இப்பதிவு இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலாவது, கடந்த சனி, ஞாயிறுகளில் மலை நாட்டின் தென்மலா (தேன்மலை) மற்றும் பாலருவி பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றிருந்த கதையைப் பேசும். மற்றுமொரு பகுதி, திங்கள் முதல் இன்று மதியம் வரை பயணித்த சொந்த ஊர்ப் பயணத்தைக் கூறும்.
சனிக்கிழமை காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பயணம், மெல்ல மெல்ல மலையின் மடிகளில் ஏறி, பின் தென்மலாவை அடைந்தது. இது தேன்மலை என்றும் குறிப்பிடப் படுகிறது. இங்கு ஒரு அணை இருந்தது. காலை ஒரு கடையில், சூடாக இட்லி உண்டோம். கேரள நண்பர்கள் மிகவும் கஷ்டப்பட்டே அதனை உண்ண வேண்டியதாயிற்று. இத்தனைக்கும் இட்லி கொஞ்சம் மெதுவாகத் தான் இருந்தது. புட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது தமிழக எல்லை என்பதால், இட்லி, தோசை மட்டுமே கிடைத்தது.
அங்கு ஒரு ஃபான்ஸி கடையின் போர்டில் Snakes கிடைக்கும் என்று இருந்ததைப் பார்த்ததும் மென் அதிர்ச்சி. காட்டுப் பகுதி ஆதலால், உண்மையாகவே கிடைக்கும் போலும் என்று நம்பிக் கொண்டோம்.
முதலில் அரை கி.மீ. தள்ளி இருந்த Eco Tourism அலுவலகத்தின் நுழைவு வாயிலை அடைந்து, அங்கிருக்கும் வசதிகளை அறிந்து கொண்டோம். பின் முதலில் இரும்புப் படிக்கட்டுகளால் அமையப் பெற்றிருந்த ஏணிகள் வழியே சற்று செங்குத்தான பாதை வழிச் சென்றோம். பாதி தூரம் சென்ற பின் தான் இதன் த்ரில் தெரிந்தது. ஆட ஆரம்பித்தது. எல்லோரும் கும்பல், கும்பலாய் ஏறத் தொடங்க, அப்படியும், இப்படியுமாக ஆட ஆரம்பித்தது. எனக்கோ, Shrek படத்தில் வரும் காட்சி நினைவுக்கு வரத் தொடங்கியது.
பின் ஒருவழியாக அட்ரீனலின் சுரப்பைத் தூண்டி விட்டு, மலையை அடைந்தோம்.
அங்கு Rock Climbing என்று ஒரு சாகச நிகழ்வு நடத்தப்படும் என்று இருந்தது. சிலர் முயன்று உச்சியை அடைந்து, மீண்டும் தரையை அடைந்தனர். எவரெஸ்ட் உச்சியை அடைந்து திரும்பியவர்கள் போல் முகங்களில் அப்படி ஒரு மகிழ்வு. 'நாங்க எல்லாம் இந்த மாதிரி கயிறு பிடித்து ஏற மாட்டோம். அப்படியே மலையேறும் சாகசம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்' என்று மனதிற்குள் சவால் விட்டுக் கொண்டு (வெளியில் கேட்டு விடப் போகிறது..) அடுத்திருந்த பாதை வழி நடக்கத் தொடங்கினேன்.
அங்கே இறங்குவதற்கு கடினமான பாதைகள் வழி, இறங்கி, சில இடங்களில் ஓடி கீழே செல்ல... படகுக் குழாம், குளத்தைக் கயிறு வழி கடக்கும் சாகசம், துப்பாக்கிச் சுடும் விளையாட்டு, கட்டை ஏணிகள் வழி நடந்து மலை உச்சி அடைதல் என்று பல இருந்தன.
துப்பாக்கியைப் பார்த்ததும், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டு 5 தோட்டாக்கள் சுட்டுப் பார்க்க, ரேஞ்சுக்குள் நான்கு புல்லட்டுக்கள் பதிந்திருந்தன. எல்லோரும் கை தட்ட, ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் இதற்கு எடுத்துக் கொண்டிருந்த முற்காலத்து பயிற்சிகள் இங்கே யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி மோக்ளி பிறகு கூறுவான்.
பிறகு சும்மா இராமல் சருகுகள் வழி, உடைந்த மரங்கள் வழி குனிந்து, வளைந்து, தவழ்ந்து செல்ல மற்றொரு பக்கத்தைக் காணலாம் என்று நினைத்து ஏறிப்போக சாலை ஓடியது. 'ச்சே' என்றாகி விட்டது. பிறகு நமது வால் பையன் குணத்தைக் காட்டும் விதமாக அங்குமிங்கும் தவ்வித் தாவி, பாய்ந்து, ஓடி, குதிக்க உள்ளிருக்கும் காட்டுவாசி வெளியே வந்து விளையாடினான்.
பிறகு எல்லோரும் களைப்பாகி, வெளியே வர, Fanta, Maa, water packet அமோகமாக விற்றுத் தீர்ந்தன.
பின் நடந்து மதிய உணவு ஏற்பாடு செய்திருந்த இடத்தை அடைந்து, ஒரு கட்டு கட்டி விட்டுப் பார்த்தால், கண்கள் செருக ஆரம்பித்தன. ஆங்காங்கே கும்பல் கும்பலாக அமர்ந்து கதை, அந்தாக்ஷ்ரி, மொக்கை, பாட்டு என்று குழு குழுவாக களை கட்ட ஆரம்பித்தது. நமக்கு தான் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாமல் மொழி பெரும் தடையாக இருந்ததே.. என்ன செய்வது என்று யோசித்து, வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன்.
வேன் மூலமாக அணைக்கட்டில் ஒரு படகுச் சவாரி ஒருமணி நேரம் மெதுவாக ஊர்ந்து நீர் நிலைகளில் நகர்ந்து, அலையோடு விளையாடி, மனதுக்குத் தோன்றிய பாடல்களோடு பயணித்து (இளங்காற்று வீசுதே..), மீண்டும் அலுவலகம் வந்தோம்.
சுற்றுலா அலுவலகம் சென்று, பட்டாம்பூச்சி சஃபாரியைப் பார்த்தோம். இது பட்டாம்பூச்சி பெருக்கம் செய்யும் காலம் இல்லையாம் (ஜூன் - ஆகஸ்ட்). எனவே வெறும் பொம்மைகளையும், ஆங்காங்கே இருந்த சின்னச் சின்ன பூச்சிகளையும் பார்த்துக் கொண்டு திரும்பினோம். பின் Water Fountain ஆரம்பிக்க மாலை ஏழு மணி ஆகும் என்பதால், அணைக்கட்டு அருகில் இருக்கும் சிலைக் குழுமம் சென்று அதனையெல்லாம் பார்த்து, மிதக்கும் பாலம் சென்று நடந்து பார்த்து, water fountain வந்தோம்.
டிஷ்யூம் டைலாமோ, ப்ரிட்னியின் பேபி ஒன் மோர் டைம், பம்பாய் ஹம்மா, ஹம்மா (இந்தி), மற்றும் சில குதிக்க வைக்கும் மலையாளப் பாடல்கள் என கலந்து கட்டி அடிக்க, நீர்த் திவலைகள் வண்ண ஒளியின் ஆடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டன. கடைசியாக 'சாரே ஜஹான் சே அச்சா' போட்டு நிறைவு செய்தார்கள். உணர்வு வயப்பட்ட மக்கள், 'பாரத் மாதா கீ ஜே' போட்டு கலைந்து சென்றார்கள்.
தங்குமிடம் போய் தங்கி விட்டு, இளைப்பாறி, கேம்ப் ஃபயரில் தண்ணி, சிக்கன், என்று ஒர் வெட்டு வெட்டி விட்டு, அயர்ந்து உறங்க இரவு இரண்டானது.
காலை ஆறு மணிக்கு விழிப்பு வந்து விட, அருகில் இருந்த மலை மேல் ஏறிப்பார்க்க, கதிரவனின் ஆயிரமாயிரம் கிரணங்கள் அப்படியே மிகப் பிரம்மாண்டமாய் விரிந்து மேற்குத் தொடர் மலைகளின் மேனியெங்கும் வருடிக் கொடுத்துச் சிவக்க வைக்கத் தொடங்கின.
அங்கிருந்து கிளம்பி, பாலருவி சென்று (குற்றாலம் 28 கி.மீ.) அங்கும் எல்லாரும் குளிக்க, நாம் தான் பொன்முடியிலேயே குளித்தாகி விட்டதே என்று, அங்கும் மலைகள் மீதேறி சுற்றிப் பார்க்க, சற்று தொலைவில் பாம்பு ஊர்ந்து சென்று மறைந்ததைக் கண்டேன்.
அங்கிருந்து கிளம்பி, மீண்டும் தேன் மலை வந்து சின்ன ஷாப்பிங் முடித்து விட்டு, திருவனந்தபுரத்திற்கு வண்டியைக் கிளப்புகையில் மாலை 2.30 மணி.
கழக்குட்டத்தில் இறங்க மாலை 5 ஆகி இருந்தது. பின் வீடு சென்று கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு, அழுக்குத் துணிகளை அள்ளிப் போட்டு, வாங்கி வந்த காட்டுத் தேன், அக்தர் பாட்டில், பொன்முடி தேநீர்த் தூள் பாக்கெட் எடுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் கழக்குட்டம் வந்து கொல்லம் பேருந்து பிடிக்கையில் என் கைகடிகாரம் சரியாக மணி ஏழு என்றது.
அடுத்து 15 மணி நேர பயணம் காத்திருந்தது, நான் எதிர்பார்த்திராத சுவாரஸ்யங்களுடன்...!
No comments:
Post a Comment