிருந்தால் மற்றோர் அழகு! :)