Tuesday, September 05, 2006

கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..?

"அன்பே..!"

"இளவரசே..!"

"என் பெயரை இன்னும் ஒருமுறை கூறு..!"

"போங்கள் இளவரசே! தங்கள் பெயரை ஒருமுறை சொல்வதற்கே என்னை வெட்கம் பிடுங்கித் தின்று விட்டது. மீண்டும் ஒருமுறை சொல்வதென்றால்...! மேலும் உங்கள் பெயரைத்தான் சோழ மண்டலம் வரை பேசுகிறார்களே?"

"கண்ணே..! மற்றவர்கள் கூறும் போதெல்லாம், அதில் இளவரசருக்கான மரியாதை தான் இருக்கும். ஆனால், தேனமுது ஊறுகின்ற உன் செவ்விதழ்களைத் திறந்து, என் பெயரை நீ உச்சரிக்கும் போதெல்லாம், என் பெயரின் மீது எனக்கே காதல் கனிகிறதே, என் கனியமுதே..!"

"மாமல்லா..!மாமல்லா..!"

"இந்த சுகரைப் பாருங்கள். தென்னகமே போற்றிப் புகழ்கின்ற பல்லவ இளவரசரை அச்சமின்றி பெயர் சொல்லி அழைப்பதை..?"

"அதில் ஒன்றும் வியப்பில்லை, அமுதே! பாரெல்லாம் போற்றும் சிற்பக்கலையின் பேரறிஞர் ஆயனரின் மகள் சிவகாமியின் பேரன்பற்குரிய கிளியல்லவா..?"

"அதுதான் எனக்கும் வருத்தமாயிருக்கிறது."

"எது..?"

"ஆயனரின் மகளாய்ப் பிறந்தது. நானும் ஒரு கிளியாய்ப் பிறந்திருக்கலாம்.அப்படி பிறந்திருந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா..? "

"என்னவெல்லாம் செய்வாய்..?

"சுகரைப் போல் ஆயனரின் உடைந்த கற்கள் நிரம்பிய குடிசையில் இருந்துகொண்டு, சக்ரவர்த்தித் திருமகனை நினைத்து நினைத்து வாடுகின்ற அவரது பெண்ணைச் சுற்றிக் கொண்டிருக்க மாட்டேன். மாறாக, தொண்டை மண்டலம் முழுதும் வலம் வருவேன். பின் நுரை ததும்பும் காவிரி பாயும் வள நடான சோழ மண்டலம் செல்வேன். கொங்கு நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, ஈழ நாடு எங்கும் பறந்து செல்வேன். எங்கெல்லாம் எங்கள் இளவரசரின் புகழ் பரவாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் அவரது பெருமையை வாய் ஓயாமல் பரப்புவேன். பிறகு புலிகேசி ஆளுகின்ற கன்னட நாடு, கலிங்க நாடு செல்வேன். மாமன்னர் கர்ஷவர்த்தனர் ஆளும் வடனாடு செல்வேன். அங்கும் எங்கள் மாவீரர் மாமல்லரைப் பற்றி புகழ் பாடுவேன்..."

"சிவகாமி...! சிவகாமி..!"

"பொறுங்கள் அரசே.! இன்னும் முடியவில்லை.! இந்த பரந்த பாரதம் முழுதும் தங்களது புகழ் பரப்பியபின்னும் என் மனம் அமைதியுறாது. தேன் கோப்பையின் நுனியில் அமர்ந்து தேன் குடிக்கும் பூச்சி, பின் கோப்பையின் உள்ளேயே விழுந்து இன்பம் கொள்வது போல், உங்கள் புகழ் தேசமெங்கும் பரப்பிய பின், உங்கள் புகழாகவே மாறி விடுவேன். பின் இமயம் தாண்டி சீனம் செல்வேன். அங்கே இருக்கும் பஞ்சவர்ணக் கிளிகள் எல்லாம் என்னிடம் 'காஞ்சிப் பட்டு கொண்டு வந்தாயா' என்று கேட்கும். நான் கூறுவேன், காஞ்சிப் பட்டு எதற்கு, எங்கள் இளவரசர் மாமல்லரின் புகழ் பாடுகிறேன் கேளுங்கள். காஞ்சிப் பட்டை விடவும், அவரது புகழ் மேன்மையானது என்பேன். பின் காம்போஜம் செல்வேன். அங்கும் தங்களைப் பற்றியே பாடுவேன். பின் யவனம் செல்வேன். அங்கிருக்கும் நமது வணிகர்கள், தாங்கள் கூறியவற்றை மறந்து, நேர்மையற்ற வழியில் வணிகம் செய்தார்கள் எனில், அவர்களது செவியருகில் சென்று, உங்கள் பெயர் சொல்லி நினைவூட்டுவேன். பின் மல்லை திரும்பி, உங்களது புதிய புகழ்களைத் தெரிந்து, மீண்டும் தேசாந்திரம் புறப்படுவேன்...."

"சிவகாமி...! நீ போகும் இடமெல்லாம் உன்னோடு அழைத்துச் செல்வாயா..? நானும் உன்னுடன் வரலாமா?"

"பேரரசே..! தாங்கள் இவ்விதம் என்னிடம் கேட்க வேண்டியதே இல்லை. நான் செல்லும் வழியெல்லாம் , உங்களையும், உங்கள் நினைவுகளையும் சுமந்து கொண்டு தான் பறப்பேன். ஆனால் என்ன செய்ய..? ஆயனரின் மகளாய்ப் பிறந்து, மானிடப் பிறவி எடுத்து விட்டேனே...!"

"கண்மணி..! நாட்டிய உலகமே வியந்து போற்றும் அபினய சரஸ்வதி சிவகாமியாய் பிறந்ததற்காக நீ வருத்தப்படத் தேவையில்லை..! மாறாக, பெரும் சேனையுடன் வருகின்ற புலிகேசியை எதிர்க்கச் செல்லாமல் கோட்டைக்குள்ளேயே குறுகி அமர்ந்திருக்கின்ற இளவரசனாய், பிறக்காமல் போனோமே என்று மகிழ்ச்சியடை..!"

"இளவரசே..! இது என்ன பேச்சு.? மாமன்னர் இவ்வாறு கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார் எனில், அதில் ஏதேனும் பொருளிருக்கும் என்பது தாங்கள் அறியாததா..?"

"ஆயினும் இவ்வாறு, கோழையாய் அமர்ந்திருப்பதை எண்ணி, சில பொழுது, விரக்தியுறுகிறேன். மாறாக பரஞ்சோதியைப் போல் குடிமகனாய் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா..? பார், வந்த பொழுதிலேயே, போர்க்களம் சென்றுவிட்டான்"

"இருக்கட்டும்..! அவரைப் போல் தாங்கள் பிறந்திருந்தால் என்ன செய்வீர்கள், இளவரசே..?"

"உன்னைப் போல் தேசாந்திரம் கிளம்பி விடுவேன். மாமல்லனைப் போல் கோட்டைக்குள்ளேயே குடியிருக்க மாட்டேன்.."

"அன்பரே..! அவ்வாறு தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வீர்களா..?"

"ஐயம் ஏன் கண்ணே..? உயிர் இல்லாமல் உடல் மட்டும் பயணம் செல்ல முடியுமா..? எழுத்துக்கள் இல்லாமல் நூலினால் ஆன பயன் தான் என்ன ..?கொழுகொம்புடன் நிற்கும் தாமரை இல்லாமல் குள நீர் தேங்கி தான் என்ன?"

"இளவரசே..!"

"கேள் சிவகாமி..! இருவரும் ஏகாம்பர நாதர் கோயில் சென்று வணங்கி நமது பயணத்தைத் தொடங்குவோம். பிறகு வழியெங்கும் உள்ள திருக்கோயில்களை தரிசிப்போம். அங்கெல்லாம் உனது ஒப்பிலா நாட்டியத்தை நிகழ்த்துவாய். கோயில் சிற்பங்கள், பூத கணங்கள், தவ முனிவர் அனைவரும் கண் கொட்டிப் பார்க்கும் சிலையாவார்கள். நான் மட்டும் உனக்கு சுதி சொல்லிப் பாடுவேன். பின் சிராப்பள்ளி, தஞ்சை, நாகை செல்வோம். கோயில், கோயிலாய் சென்று, பின் சிற்றம்பலம் செல்வோம். 'ஆடற்கலையின் நாயகன்' சிற்றம்பலவாணன் முன் உனது திறமையைக் காட்டுவாய். பின் கடற்கரையோரமாய் செல்வோம். செழுமீன்களை நீ பார்ப்பாய். உனது ஒளிவீசும் விழிகளின் முன்னால், அவை கர்வபங்கப்படும். பின் சந்தன மரங்கள் நிறைந்த சேர நாடு செல்வோம். உன் நிறம் கண்டு, அந்த சந்தனத் தூள்கள், காற்றில் கரைந்து போம். பூவுலகில் பயணம் செய்து களைப்படைந்தாயா..? தேவேந்திரனைக் கேட்டு, புஷ்பக விமானம் பெறுவோம். பாரிஜாதம் நிறைந்த தேவலோகத் தோட்டம் செல்வோம். மாசறு பொன் போல் ஒளிரும் உன் திருமுகத்திலிருந்து, ஒளியெடுத்து, சந்திரனுக்கு வழங்குவேன். உன் பாதக் கழல் மணிகளுக்காக விண்மீன்களை எடுத்து வைப்பேன். சூரியனின் கதிர்களை எடுத்து, உன் கைவளைகளில் நிரப்புவேன். ஐராவதத்தின் மேல் அம்பாரியில் நாம் அமர்ந்து வானுலகைச் சுற்றி வருகையில், தன் துதிக்கை கொண்டு, பயணம் முழுதும் நம் மீது பன்னீர் தெளிக்க ஆணையிடுவேன். காஞ்சி திரும்பியதும், ஆயனரின் சிற்பக் கூடத்தில் நான் மாணவனாக மாறுவேன். நீ எனக்காக அபினயம் பிடிக்கின்ற தெய்வ ஸ்வரூபம் ஆவாய்...! அட, ஏன் சிரிக்கிறாய், சிவகாமி..?"

" நம் இருவரில் யார் முற்றிய பைத்தியம் என்று நினைத்தேன், இளவரசே..!"

" சந்தேகமென்ன..? இருவருமே தான்...!"

******
இது அமரர் கல்கி அவர்களின் 'சிவகாமியின் சபதம்' நாவலைப் பலமுறைப் படித்த பாதிப்பு. 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' என்ற தலைப்பின் கீழ் கொணர்வதற்காக, இந்த கற்பனை உரையாடல். ஏதேனும் பிழையிருந்தாலோ, யார் மனமாவது புண்பட்டிருந்தாலோ மன்னித்து பொறுத்தருள்க.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

:))

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
?

இரா. வசந்த குமார். said...

ரொமப நன்றிங்க... கல்கி அவங்க நாவல் எல்லாம் ரொம்ப படிச்சு இது போல ஆகிடுச்சுங்க... ;-))

பழூர் கார்த்தி said...

கலக்கலான வரலாற்று சிறுகதை. தூய தமிழ் உரையாடல்களும், பழங்கால உவமை மொழிகளும் தூள் கிளப்புகின்றன :-))

வாழ்த்துக்கள் !!

***

உரையாடல்கள் சில நீண்டு, சற்று சலிப்பைத் தருவது சிறுகுறை.

மொத்தத்தில் இது சரித்திர ஞாபகம் !!

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
இங்கே பாருங்கள் !!

முரட்டுக்காளை said...

நன்கு எழுதியுள்ளீர்கள். யாம் சொல்லியது இதோ.