Monday, April 13, 2009

கடிதமெழுதி!

ரு கடிதம் வரும் வரையிலும் இளங்கோவனின் வாழ்க்கை இயல்பாகத் தான் இருந்தது.

மேன்ஷனின் சிலந்தி வலை படிந்த மூலைகள். சிதறிக் கிடக்கும், உலகின் மஞ்சள் எகனாமிக் நேரங்கள். எம்ப்ளாய்ண்மெண்ட் நியூஸில் அடிக்கோடிட்ட பக்கங்கள். சுருண்ட பாய்கள். ரேண்டம் கோணங்களில் தலையணைகள். அதோ அந்த போர்வைக்குள் செருகிக் கொண்டு சொப்பன லோகத்தில் மகிழ்ந்து கிடக்கும் இளன், இளங்கோவன்.

கம்மங்குடியில் ஒரு தமிழாசிரியருக்கு மகனாகப் பிறந்த இளங்கோ, சென்னையின் திருவல்லிக்கேணி மாடியில் புரண்டு கிடப்பதன் பின்னே உள்ளது ஒரு தெய்வீகக் காதல் கதையின் சோக முடிவு. மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் திருவளர்ச் செல்வி காயத்ரியின் பாற்கொண்ட பேரன்பிற்கும், பெருங்காதலுக்கும் கிடைத்த பரிசு, ஒரு நாள் ரைஸ் மில் சந்துக்குள் கிடைத்த அட்வைஸ்.

"இளங்கோ...! இந்த ஜென்மத்துல நம்ம காதல் ஒண்ணு சேராது. எங்கப்பா துறையூர்ல இருக்கற சோமு மாமாவுக்கே என்ன கல்யாணம் பண்ணி வெக்க முடிவு பண்ணிட்டாங்க. என்ன மறந்துடு. என் வாழ்க்கையில நீ இனிமே குறுக்க வர மாட்டேன்னு நம்ம செல்லாண்டி அம்மன் மேல சத்தியம் பண்ணு..!"

சத்யசீலனான இளங்கோ, காதல் இன்புற்று விளையாடிய இடங்களான கவுண்டர் வீட்டுக் கரும்புத் தோட்டங்களையும், அய்யனார் கோயில் பம்பு செட்டையும் மீண்டும் கண் கொண்டு பார்க்க முடியாமல், ஒரு சுபயோக சுபதினத்தில் சென்னைக்கு பஸ் ஏறினான்.

சுப்பாக்கா மகன் குமாரசாமி அம்பத்தூர் தொழிற்பேட்டையின் மூலமாக இந்தியப் பொருளாதாரத்திற்காக உழைப்பது, இவனுக்கு ஒரு ஒட்டுப்புள்ளியாகி, இப்போது இவனும் ஒரு சென்னைவாசி!

ஒரு டிசம்பர் மாத முற்பகல் நாளில் பீச் முதல் தாம்பரம் வரை ஊரும் மின் வண்டியில் பயணம் செய்த போது, கம்மங்குடி காயத்ரியை மறக்கச் செய்ய ஒரு ஹேமாவைக் காட்டியது, நகரம். பின்னும் ஒரு ஆர்த்தி, ஒரு தேவி, ஒரு நேஹா...!

ந்த கடிதம் அவனது போர்வையின் மேல் எறியப்பட்டது. எல்லோரும் அகன்ற ஒரு பத்திரத் தனிமையில், இளங்கோ அந்த இன்லாண்ட் கடிதத்தை அசிங்கமாக கிழித்துப் பிரித்தான்.

முதல் அதிர்ச்சியாக அதில் இருந்தது அவன் கையெழுத்து. கொஞ்சம் வலப்புறம் சாய்ந்தாற்போல், நீல மையில், அவன் கையெழுத்தே தான். கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்துப் பார்த்தான்.

சென்னை.
1.
அன்புள்ள ,

இன்று அவளைப் பார்த்தேன். அதே கொலுசொலி. மூன்று முகம் பதித்த வெள்ளிக் கொலுசு எழுப்பும் அதே ஒலி. மையிடத் தேவை அற்ற கண்கள். அதே கண்கள். காயத்ரி. கம்மங்குடி காயத்ரி. என் காதலி.

கடற்கரையின் அலைகள் ஓடோடி வந்து தழுவிச் சென்ற அதே மஞ்சள் கால்கள். கரும் மச்சம் பதித்த வலது கெண்டைக் கால். காயத்ரி. கூடவே ஒரு கருப்பன். மஞ்சள் பாலியெஸ்டர் சட்டையில், மேலிரண்டு பட்டன்கள் திறந்து, காட்டு முடிகள் கலைந்திருந்த, இந்த மார்பையா என் காயத்ரி தினம் தழுவுகிறாள்...?

இளங்கோவன்.

அவனது கடிதமே தான். அதாவது அவன் எழுதியது போலவே இருந்தது. தேதியும், அன்புள்ளதன் அடுத்த வார்த்தையும் கலைந்து ஃப்ராக்டல் அலங்காரமாக காட்சியளித்தன.

யாரேனும் விளையாடுகிறார்களா..? அவனது புனிதமான காதலின் மேல் புளிக் கரைசலை ஊற்றுகிறார்களா..? ஆனால் அவனது இரகசியங்கள் செல்லாண்டி அம்மன் சத்தியத்தோடு சரிந்து போயினவே!

முதல் பக்கத்தில் 'கவிதைக் கொத்து' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி, கீழே அம்பு துளைத்த இதயம் வரையப்பட்டிருந்த எண்பது பக்க அன்ரூல்டு நோட்டில், ஏதோ ஒரு பக்கம் எடுத்து பத்திரமாக வைத்தான். அங்கிருந்து ஒரு கவிதை எட்டிப் பார்த்தது.

அவள்
சிரித்தது போல்
நேற்று
மழை!
'கொரக்..கொரக்..'
சாக்கடைத்
தவளையாய்
நான்..!

பின்னொரு நாள் இவன் தங்கியிருந்த 'கணேஷ் மேன்ஷனின்' முப்பத்தியேழாவது அறையிலிருந்து, சுமார் நூற்றைம்பது மைல் தொலைவில் நிலை கொண்டிருந்த புயலுக்கு என்ன பெயர் சூட்டுவது என்று பண்பலைகள் கேட்டுக் கொண்டிருந்த முற்பகல் வேளையில் மற்றுமொரு கடிதம் வந்தது.

சென்னை.
13. ஜூ...

ப்ரியமுள்ள கா...

இப்படி ஆரம்பிக்கலாமா..? அவளுக்கு கடிதம் எழுதுவது சாத்தியமான ஒன்று தானா? தமிழ்ப் பண்பாட்டின் படி நான் செய்வது சரிதானா? மணமான பெண்ணை மனதில் நினைத்துப் பார்க்கலாமா..? நேற்று கூடுவாஞ்சேரியில் அவனது ஒன்று விட்ட மாமா வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் என் இரத்த நாளங்களில் ஓடிய எழுபது லிட்டர் செங்குருதியும் செந்தேன் ஆனது என்று அவளிடம் சொல்லலாமா?

சொல்.

இளங்கோவன்.

யாரிடம் கேட்கிறான்..? யார் கேட்கிறார்கள்..? நானா..? இளங்கோவனுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

இந்த கடிதங்களை வைத்துப் பார்த்தால், என் காயத்ரியை நான் பார்த்து எழுதுவது போல் இருக்கின்றது. ஆனால், நான் அவளைச் சென்னையில் பார்க்கவேயில்லை. சத்தியச் சம்பவத்தில் தான் கடைசி.

அறையின் அறிவாளி என்று சகல விதங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட காளியண்ணனிடம் கேட்பதாக முடிவு செய்து கொண்டான்.

"இளங்கோ..! நீ பொய் சொல்ற. இது ரெண்டும் நீ எழுதின லெட்டர்ஸ் தானே..? இதுல உனக்கு என்ன குழப்பம்..?"

"இல்லண்ணே..! நான் எழுதல. என் கையெழுத்து மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்ச ரகசியம் இருக்கு. ஆனா சத்தியமா சொல்றேன் நான் எழுதல..!"

"ம்ம்ம்..! சனிக்கிழம தண்ணி அடிச்சியா? அப்போ தான் அடிமனசுல இருக்கற கோபங்கள், கவலைகள், ஆதங்கங்கள் எல்லாம் வெளிய வரும். அந்த நேரத்துல எழுதி இருக்க நீ...! இப்போ சுத்தமா மறந்திருக்க..! போ..! போ..!"

இந்த சுவாரஸ்யத்தை தானே சந்திப்பது, தீர்ப்பது என்று அப்போது தான் முடிவு செய்தான். இப்போது இளங்கோவனுக்கு, கடிதமெழுதி கூடுவாஞ்சேரியில் காயத்ரியை சந்தித்தானா இல்லையா என்ற ஆர்வம் அப்பிக் கொண்டது. அடுத்த கடிதத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினான்.

டுத்த கடிதம் வர கொஞ்ச நாட்கள் ஆனது. ரிலேட்டிவிடி தியரிப்படி ரொம்ப நாட்கள் ஆனது போல் உணர்ந்தான்.

சென்னை,
17. ஜூலை.07.

அன்புள்ள இளங்கோவன்...

இன்று அவள் தங்கியிருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன். ஒரு முதல் மாடியில், ஒரு குட்டிக் குழந்தையைக் கையில் ஏந்தி, தூரத்தில் மலைப்பாம்பாய் விரைந்த மின்வண்டியைக் காட்டிக் கொண்டிருந்தாள். உடனே ஒரு கவிதை தோன்றியது.

மலைப்பாம்பு
மின் இரயில்.
உன் கூந்தல்.

எப்படி இருக்கின்றது?

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென என்னைப் பார்த்தது போல் இருந்தது. டீக்கடை இருளுக்குள் பதுங்கிக் கொண்டேன். சடாரென அவள் வீட்டுக்குள் சென்று மறைந்தாள். கண்டிப்பாகப் பார்த்திருக்கிறாள். உடனே அங்கிருந்து அகன்று வந்து விட்டேன். ஒன்றே ஒன்று அவளைக் கேட்க வேண்டும்.

'எப்படி இருக்கிறாய் காயத்ரி..?'

இளங்கோவன்.

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அனுப்புநர் இளங்கோவன். பெறுநர் இளங்கோவன். தேதி ஒரு மாதம் கழித்து வரப் போகும் ஜூலை மாதம். இப்போது ஜூன்.

நானே எனக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தைய கடிதங்களில் சரியாகத் தெரியாமல் போயிருந்த நாட்களும், எழுதும் வார்த்தைகளும் இந்த கடிதத்தில் தெளிவாகத் தெரிகின்றன. எனில் அத்தனையும் நான் எழுதியன தான். ஆனால் எப்போது..? மற்றும் முக்கியமாக ஏன் எனக்கே..?

இளங்கோவன் ஓர் அழுத்தமான தீர்மானத்திற்கு வந்தான்.

இன்னும் ஒரு மாதம் இருக்கின்றது. அடுத்த மாதத்தில் எழுதப்படும் கடிதங்கள் எனக்கு இந்த மாதமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. கடிதங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களில் காணக் கிடைக்கும் தொடர்ச்சி ஏதோ சொல்வது போல் இருக்கின்றது.

அவனுக்கு இன்னும் முற்றுப் பெறவில்லை என்று தோன்றியது. இன்னும் ஒன்று முக்கியமாக நடக்க வேண்டிய ஒன்று பாக்கி இருக்கின்றது. அது என்ன..? அடுத்த கடிதத்தில் தெளிவாகி விடும்.

மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கத் தொடங்கினான். இன்னும் ஜூலை 7-க்கு பத்து நாட்களே இருக்கின்றன. என்னவோ அவன் மனதின் ஏதோ ஓர் அடியாழத்தில் கொஞ்சம் பயம் சுரந்து கொண்டிருந்தது.

ந்தே விட்டது ஜூன் இருபத்தேழில்!

சென்னை
21.ஜூலை.07.

இளங்கோவன்,

நீ ஒரு செமத்தியான தோல்வியாளி. உனது திருமுகத்திற்கு இன்று கிடைத்த அலங்காரங்கள் போதுமா..? இன்னும் வேண்டுமா..? அவளது கணவன், கூடுவாஞ்சேரி மாமா, மாடி வீட்டு மனிதர்கள்... அத்தனை பேரின் கைரேகைகளையும் கிழிந்து தொங்கும் உன் முகத்தில் இருந்து கண்டு கொள்ளலாம். அத்தனை குத்து பட்டிருக்கிறாய்..!

எங்கே போனது உன் கள்ளங்கபடமில்லாத காதல்? மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது என்றிருந்த உன் பேராண்மை எங்கே..? மார்க்கெட்டிற்கு வந்த மங்கை நல்லாளின் பொன் இடுப்பைப் பார்த்தவுடன், கூடுவாஞ்சேரி சூப்பர் மார்க்கெட்டை மறந்தாய்..! சென்னையை மறந்தாய்..! கால தேச வர்த்தமானங்கள் கடந்து, இரண்டு வருடங்களுக்கு முன் ஆண்டுத்திருவிழாவின் போது, ஊரே கோயிலில் இருக்க, முள் கம்பி வேலியை விலக்கி, கீற்று வேய்ந்த எட்டாம் வகுப்பு 'சி' பிரிவில் பெஞ்சுகளை ஒதுக்கி, விரித்த கதர்த் துண்டின் மேல் படுக்க வைத்து பிடித்துப் பார்த்த அதே அவளின் மஞ்சள் இடுப்பு ஞாபகம் வந்ததா?

இந்த முகத்தோடு, இந்த அவமானத்தோடு வாழ விரும்புகிறாயா..? வேண்டாம். மற..! உயிர் துற..! இற...!

இளங்கோவன்.

தெளிவாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

மூன்று நாட்கள் தூக்கம் வராமல், புரண்டு கொண்டே இருந்தான். எல்லோரும் கேட்டார்கள்.

"ஒடம்பு சரியில்லண்ணே..!"

"ஊருக்குத் தான் போய்ட்டு வாயேம்பா..!"

தீர்மானித்தான். எல்லாத் துணிகளையும் திணித்து, விடைபெற்று, சென்ட்ரல் செல்வதற்குள்... ஏதோ ஓர் உள்ளுணர்வு கூப்பிட்டது போல் உணர்ந்தான்.

கடற்கரைக்குச் சென்றான்.

அலையாடிய ஆயிரம் கால்களில், ஒரு கால் அவனது கவனத்தைச் சட்டென்று இழுத்துக் கொண்டது. அந்த வலது காலில் ஒரு கரு மச்சம். அந்தப் பெண்ணின் அருகில் நின்றிருந்தவன் அணிந்திருந்த மஞ்சள் பாலியெஸ்டர் சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் திறந்து, கொசகொசவென நெஞ்சு முடிகள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன.

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)

1 comment:

thamizhparavai said...

//அவள்
சிரித்தது போல்
நேற்று
மழை!
'கொரக்..கொரக்..'
சாக்கடைத்
தவளையாய்
நான்..//
எப்பிடிண்ணே இதெல்லாம்... என்னமோ போங்க...