Monday, February 11, 2008

பாவம் தான்.

யணம் போல் களிப்பும், களைப்பும் ஒரே சமயத்தில் தரக்கூடிய வேறு ஒரேயொரு விஷயம் தான் இருக்கின்றது. அதைப் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. அதற்கு தனி பிரிவு வைத்துள்ளேன். இப்பதிவில் சென்ற இரண்டு நாட்களாக பயணித்ததைப் பற்றி சொல்கிறேன். அவ்வப்போது மனசாட்சி குறுக்கே லைனில் வரும். அதை அப்படியே டீல்-ல விட்ருங்க.

நேற்று சேலத்தில் ஒரு சென்னை நண்பரது திருமணம். அதற்காக ப்ளான் செய்து, சனிக்கிழமை காலை 4 மணிக்கு செல் அலாரம் வைத்து கஷ்டப்பட்டு எழுந்து, காலை 5:30 மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றேன். அந்த நடு ராத்திரியிலும்(?) அருகில் உள்ள கோயிலில் இருந்து அவ்வப்போது பக்தர்கள் வந்தும், போய்க் கொண்டும் இருந்தனர். சரியாக 6மணிக்கு எர்ணாகுளம் செல்லும் பேருந்தே வந்தது. அழகாக அதில் ஏறிப் பார்த்தால், எல்லாரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். நல்லவேளை ஓட்டுநர் மட்டும் விழித்துக் கொண்டிருந்தார். அநியாயம் பாருங்க, நடத்துனரும் கூட...! அவரும் தூங்கித் தொலைத்திருக்கலாம்.

வெள்ளி இரவுப் பயணம் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் கேரளா வழியாகப் பயணம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். முதன் முறையாக மாநிலத்திற்குள் பயணிக்கிறோம். அதை ஏன் இரவில் பார்க்க வேண்டும்? பகலில் பார்க்கலாம் என்று தான் சனிக்கிழமை முழுதும் பயணத்திலேயே கழிந்தாலும் பரவாயில்லை என்று சனிப் பயணம் முடிவு செய்தேன்.

திருவனந்தபுரத்தில் இருந்து, கொல்லம் சென்று அங்கிருந்து எர்ணாகுளம் சென்று, அங்கிருந்து பாலக்காடு சென்று, கோவையை அடைந்து அங்கிருந்து ஊருக்குச் சென்று விடலாம் என்ற ப்ளான். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆரம்பத்திலேயே எர்ணாகுளம் செல்லும் பேருந்தே கிடைத்து விட்டது.

குளிர்ப்புகையின் ஊடுறுவல்களுக்குப் பயந்து, இறுக்கிச் சாத்திய கண்ணாடி ஜன்னல்களின் மேல் விளக்குகளின் little விட்டில் பூச்சிகள் போல் பனித்துளிகள் படர்ந்திருந்தன. ரேடியோ மிர்ச்சி (ஈ வல்லிய ஹாட்டு), பிக் எஃப்.எம்., சன் எஃப்.எம். எல்லாவற்றிலும் ஜேஸுதாஸ் பொழிந்து கொண்டிருந்தார். கண்களை மூடி அமர்ந்து, ஜன்னலைக் கொஞ்சமாகத் திறந்து வைக்க.. ஜில்லென்று காற்று பட, தெளிய ராகங்கள் கேட்க...உடலோடு சேர்ந்து மனமும் பறந்து கொண்டேயிருந்தது.

வேகமாகவே ஓட்டினார் ஓட்டுநர். மெல்ல மெல்ல விடியலின் கீற்றுகள், வெயிலின் கூற்றுகளாய்த் தலைகாட்ட ஆரம்பித்தன. சாலையின் கருஞ் ஜரிகை மேல் பாய்ந்தோடும் எறும்பாய்ப் பேருந்து பறந்தது.

கொல்லம் கடந்து பறக்கையில் தான் தெரிந்தது. நெடுஞ்சாலை, கடற்கரையோரமாகவே அமைந்த விஷயம். (சென்னை ஈ.சி.ஆர் மாதிரி என்று சொல்லலாம்.) ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகள், தடுப்பு பாறைகளின் மேல் மோதித் தெறித்து நீர்க்கோலம் போட்டுக் கொண்டிருந்தன. கொல்லம் பேருந்து நிலையத்துக்குப் பின்னாடியே, பெரிய, மிகப் பெரிய ஏரி என்று நினைக்கிறேன். BackWaters. பெரிய நீர்நிலை. போட்டிங்கும் போகிறார்கள். மீன்பிடித்தலும் நடக்கின்றது. அதனைக் கடக்கும் பாலத்தில் போகையில், மஞ்சள் ஒளியின் பின்புலத்தில், கரிய மீனவர்கள் வலை வீசும் காட்சி... அற்புதம்...!

வடக்கே செல்லச் செல்ல, கரிய மேகங்கள் போர்த்தியிருந்த வானின் விரிப்பு எங்களை வரவேற்று இருந்தது. வழியில் பார்த்த வீடுகளின் முன் எல்லாம், சிறிய, பெரிய நீர்க் குளங்கள். அவற்றில் எந்த பயமும் இல்லாமல், வாத்துகள், கொக்குகள் நீந்திக் கொண்டும், பறந்து கொண்டும் இருந்தன. எல்லார் வீட்டு முன்னும், சுற்றியும் தோட்டங்கள் வைத்துள்ளார்கள். வாழையும், தென்னையும் மெஜாரிட்டிக்காகப் போட்டி போடுகின்றன. அவ்வப்போது மாமரங்களும், பலா மரங்களும் கண்ணில் படுகின்றன். முக்கனிகளும் பறிக்க ஆளில்லாமல் காய்த்தும், கனிந்தும்...!

சென்ற இரவு தான் மழை பெய்திருக்கும் போல்...! தார்ச் சாலைகளின் கருமை இன்னும் கொஞ்சம் கரு மை பூசி இருந்தது.

மிக வேகமாய்ப் போன பேருந்து, ஆலப்புழை வந்து சேர்ந்தது.



லப்புழை நெருங்குவதை நன்றாக இனம் கண்டு கொள்ள முடிகின்றது. பின்ன என்னங்க, வழியெங்கும் சின்னதும், பெரியதுமாய் நீரோடைகள், பச்சை இலைகள் மூடிய ஓடைகள், படகுகள் நகர்ந்தவாறு இருந்தால் தெரியாதா என்ன? சில இடங்களில் பெரிய பரப்பு - Backwaters. தண்ணீர்..தண்ணீர்... எங்கு பார்த்தாலும் தண்ணீர்...!

பேருந்து செல்லும் தடத்தின் ஓரமாகவே சின்ன நீரோடை. அதில் டூரிஸ்ட் மக்கள் மட்டுமின்றி போக்குவரத்திற்காகவும் மக்கள் பயணிக்கிறார்கள் என்பது நம்மூர் ஷேர் ஆட்டோ, ஆட்டொ, மினி வேன் கணக்காக விதம் விதமாக போட்டுகள் ஓடையின் எல்லைகளில் நின்றிருந்ததை வைத்துக் காண்கையில் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பெரிய போட்டில், கொல்லம் - ஆலப்புழை என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும், ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தூரத்தையும் தண்ணீரின் மேலேயே கடக்கலாம் என்பது! குறித்து வைத்துக் கொண்டேன், அடுத்த முறை இப்படித் தான் பயணிக்க வேண்டும் என்று!

ஆலப்புழை பேருந்து நிலையத்தில் கொஞ்ச நேரம் ஹால்ட்டுக்குப் பிறகு, மீண்டும் வேகமெடுத்த பேருந்து எர்ணாகுளம் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. இதற்கு நடுவில் ஒரு சின்ன விளையாட்டு நடந்தது.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, ஒருவர் கைகாட்டி நிறுத்தினார். தன் மனைவியை பேருந்தில் ஏறச் சொல்ல, அந்த பெண் படிக்கட்டை நோக்கி ஓடினார். அப்போது தான் அவரிடம் பணம் கொடுக்காததை உணர்ந்த கணவர், ஓட்டுநரிடம் 50 ரூ கொடுத்து விட்டார். பேருந்தும் கிளம்பி விட்டது.

பிறகு தான் தெரிந்தது, அந்த அம்மணி பேருந்தில் ஏறவில்லை என்பது. ஓட்டுநரும் கொஞ்சம் நேர்மையானவர் போல், கணவர் தேடி வருகிறாரா என்பது போல் அவ்வப்போது திரும்பிப் பார்த்து விட்டு, பின் சிரிப்போடு பணத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

அடுத்தது நடந்தது தான் அட்டகாசம். பேருந்து வேகமெடுத்துப் போகத் தொடங்கி ஒரு 2 கி.மீ. போயிருக்கும். திடீரென பேருந்து நின்றது. பார்த்தால், அதே பெண் சிரிப்போடு கை காட்டி நின்றிருந்தார். பின் பேருந்தில் ஏறிக் கொண்டார். திரும்பிப் பார்த்தால், கணவர் வெற்றிப் புன்னகையோடு ஒரு சாலையில் நின்று கொண்டிருந்தார். அது குறுக்குச் சாலை போல் ! ஓட்டுநரிடம் கை காட்டினார். வேண்டா வெறுப்போடு, ஏமாற்றத்தைப் புதைத்துக் கொண்ட புன்னகையோடு ஓட்டுநரும் அவரைப் பார்த்து கையசைத்து, கணவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை உறுதிபடுத்தினார்.

கொஞ்ச நேரத்திலேயே, கைக்கு எட்டிய பணம் கைமாறிப் போவதை பார்த்துக் கொண்டார். ஆனால் ஓர் உணமையை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அதற்குப்பிறகு பேருந்து இன்னும் பேய் வேகமெடுத்து ஓடத் தொடங்கியது.

அதிகாலை 6 மணிக்கு ஏறிய பேருந்து சரியாக முற்பகல் 10:50 மணிக்கு எர்ணாகுளம் வந்து சேர்ந்தது.



ர்ணாகுளம் பெரிய நகரமாய்த் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். திருவனந்தபுரத்தில் பார்க்காத பல நகைக் கடைகள், துணிக்கடைகள், கூட்டம், வழக்கம் போல் M.G.ரோடு என்ற சாலையில் இருந்தன. அட, அவ்வளவு ஏன்? நகரின் எல்லையில் இருந்து, பேருந்து நிலையத்திற்குப் போவதற்குள்ளேயே 5 இடங்களில் சிக்னலில் நின்று, நின்று தான் போனோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நகரின் எல்லையை நெருங்குவதற்குள், பெரிய பெரிய நீர் நிலைகள். இவை சாதாரண ஏரிகள் போல் தோன்றவில்லை. பட்டொளி வீசிப் பறந்த கொடியோடு நேவிக் கப்பல்கள் எல்லாம் நின்று கொண்டிருந்தன. பாலத்தில் கடக்கையில், சாலையோடு ஒட்டினாற்ப் போல், இருப்புப் பாதையும் இணையாக வந்து கொண்டிருந்தது.

பின் நகருக்குள் புகும் போது, இருப்புப்பாதையின் குறுக்காக, ஓர் ஆட்டுக் குட்டி சோகமாகப் படுத்துக் கொண்டிருந்தது. அது எப்படி இரயில் வரும் போது தப்பித்து ஓடும் என்ற கேள்வியுடன், அதன் சோகத்திற்கான காரணத்தையும் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அடுத்த நாள் ஞாயிறு என்பதால் இருக்குமோ, என்னவோ?

நிலையத்தில் நன்றாகச் சாப்பிட்டு விட்டு, வழக்கமாய் வாங்கும் விகடன், குமுதம், ஜூ.வி., ரிப்போர்ட்டர் இவற்றோடு இப்போது புதிதாக வாங்கத் துவங்கியிருக்கும் 'வனித' என்ற மலையாள பத்திரிக்கையையும் வாங்கினேன். 'யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் மலையாளம் படிக்கக் கற்றுக் கொள்வதற்காகத் தான் 'வனித' வாங்கினேன்' என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? யாரது அங்கே.. படிக்கக் கற்றுக் கொள்ள 'மாத்ருபூமி' போன்ற நாளிதழ்களை வாங்க வேண்டியது தானே என்று 'புத்திசாலித் தனமாக' கேட்பது? செல்லாது.. செல்லாது..!

சும்மா கும்மென்று அடுத்த அதிர்ஷ்டம் அடித்தது. வழமையாக காலை 7:30க்கு சேலத்தில் இருந்து, எர்ணாகுளம் வந்து சேர வேண்டிய பேருந்து, எல்லையான வாளையாரில் ஏற்பட்ட கடும் போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டதால், காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது. நல்லதாய்ப் போயிற்று என்று ஏறிக் கொண்டேன். காலை 11:30 மணிக்கு கிளம்பியது.

இது தமிழக அரசுப் பேருந்து. இதன் டிரைவரை 'ஓட்டுநர்' என்று சொல்ல மாட்டேன். 'நகர்த்துனர்' அல்லது 'உருட்டுநர்' என்று தான் சொல்லுவேன். அப்படி மெதுவாக பேருந்தை நகர்த்திச் சென்றார். சரி, நகர எல்லை தாண்டியவுடன் கொஞ்சம் வேகமெடுப்பார் என்று நினைத்திருக்க, ஒரு கூடை மண் விழுந்தது, அந்நினைப்பில்!

பொறுமை இழந்து நடத்துனரிடம் இவ்வளவு வேகமாய்ப் போகிறீர்களே, எனக்குப் பயமாய் இருக்கிறது என்றேன். கடுப்பான அவர், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக நம்ம பேருந்துகளில் 'Locked Engine' என்று பொருத்தி இருக்கிறது, அதனால் இவ்வளவு வேகமாகத் தான் போக முடியும் என்று ஒரு Technical Reason-ஐ அள்ளி வீசிச் சென்றார்.

போதாக் குறைக்கு தொலைக் காட்சிப் பெட்டியும், பல்லிளித்து விட்டது. நடத்துநரும் இவனை பழி வாங்காமல் விடக் கூடாது என்று பெரும் முயற்சி செய்து பார்த்தார். 'நாங்க 4 பேர். எங்களுக்கு பயமே கிடையாது' என்று வெறும் டயலாக் மட்டும் கேட்டது. மற்றப்டி சூர்யா கண்ணில் தென்படவே இல்லை.' நான் ஒருத்தன் தான். எனக்குப் பயமாக இருக்கிறது' என்று நினைத்துக் கொண்டேன்.

ஆமாங்க நான் மட்டும் தான் ஒரே பயணி, அந்நேரத்திற்கு! (அப்புறம் திருச்சூர் வந்தவுடன் கூட்டமாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்) வழியில் ஓர் அரை மணி நேரத்திற்கு சாலையில் Block. என்ன என்று பார்த்தால், ஜில்லா சம்மேளனம் என்று சின்னப் பசங்களை ஓட வைத்துக் கொண்டு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது ஆளுங்கட்சி..! (இதுக்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.)

பிறகு ஒரு மாதிரி உருட்டி, உருட்டி திருச்சூர் வந்து சேர்ந்தது.



'த்ரிஸ்ஸூர்'(Thrissur) என்று தான் ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம் எனக்கு திருச்சூர் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் எல்லாம் சொல்ல மாட்டேன்பா! ;-) (ம.சா :: ஒரு வேளை த்ரிஷா + ஊர் என்று வருவதால் இருக்குமோ?)

சேர நாட்டுப் பொழுதுகள்.

மேற்சொன்ன பதிவில் சொல்லாமல் விட்ட (அட, மறந்து போயிடுச்சுங்க..!) ஒரு விஷயம். முதன் முதலில் சேர மண்ணில் கால் பதித்தது திருச்சூரில் தான். மிகச் சின்ன வயதில், ஓர் உறவினர் இங்கு இருந்தார். அப்போது ஒரு முறை இங்கு வந்ததும், ஒரு மிருகக் காட்சி சாலையை விசிட் அடித்ததும் நினைவுக்கு வருகிறது.

இப்பொது கூட ஒரு சர்க்கஸ் போட்டிருந்தார்கள்.

நகர் முழுதும் பெரிய பெரிய வீடுகள். பங்களாவோ, குடிசையோ, வீடோ, மனையோ.. எதுவாக இருந்தாலும், ஒரே செடி, கொடி, பூக்கள் மயம் தான். ஒரு வீட்டின் கூரை மீதெல்லாம் பூக் கொடி படர்ந்து ஒரே பசுங்கூரை. பார்க்கப் பார்க்க ஒரே சோகம் தான். நம்ம ஊரில் இம்மாதிரி எங்கும் பார்க்க முடிவதில்லையே என்று.

பேருந்து நிலையத்தில், இறங்கி மதிய உணவை முடித்துக் கொண்டு கப்பென்று மறுபடியும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். என்ன சாப்பிட்டேன் என்றா பார்க்கிறீர்கள்? 2 புரோட்டாவும், மீன் வறுவலும் தாங்க. இப்பெல்லாம் மீன் இல்லாமல் சாப்பிடறதே இல்லை...!

அப்புறம் மலை ஏறி, இறங்கி, வளைந்து, நெளிந்து பாலக்காடு வந்தடைந்தோம். இருட்ட ஆரம்பித்து விட்டிருந்ததால், ஒன்றும் சரியாகப் பார்க்க முடியவில்லை. இரவு ஆறு மணிக்கு கோவை மாநகரின் காந்திபுரம் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பெருமூச்சோடு என்ட்ரி கொடுத்தது பேருந்து...!



மாநகரின் பேருந்து நிலையம் அதன் வழக்கமான மின் விளக்குகளின் புன்னகையோடும், நாற்றமடிக்கின்ற மூலைகளோடும் சரம் சரமாய் மக்களோடு அலைந்து கொண்டிருந்தது. அதன் எதிரிலேயே பொருட்காட்சி ஒன்றும் போடப்பட்டிருந்தது. அந்தக் கூட்டமும் குவிந்து கொண்டிருந்த முக்கியச் சாலையில் ஊர்ந்தவாறு ('நகர்த்துனருக்கு' மிக்க சந்தோஷமாய் இருந்திருக்கும். யாரும் ஏன் இவ்வளவு மெதுவாக என்று கேட்க முடியாது அல்லவா?) பேருந்து சேலம் நோக்கி ஓடத் துவங்கியது.

கொல்லம் செல்லும் பாதி வழியில், இணைப்பு துண்டாகி பூச்சிகள் மட்டுமே இரைந்து கொண்டிருந்த செல் வானொலி மீண்டும் உயிர் வந்து இசைக்கத் தொடங்கியது. இங்கும் அதே மிர்ச்சி, சூரியன், கோடைப் பண்பலை, பிக் என்று அலறடித்துக் கொண்டிருந்தார்கள்.

அதுவும் பீளமேடு வரை தான். பிறகு சூரியன் மட்டும் முக்கி, முனகி பெருந்துறை வரை கேட்டுக் கொண்டிருந்தது.

பின் நெடுஞ்சாலையில் பயணித்தவாறு, பவானி பைபாஸில், நகர்த்துனர்க்கும், நடத்துனர்க்கும் ஒரு கும்பிடு போட்டவாறு இறங்க, இரவு 8:50 மணிக்கு புதிய மேம்பாலங்களோடு, கூடுதுறைக் கோயில் கோபுரமும் 'என்ன தம்பி, ரொம்ப நாளாக இந்தப் பக்கம் காணோம்' என்று வாஞ்சையோடு கேட்டது.

காலையில் சேலம் செல்லப் போனால், வழியெங்கும் நான்கு வழிச் சாலைக்காக கொத்திப் போட்டிருந்த நெடுஞ்சாலையும், நடுவில் போடப்பட்டிருந்த செடிகளின் வரிசையும், அடித்த குளிர்க் காற்றும், இதமான வெயிலும் (முந்தின நாள் இரவு தான் மழை பெய்திருந்ததாம்) மண்ணைச் சுழற்றியடிக்க 'புழுதி தான் நம்ம சட்டையாக்கின'.

கல்யாண மண்டபத்தைக் கண்டுபிடித்து, பின் கல்யாணச் சாப்பாட்டை ஒரு கை பார்த்து, கொண்டு போயிருந்த கிஃப்டை கொடுத்து, ஒரு கை கொடுத்து, கொஞ்ச நேரம் நண்பர்களோடு மொக்கை போட்டு விட்டு, மதியம் ஒரு மணிக்கு சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பவானி செல்லும் பேருந்தில் ஏறி அமர, போட்டாங்க பாருங்க ஒரு படம்..!

'பூவெல்லாம் கேட்டுப் பார்'!

அதெல்லாம் கேட்க முடியாது என்று சொன்னால் விடவா போகிறார்கள்? தலையெழுத்தே என்று அதைப் பார்த்துத் தொலைத்தோம். (நம்ம பேரைக் கெடுக்கறதுக்குனே இந்த இயக்குநர் இந்தப் படம் எடுத்தார் போல் இருக்கு!) நானும் பார்க்கிறேன்! இந்த 'அவள் வருவாளா', 'பூவெல்லாம் கேட்டுப் பார்', விக்ரமன் படங்கள் இதெல்லாம் இந்த மாதிரி சர்வீஸ் பஸ்ல போடறதுக்குனே நேர்ந்து விட்டிருக்காங்க போல!

சங்ககிரியில் வெள்ளரிப்பிஞ்சு பிஞ்சு பிஞ்சு இருந்தது. அதையும் ஒரு வெட்டு வெட்டி விட்டு, வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்து விட்டு, இன்று மீண்டும் அலுவலகம் வர வேண்டுமே என்று கிளம்புகையில் நேரம் இரவு 6 ஆகி விட்டிருந்தது.

ஈரோடு சென்று அப்படியே கோவை சென்று விடலாம். இல்லாவிடில் வரும் போது இரண்டு முறை கை கொடுத்த அதிர்ஷ்டம் இந்த முறையும் கை கொடுத்தால் நேரடியாக கேரளப் பேருந்தே கிடைத்தாலும் கிடைக்கும் என்று நம்பி ஈரோடு சென்றேன். 'வாடா மகனே வா! எப்பவும் அதிர்ஷ்டம் கூடவே இருக்காது மக்கா' என்று விதி சொல்லியது என் காதில் விழாதது என் துரதிர்ஷ்டமே என்பது பிறகு தான் தெரிந்தது.

சும்மாவா? மாநகராட்சி ஆகி விட்டதே..! புதிய முகம் கொள்ள ஆரம்பித்திருக்கும் என்று நினைத்து, ஈரோட்டை அடைந்தேன். ம்ஹூம்! அவ்வளவு சீக்கிரம் அரசாங்க வேலைகள் நடக்காது..! மாநகராட்சியாக மாறுவது என்ன, ஆளுங்கட்சியின் புது தொலைக்காட்சி சேனல் கொண்டு வருவது போல் எளிதான வேலையா என்ன, இரண்டே மாதத்தில் ஒளிரச் செய்வதற்கு? அதற்கெல்லாம் நெம்ப நாளாகும் என்று தெரிந்தது.

இரவு 9:30 மணிக்கு ஈரோட்டிலிருந்தே எர்ணாகுளத்திற்கு நேரடிப் பேருந்து (தமிழக அரசுப் பேருந்து) இருக்கிறது என்று சொன்னார்கள். அட, அதுவரைக்கும் எதற்கு நேரம் வீணாய்க் கழிப்பானேன்? அதற்குள் கோவை போய் விட்டால், அங்கிருந்து நிறைய கேரளப் பேருந்துகள் இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. காத்திருக்கும் நேரம் வீண் என்ற எண்ணம் மற்றும் ஏற்கனவே 'ஊர்ந்த' அனுபவம் இருப்பதால், கேரளப் பேருந்திலேயே செல்லலாம் என்று முடிவு செய்து, கோவை செல்லும் பேருந்தில் ஏறினேன்.

விதி நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

'உன்னை நினைத்து' என்று ஒரு படம் போட்டர்கள். முடியல. சூர்யா தத்துவம் தாங்க முடியல. சார்லியோட காமெடி தாங்க முடியல. சுந்தர்ராஜன் பாட்டு தாங்க முடியல. சோக பொம்மையா வர்ற லைலா வோட மெழுகு முகம் பிடிக்கல. சிரிக்கவே சிரிக்காத ஸ்நேகாவைப் பார்க்கப் பிடிக்கல.

க்ளைமாக்ஸில் விக்ரமனின் பஞ்ச் டயலாக்குகள் முடியவே முடியல...!

அடித்துப் பிடித்து காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டேண்டில் இறங்கி இரவு இட்லி முடித்து, திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் விசாரித்தால், எதுவும் பேருந்து தற்போதைக்கு அங்கிருந்து இல்லை. சேலத்தில் இருந்து வந்தால் உண்டு என்றார்கள். 'ஆஹா! வெச்சிட்டாங்கய்யா!' என்று பனி பெய்யும் இரவில் 'தரையில் உதிர்ந்த நட்சத்திரம்' போல் நின்று கொண்டேன்.

இனிய இரவில் மென் பாடல்களைப் பொழிந்து கொண்டிருந்த சூரியனைக் கேட்டுக் கொண்டு, கடையில் பார்த்தால் அடுத்த வெர்ஷன் ஜூ.வி. வந்திருந்தது. அதையும், இந்தியா டுடேயையும் வாங்கிக் கொண்டு, காத்திருந்து கடைசியில் இரவு 12:30 மணிக்கு சேலத்திலிருந்து எர்ணாகுளம் பேருந்து வந்தது. நல்லவேளை இது வேறு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.

நல்ல அலைச்சலில் இரண்டு நாட்கள் இருந்ததால், டிக்கெட் எடுத்ததும், சீட்டை முக்கால் படுக்கையாக்கி, பூச்சி இரைய அரம்பித்த செல் வானொலியை பெட்டிக்குள் கடாசி, கால்களை நீட்டி உறங்கத் துவங்க.. கனவின் பிடிகளுக்குள் அமிழ்ந்து போகலானேன்.

திகாலை 5:30 மணிக்கு எர்ணாகுளத்தை அடைந்து ஓர் ஓரமாய் மூலையில் அடைந்து கொண்டது பேருந்து.முகமெல்லாம் அடைந்து கொண்டிருந்த தூக்கக் கலக்கத்தைத் தண்ணீரில் விரட்டி விட்டு பார்க்க, ஏ.சி. பேருந்து ஒன்று திருவனந்தபுரம் செல்ல நின்று கொண்டிருந்தது. பின் கொஞ்ச நேரத்திற்குள் இரண்டு சாதாரண பேருந்துகள் வந்தன. இரண்டில் எதில் ஏறிக் கொள்வது என்ற சிந்தனையில் ரொம்ப நேரம் செலவழிக்காமல், ஒன்றில் ஏறிக் கொண்டேன். அந்நேரத்திற்கே பள்ளிச் சீருடையில் மாணவிக் கண்மணிகள் அதில் ஏறிக் கொண்டார்கள். மாணவர்களைக் காணவேயில்லை.! எல்லா ஊரிலும் இது தான் பசங்க நிலைமை போல என்று நினைத்துக் கொண்டேன்.

விடிகாலையில் எர்ணாகுளத்தின் அழகு மஞ்சள் விளக்குகளின் மினுமினுப்பில் இருந்தது.

நன்றாய்த் தான் போய்க் கொண்டிருந்தது பேருந்து. விதி சும்மா இருக்குமா? எங்கேயோ படபடவென சத்தம் கேட்டது. ஓட்டுநர் பேரிங் போய் விட்டது என்று அவராகவே முடிவு செய்து, ஆலப்புழை வரை ஓட்டிக் கொண்டு வந்து, பேருந்தை ஓரங் கட்டி விட்டார்.

பிறகு நடத்துனர் வேறொரு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டார். அதில் ஏற்கனவே கூட்டம் அள்ளிக் கொண்டிருந்தது. இருந்தாலும் ஏறிக் கொண்டோம்.

ஒருவனுக்கு வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. அவன் கேட்பதெல்லாம் கிடைக்கிறது. திடீரெனப் பார்த்தால், ஒரு சறுக்கல்..! அவன் வாழ்வு மிக்க க்ஷீண திசை அடைகின்றது. அதற்காக அவன் மனதைத் தளர விடலாமா? இல்லை, மனம் வெறுத்துப் போய் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ளலாமா?

கூடாது. அந்தக் கஷ்ட காலத்திலும் பயணத்தைத் தொடரத் தான் வேண்டும். ஏதோ ஒரு நேரம் விடியும், எவருக்கும்..!


இத் தத்துவத்தை இன்று உணர்ந்தேன்.

ஒரு பேருந்தில் சொகுசாக அமர்ந்தவாறு சென்றோம். வண்டி பாதியில் நின்று விட்டது. வேறொரு பேருந்தில் தான் போயாக வேண்டும். ஆனால் அதில் அமர்ந்து செல்ல முடியாது. 'இல்லை, நான் அமர்ந்து வந்த்வன். எனக்கு இனியும் அமர்ந்து தான் போயாக வேண்டும் என்று நின்று கொண்டிருந்தால்' பயணம் தொடர முடியாமல், பாதிய்ல் நிற்க வேண்டியது தான்.

கிடைத்த வண்டியில் ஏறிக் கொண்டு பயணத்தைத் தொடர வேண்டியது தான்.

இதிலும் ஓர் அதிர்ஷ்டம் (?).

ஒரு தேவதை போல் சேர நாட்டு அழகோடு ஒரு சின்னப் பெண்ணும் அதே பேருந்தில் வந்தாள். அப்படியே சுத்தமான மஞ்சள் நிறம். ஒரு தூசு துரும்பு இல்லை முகத்தில்! கண்களுக்கு என்று தனியாக மை போட வேண்டியதே இல்லை. இயற்கையாகவே இமைகள் கருமையாகத் தான் இருந்தன. இப்போது தான் பருக்கள் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் 15 - 16 வயது தான் இருக்கும் என்று தோன்றியது.

இதில் மேட்டர் என்னவென்றால், கூடவே அவள் தந்தையும் வந்திருந்தார். அவர் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்தால், 'அய்யோ பாவம்' என்று தான் தோன்றியது.

தாய்ப் பறவை அப்படியே குஞ்சுகளை இறக்கைகளால் மூடிக் கொண்டு வெருண்ட பார்வை பார்ப்பது போல், அப்படியே பெண்ணை மூடிக் கொண்டார். எவனும் பெண்ணின் அருகில் நெருங்க முடியாமல் அணைத்து, சுற்று முற்றும் அடிக்கடி முறைத்துப் பார்த்து, எவனும் பெண்ணை உற்று உற்று பார்ப்பதை பார்வையாலேயே மிரட்டி...

உட்கார இடம் கிடைத்ததும், பத்திரமாக பெண்ணை ஜன்னல் ஓரமாக உட்கார வைத்து, தான் காவலாக அடுத்து அமர்ந்து, பெண் தூங்கித் தூன்கி விழுந்தாலும், தான் அவ்வப்போது தூக்கத்தில் இருந்து திடுக் திடுக்கென விழித்து,....

ரொம்பக் கஷ்டங்க, பெண்ணின் தகப்பனாய் இருப்பது! அதுவும் அழகான பெண்ணின் தகப்பனாக இருப்பது, நிஜமாலுமே வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்வது போல் தான் போல்!

எனக்கு அவர் படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாகி, சுற்று முற்றும் பார்த்தால், முக்கால்வாசி ஆண்கள் இங்கெயே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்குத் தான் வெட்கமாகிப் போனது. நம்மையும் இந்தத் தகப்பன் எப்படி முறைத்துப் பார்த்திருப்பான் என்று தோன்றியது.

இப்படி பொத்திப் பொத்தி வளர்த்த பெண் குழந்தையை திடீரென எவனோ ஒருவன் கையில் கொடுத்து, 'பத்திரமா பார்த்துக்கப்பா' என்று சொல்லும் போது தான் கண்களில் கடல் பொங்குகிறதோ..?

'வீட்டைக் கட்டிப் பார்', 'கல்யாணம் பண்ணிப் பார்' என்று சொல்லி வைத்தார்கள்.'அழகான பெண்ணைப் பெற்று அருமையாக வளர்த்து கல்யாணம் பண்ணிப் பார்' என்பது தான் உண்மையாலுமே கஷ்டமான வேலையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிறகு ஒரு வழியாக காலை 11:30 மணிக்கு கழக்குட்டம் வந்து சேர்ந்தேன்.

(நான் நோக்கியாவில் எடுத்த புகைப்படங்கள், பின்பொரு சமயம் பதிக்கப்படும்.)

பி.கு. 1 ::

திரும்பி வருகையில் ஏதும் விவரிக்கவில்லை என்பதற்கு காரணம் இரண்டு. இது போன்ற சிந்தனைகள் வசம் போய் விட்டதாலும், அலுவலகம் செல்லத் தாமதமாகிற்தே என்ற பதற்றத்தினாலும், எதையும் கவனிக்கவில்லை.

பி.கு. 2::

ம.சா. : உனக்கு வயசாகிடுச்சு. அதான் அப்பாக்கள் பற்றியெல்லாம் கவலைப்பட ஆரம்பிச்சுட்ட.

நான் : நான் யூத்து தான்.

ம.சா. : எப்படி சொல்ற?

நான் : நான் போட்டிருந்த டீ-ஷர்ட் கலரும், அந்தப் பொண்ணு போட்டிருந்த சுடி கலரும் ஒரே பிங்க் தான். அதை நெனச்சு அல்ப சந்தோஷமா இருந்துச்சே. அப்ப நான் யூத்து தானே?

ம.சா : இப்ப புரிஞ்சிடுச்சு.

நான் : நான் யூத்துனு தானே?

ம.சா. : அதில்லை. உனக்கு வயசானாலும், நீ திருந்தப் போறதில்லைனு..!

நான் : %$#*&^@!.

No comments: