Thursday, January 31, 2008

11 மணி வெயில்.



நிறங்கள் மனிதர்களுக்கும் அவர்களது மனங்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. வெயிலுக்கும் பல நிறங்களும், மணங்களும் வயதும் உண்டு.

காலையில் தொடங்கும் வெயிலுக்கு இனிய மணம் உண்டு. இரவின் மெல்லிய பனிப் படலத்தை உறிஞ்சிக் கொண்டு, இளஞ்சூட்டைக் கொடுத்து விழிக்கச் செய்யும் வெயில், கொஞ்சிக் குலாவும் குழந்தையைப் போல்..!

மதியம் 12 மணிக்கு அடிக்கின்ற வெயில் காற்றின் ஈரத் துகள்களைத் தின்று விட்டு விஸ்வரூபம் எடுக்கும் இளைஞனின் வலிவுடன் தன் முழு ஆதிக்கம் செலுத்தும். இதன் மணம்
வறண்ட காற்றில் அலையும் தூசியைப் போல் புழுங்கச் செய்யும்.

மாலையில் எதிர்த் திசையில் இருந்து வீசுகின்ற ஒளித் தீற்றல்கள் நீண்ட நிழல்களை உற்பத்தித்து விட்டு, மெல்ல மட்கிப் போம். இதன் மணம் மீண்டும் தலையெடுக்கும் ஈரம்.

இந்த வயதின் மாறிகளுக்கு இடையே, மாறுகின்ற நிலைகளில் இருக்கின்ற வெயிலின் பரிமாணங்கள் வியப்பிற்குரியன.

இந்த வெயில்களின் என்னை மிகக் கவர்ந்தது 11 மணி வெயில்.

இது வளர்பதின் பருவ (Adolescent) வெயில் எனலாம். மெல்லிய சூட்டில் இருந்து, வலிமை பெற்றுக் கொண்டிருக்கின்ற தருணம் இது.

மந்தமான பல காலங்களில் இந்த 11 மணியும் ஒன்று.

நான் கண்ட சில பொழுதுகள்.

விரிசல்கள் வழியே மெல்லக் கசிந்து கொண்டிருக்கும் வெயிலின் கீற்றுகள் மேலே விழ சோம்பலாய் இயக்கம் கொள்ளும் வட்டாச்சியர் அலுவலகம் முன், ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கையில், அரைக்கைச் சட்டையின் விளிம்புகள் வழி வியர்வையை வழியவிட்டது ஒரு நள்.

அரை நாள் வழியே செல்லும் பயணங்களில் நகரவே நகராத காலத்தின் முட்களில் உட்கார்ந்து கொண்டு பழிப்புக் காட்டும் ஒரு நாள்.

பகல் நேரப் பயணங்கள் கொல்கின்ற காலங்களில் நசநசக்கும் ஈரத்துடன் புஸ்புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு தூரே தெரிகின்ற மொட்டை மலைகளையும், ஆங்காங்கே தென்படும் தீய்ந்த பனை மரங்களையும் காட்டிச் செல்லும் ஒரு நாள்.

பஸ் பாஸ் எடுக்க டிப்போ சென்று கூட்டத்திற்குள் வரிசையில் நின்று, ஒவ்வொரு அடியாக நகர்கையில் டீசலின் நெடியோடு தாண்டிச் செல்லும் அழுக்குடைத்த பேருந்து வாரி இறைத்துச் செல்லும் அப்போதைய நொடிகள் வரை சேர்த்து வைத்திருந்த சூட்டை..!

காலத்தின் கரிய கரங்களில் சிக்கியிருந்த நாட்களில் காலை உணவையும், மதிய உணவையும் கலந்து உண்ண நேரம் கொடுத்தது அந்தப் பதினொன்று மணிப் பொழுதுகள்...!


Get Your Own Music Player at Music Plugin

No comments: