நவீனக் கவிஞர் அனுஜன்யா, என்னையும் 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவராக அடையாளம் காட்டியிருப்பது மகிழ்ச்சி கொடுக்கின்றது. அவரது கவிதைகளில் நிறைய புரியாமல் போனாலும், படித்து யோசிக்க வைப்பதில் சமர்த்தர். புரியாததற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் போலிருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு சமாதானப்படுவேன். அவர் சொல்லித்தான் 'Tongue in Cheek' தெரிய வந்தது. நன்றிகள் சார்.
நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.வின் தத்துவத்தைத் தலைகீழாக்கி, ஆளாளுக்குச் சண்டை போட்டு, 'ஊராய்யா இது?' என்று சொல்லிக் கொண்டிருந்த போது, 'இந்தாங்க விருது எடுத்துக்கோங்க!' என்று அன்புக்கரசு ஐ.ஏ.எஸுக்கு போல் எல்லோரும் கொடுத்துக் கொள்ள, தமிழ் வலைக்களம் கொஞ்சம் சாந்தாமாகியிருப்பதாகத் தெரிகின்றது. செந்தழலுக்கு நன்றி.
விருது பெற்றவர்கள், தாங்களும் ஆறு பேரைக் கூப்பிட்டுக் காட்டி விட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஒரே நிபந்தனை, அவர்கள் சுவாரஸ்யமாய் எழுதுகிறார்கள் என்று விருதினர் நம்பியிருக்க வேண்டும்.
எந்த அளவுகோலில் 'சுவாரஸ்யம்' என்று அளவிடுவது என்று யோசித்தால், ஒன்று தான் தோன்றியது. ஒரு பதிவை ரேண்டமாகப் படித்து, அது ஏற்படுத்திய ஈர்ப்பின் காரணமாக எழுதியவரின் அத்தனை பதிவுகளையும் அப்பவே படிக்கத் தூண்டியதானால் அவர்களை சுவாரஸ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.
அப்படி சிக்கியவர்கள் ::
அ. வெட்டிப்பயல்.
கி.பி.2006 மேயிலிருந்து எழுதி வரும் வெட்டிப்பயலின் எழுத்துக்களில் தெறிப்பவற்றில் முதலிடம், அமைதியான நகைச்சுவை. டெவில்ஸ் ஷோக்களில் கவுண்டர் கவுண்ட்டர் கொடுத்து ஓட வைப்பார். ஆர்த்தி கார்த்திக்கோடு நம்மையும் யோசிக்க வைப்பாள். கொல்ட்டிகளும் கோழியும் சிரிக்க வைப்பார்கள். அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரனின் அறிவுரையை சிரமேற்கொண்டு யாரையும் புண்படுத்தாமல் எழுத விரும்பும் வெட்டிப்பயலின் கோப முகம் 'சாரு நிவேதிதா' பற்றிய விவகாரத்தில் தெரிய வந்தது.
நல்ல சிறுகதைகளும் எழுதும் இவர், பெரும்பாலும் மென்பொருள் களத்திலேயே எழுதுவது போதாது என்று சொல்ல விரும்புகிறேன். சொல்லப்படாத தளங்கள் சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றது. வெட்டிஜி என் கல்லூரி நண்பனின் அறைத்துணைவர் என்பது அறிந்து கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாலும், மனதின் அடியில் கலக்கமும் ஏற்பட்டது.
'என்னென்ன சொல்லி இருப்பானோ..?'
ஆ. ஆர்.வி., பக்ஸ்.
இருவரும் நூவார்க்கில் செட்டிலாகி யுகங்கள் ஆனாலும் இன்னும் மண் மறக்காமல் 'அவார்டா கொடுக்கறாங்க' தளத்தில் 'கல்யாணப் பரிசு'க்கும், 'மந்திரிகுமாரி'க்கும் விமர்சனம் எழுதிக் கொண்டு, நாஸ்டால்ஜியாவில் நனைந்து கொள்கிறார்கள். படிக்கும் நமக்கும் ஜில்லென்றிருக்கின்றது. ஸ்ரீதர் பற்றி எழுதி எழுதி மாய்கிறார்கள். 'அட, போதும்பா!' என்று பிடித்து இழுத்தாலும், 'மாத்தேன் போ!' என்று அடம் பிடித்தார்கள். நாகேஷும் பெரிதாகப் பாதித்திருக்கிறார்.
மற்றொரு பதிவான 'கூட்டஞ்சோறில்', 'உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் திடீரென்று கொஞ்ச நாள் ஒன்றும் எழுதாமலும் இருப்போம்' என்று சலுகை கொடுக்கும் போது, 'நமக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் குறைவாய் இருந்தால் தான் என்ன?' என்று தோன்ற வைக்கும் அளவிற்கு எழுதிய ஜாதி, ஆரியர்கள், இட ஒதுக்கீடு பற்றியவற்றை விட, இலக்கியவாதிகள் மற்றும் புத்தகங்கள் பற்றிய பதிவுகள் எனக்கு முக்கியமாகப் படுகின்றன.
நிறைய தருகிறார்கள், சலிப்பைத் தவிர!
இ. லதானந்த்.
ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல்களில் பைத்தியமாய் மயங்கியிருந்த போது, அடிக்கடி 'ஃபாரஸ்ட் ரேஞ்சர்' வைத்து நிறைய கதைகள் படித்திருக்கிறேன். (சுபா இராணுவக் கதைகள் எழுதுவார்கள்). உண்மையான காட்டு அதிகாரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று லதானந்த் சார் வலைப்பதிவைப் படித்து தெரிந்து கொள்ளலாம். (எல்லோரும் 'லதானந்த் மாமா' என்று அழைக்கிறார்கள். இவருக்கு ரெண்டு பசங்க தான். மாமானு கூப்பிட்டு என்ன ஆகப் போகின்றது? ஹூம்..!)
கொங்குத் தமிழில் புகுந்து விளையாடும் பதிவுகள் ரொம்பப் பிடிக்கும். அவ்வப்போது வெண்பாவும் எழுதுவார்; சென்னை மொழி பேசுவார்; சொல்லாமல் கொள்ளாமல் ரேஞ்சர் மாமா அவதாரம் எடுப்பார். பத்திரிக்கைகளில் கதைகள் எழுதுவார்; கடைசி வரியில் ஒரு பஞ்ச் வைப்பார். நண்பர்கள் கோவை வந்தால், அந்தப் பயணத்தை மறக்க முடியாத படி கவனிப்பார். ஆனால் என்ன எழுதினாலும் ரெண்டு விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். கிளுகிளு கமெண்ட் மற்றும் குளுகுளு படம்.
ரவி பிரகாஷ் சாரை அன்பாலே திணறடித்தார். அதற்குப் பின்னூட்டிய வெண்பா :
காட்டிலாகா ஆசாமி கண்போல் கவனிப்பார்.
ஊட்டிக்குச் செல்ல விருப்பமா? - மாட்டுஜெர்கின்.
கைவீசிப் போகலாம், கிஸ்ணா சுவீட்ஸின்மென்
மைசூர்பாக் கும்கிடைக்கும், உண்.
ஈ. டுபுக்கு.
நெல்லைச் சீமையிலிருந்து ஒரிஜினல் சீமைக்கே போய் கலக்கும் டுபுக்கு சாரின் பதிவுகள் படிக்காமல் நகைச்சுவை முயற்சி செய்வது, வீண். நான் வலைப்பதியத் துவங்கிய புதிதில் இவரது பதிவுகள் ஓர் ஊக்கி. காமெடியில் அடி பின்னியெடுக்கும் அட்டகாசப் பதிவுகள் படைக்கும் டுபுக்கு சார், தேன்கூடு போட்டிக்கு எழுதிய ஒரு கதை, அவரது மறு திறமையைக் காட்டி மிரள வைத்தது. வசனமே இல்லாத ஒரு குறும்படம் எடுத்தார். சிறுகதைகள் துல்லியமாக எழுதுவார். டூர் சென்று வந்ததை விவரிப்பார். பாம் ப்ளாஸ்ட்டில் இருந்து தப்பியதை பயமேயின்றி விவரிப்பார்.
எதைக் குறிப்பாகச் சொல்வது என்று தெரியாத அளவிற்கு ரகவாரியாக கில்லியாடும் டுபுக்கு சார், சுவாரஸ்யர் என்று சொன்னால் மறுப்பவர் யாருமிருக்க மாட்டார். அவரது பதிவிலேயே ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார். பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.
உ. சந்தை நிலவரம்.
வழக்கமாகப் பொருளாதாரம் தொடர்பான செய்திகள் படிப்பது நியூரான் பிரதேசத்தை கிறுகிறுக்க வைத்து, 'நமீதா வாந்தி எடுத்தாங்களாமே?' என்று வேறு தெருவுக்குத் தாவச் செய்து விடும். மும்பையிலிருந்து எழுதும் இவர், சுலபமாக முகம் மறைத்துக் கொண்டு சந்தை நிலவரங்களை அழகாக எழுதுவதில் புரிகின்றது. மட்டுமின்றி, மும்பை வெள்ளம், தாஜ் தாக்குதல் போன்ற நகர நிகழ்வுகளில் உள்ளூரியாக தன் கருத்துக்களை வைத்தும், அதே சமயம் ஊடகங்களில் சொல்லாத செய்திகளையும் சொன்னார்.
பொதுவாக உலர் விஷயமாக இருந்தாலும், ஏனோ எனக்குப் படிக்கப் பிடித்திருக்கின்றது.
ஊ. வானவில் வீதி - கார்த்திக்.
மிக புத்துணர்வாக எதையாவது படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், வலிமையாக நான் கார்த்திக்கை சிபாரிசிப்பேன். குறைவாகத் தான் எழுதியிருக்கிறார். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் இன்னஸன்ஸ் மினுக்கும் அத்தனை இளமையாகத் தெரியும் பளிச் வார்த்தைகள் & context. ஒரு ஜிலீர் போதை உள்ளிருக்கும் எழுத்துக்கள். படித்துக் கொண்டே எழுதுவதைத் தொடர்ந்தால், கார்த்திக் விரைவில் பெருமளவில் விரும்பப்படும் ஒரு ரைட்டராவார்.
தவிரவும் இன்னும் நிறையர் கவரும் விதத்தில் எழுதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பலருக்கும் தெரிந்தவர்களாய் இருப்பதால் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியானது.
ஒரே ஒரு வரி சொல்ல முடியும். எதையும் எழுதி முடித்தவுடன் ஒரு முறை படியுங்கள். உங்களுக்கு முதலில் பிடித்திருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் CtrlA DEL தான். இரக்கமே கூடாது. உங்களுக்கே பிடிக்கும் வரை திருத்த வேண்டியது தான். எழுதுவது குறைந்தது ஒருவராவது ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எழுதும் நீங்களாவது! ஒன்பது வரிகள் ஆகி விட்டன..!!
நன்றிகள். பதினொரு வரிகள்.....!!!!!
18 comments:
வாழ்த்துகள் தோழரே, உங்களுக்கும், உங்களிடம் விருது பெறும் மற்றவர்களுக்கும்.
-ப்ரியமுடன்
சேரல்
அன்பு சேரல்...
நன்றிகள். அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.
ஆறு பேருக்கு விருது வழங்கும் பெரிய பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.
வெகு சிறப்பாகவே எழுதி வரும் உங்களிடமிருந்தே ஆரம்பித்து விடலாமா என்று யோசிக்கிறேன்.
இருந்தாலும்,பதிவுலகத்திற்கு வெகு புதியவர்களுக்கு இந்த விருது கொடுத்தால் அவர்களுக்கு சிறந்த ஊக்கம் கிடைக்கும் என்பதால், பல புதிய பதிவு பூக்களை அலசி ஆய்ந்த பிறகு இந்த விருதுகளை என் சார்பாக வழங்கலாம் என்று யோசித்து வருகிறேன்.
மீண்டுமொருமுறை நன்றி.
நன்றி தல...
இதுல டுபுக்கு தான் நமக்கு குரு. அவர் அளவுக்கு எல்லாத்தையும் சுவாரஸ்யமா எழுதறவங்க எனக்கு தெரிந்து குறைவு...
அதே மாதிரி வானவில் வீதி கார்த்திக் நான் விரும்பி படிக்கிற பதிவர்...
எனக்கு முன்னாடி கிடைத்திருந்தா உங்களுக்கும் சேர்த்து மூணு பேர் முடிச்சிருப்பேன். இப்ப வடை போச்சேனு ஆகிடுச்சி :)
இன்னும் இரு நாட்களில் பதிவிடுகிறேன் :)
வஸந்த்!
நெம்ப நன்றி! ஒரு சின்ன விளக்கம். “இது ரசகுல்லா விஷயம்” அப்படினு சொல்லியிருக்கீங்க ஒங்க கமெண்டுல. எனக்கு லேசா சக்கரை வியாதி இருக்கு. அதனால .. ஹி!ஹி... எப்படிச் சொல்றது!.. நன்றி கூட sorry யையும் சேத்துச் சொல்ல வேண்டியிருக்கு. தப்பா நெனைக்காதீங்க.
வசந்த், விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்... சரியான ஆட்களுக்கு அதை கொடுத்ததற்குப் பாராட்டுகள்..
உங்க கிட்ட இருந்து வாங்கவே ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். அதோட ரொம்ப பெரிய வார்த்தைகள் சொல்லியிருக்கீங்க. என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப நன்றி. :)
சீக்கிரம் பதிவு போடுகிறேன்.
நன்றி வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா!
வாழ்த்துக்கள் உங்களுக்கும், மற்ற 5 பேருக்கும்!
:)
அன்பு Maximum India...
நன்றிகள். சைலண்டாக உங்கள் பதிவுகளைப் படித்து அறிந்து கொள்ளும் பலரில் நானும் ஒருவன். தொடருங்கள்.
***
அன்பு வெட்டிஜி...
நன்றிகள். மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள்.
***
அன்பு லதானந்த் சார்...
நன்றிகள். ஒன்றும் பிரச்னையில்லை.
***
அன்பு வெண்பூ...
நன்றிகள். தேர்வுகளை நீங்களும் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி.
***
அன்பு Karthik...
நன்றிகள். இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.
விருதுக்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் பாராட்டு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப நன்றி. கூடிய சீக்கிரம் இந்தத் தொடரை நானும் தொடர்கிறேன். நானும் சில புதியவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.
வெட்டி - உங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
விருது பெற்றமைக்கென் வாழ்த்துக்கள் வசந்த் அவர்களே!
வசந்த்,
முதலில் அருமையான ஆறு பேரைத் தேர்வு செய்ததற்கு வாழ்த்துகள்.
வெட்டிப்பயல் பாலாஜி என்னுடைய favourite பதிவர்களில் ஒருவர். நண்பரும் கூட. லதானந்த் அனைவரும் அறிந்த பதிவர். நிச்சயம் படு சுவாரஸ்யம் அவர் எழுத்துகள்.
டுபுக்கு பற்றி அறிந்திருக்கிறேன். படிக்கத் தவறிவிட்டேன். அவர் பாலஜிக்கே குரு என்றால் அவசியம் படிக்க வேண்டும். 'வானவில் கார்த்திக்' பெயர் வித்தியாசமாக இருப்பதால் பரிச்சயமாக இருக்கு. அவசியம் படிக்கிறேன்.
Maximum India பதிவுகள் பங்கு வணிகம் பற்றி எழுதுகிறார் என்ற அளவில் தெரியும். படிக்க வேண்டும். முற்றிலும் புதிய அறிமுகம் ஆர்.வி. & பக்ஸ். ஒரு cursory look இல் சுவாரஸ்யமாக இருக்கு.
அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி வசந்த்.
இப்பதான் பாத்தேன். 'எழுவிழுதல்'. இப்படி எழுதி விட்டு என்னைப் பற்றி "அவரது கவிதைகளில் நிறைய புரியாமல் போனாலும், படித்து யோசிக்க வைப்பதில் சமர்த்தர். புரியாததற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் போலிருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு சமாதானப்படுவேன்". Same to you :)
அனுஜன்யா
அன்பு டுபுக்கு சார்...
நன்றிகள். சீனியரான உங்களின் பார்வையில் சுவாரஸ்யமான எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வெகு ஆவலாக இருக்கிறோம்.
***
அன்பு அகரம் அமுதா...
நன்றிகள். தங்கள் வலைச்சர ஆசிரியரமைக்கும் வாழ்த்துக்கள்.
***
அன்பு அனுஜன்யா...
நன்றிகள். வெட்டிஜி கலக்கலாக எழுதுபவர். யாவர்க்கும் அரிதான நகைச்சுவையில் அசத்துபவர். யாருக்குத் தான் பிடிக்காது..? லதானந்த் சார் எங்க ஊர்க்காரர். அதனால் எக்ஸ்ட்ரா மென்முனை உள்ளது. கொங்கு மொழியில் எழுதும்/படிக்கும் போது எனக்கு தேன் குடித்தாற்போல் இருக்கும். டுபுக்கு சார் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டியவர். நானெல்லாம் அவருடையதை எல்லாம் படித்து, அலுவலகத்தில் பைத்தியக்காரன் (அவர் இல்லீங்க!) போல சிரித்துக் கொண்டிருந்தேன். டுபுக்கு சார் மற்றும் கொங்குராசா இருவரையும் படித்து தான் வலைக்கு சிலர் வந்தோம். மேக்ஸிமம் இந்தியாவின் பொதுவான பதிவுகளில் இருக்கும் நேர்மை எனக்குப் பிடிக்கும். வலையில் நிறைய பேருக்கு இலவச பங்கு வர்த்தக ஆலோசகராக இருக்கிறார், நட்புக்காக! ஆர்வி குழுவினரின் தெளிவான நடை பிடிக்கும்.
//'வானவில் கார்த்திக்' பெயர் வித்தியாசமாக இருப்பதால் பரிச்சயமாக இருக்கு.
இது டிபிக்கல் அனுஜன்யா பஞ்ச்.
//Same to you :)
செல்லாது.. செல்லாது.. உங்க ரேஞ்சுக்கு குழப்பியடிக்க முடியாது...!
ச்சும்மா சொன்னேன். முதல் படித்தலில் கிர்ர்டித்தாலும், ஆழ்ந்த புரிதல்களையும் வழக்கமான சிந்தனையை மடைமாற்றி விடவும் செய்கின்றன உங்கள் பல கவிதைகள்.
அன்புள்ள வசந்தகுமார்,
எங்கள் தளத்தை சுவாரசிய தளமாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! அதுவும் அந்த "மாத்தேன் போ!" மிக நன்றாக வந்திருந்தது. :-)
பல வேலைகளால் பதிவுகளை குறைத்து கொள்ள நினைத்திருந்தபோது, உங்கள் தேர்வு வந்திருக்கிறது. எப்போது நான் ஆறு பதிவர்களை தேர்ந்தெடுப்பேன் என்று சொல்வதற்கில்லை. :-)
ஆர்வி/பக்ஸ் - அவார்டா கொடுக்கறாங்க, கூட்டஞ்சோறு
அன்பு ஆர்.வி./பக்ஸ்...
நன்றிகள். எனக்கு சுவாரஸ்யமான பதிவுகள் எவையென யோசித்துப் பார்க்கும் போது கிடைத்த வலைப்பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அவசரமில்லை. :)
ஒரு வழியாக எனது சுவாரசிய பதிவர் தேர்வுகளை பதிந்துவிட்டேன். உங்கள் பொறுமைக்கு நன்றி!
http://koottanchoru.wordpress.com/2009/09/12/சுவாரசிய-பதிவர்-விருது/
அன்புடன்,
ஆர்வி+பக்ஸ்
வசந்த குமார்,
”மாத்தேன் போ” - புதுமைபித்தன் ஸ்டைலில் கலக்குகிறீர்கள்
நன்றி.
அன்பு ஆர்.வி., பக்ஸ்...
நன்றிகள்.
Post a Comment