Friday, September 08, 2006

விரல் பிடிப்பாயா..?

டற்காற்று விட்டு விட்டு வீசிக் கொண்டிருந்தது. பொறிகின்ற நெருப்புக் கீற்றுகள் காற்றில் பரவிக் கொண்டிருந்தன. உப்புமணம் படர்ந்த கடற்கரையெங்கும் வந்து போன மனிதர்களின் நினைவாய் குப்பைகள். வெடித்த பலூன், ஈரச் சுண்டல் காகிதம், ஒற்றைச் செருப்பு, வறுத்த மீன் செதில்கள், காண்டம்...

வேத நாயகம் கண்களை மூடிக் கொண்டார்.

" ராசா..! எழுந்துருயா..! ரொம்ப வெசனப்பட்டு தூங்கிட்டப் போல..! உனக்கு பையன் பொறந்திருக்கையா..! உன்ற அய்யாவே மறுபடியும் பொறந்திருக்காரு போல..!"

"அம்மா..!"

"அழுவாதையா..! போயி புள்ள மொகத்தைப் பாரு..! அப்புடியே, தாத்தா சாடை..!"

மெல்ல, மெல்ல இருள் பரவத் தொடங்கியது. அலைகளில் நனைந்த கால்களில், முத்தமிட்டு ஒட்டின, வெள்ளை மணற்துகள்கள். லாந்தர் விளக்கின் வெளிர் மஞ்சள் ஒளியில், வறுத்த வேர்க்கடலையின் வாசனை மெல்லக் காற்றில் படர்ந்தது.

"டாடி..டாடி.."

"பார்த்து... மெதுவா வாப்பா.."

"டாடி..டாடி.. இந்த எக்ஸாம்லயும் நாந்தான் ப்ர்ஸ்ட் ரேங்க்.."

"குட் பாய்..வா அம்மாகிட்ட போய் காட்டலாம்.."

"டாடி..டாடி.. எனக்கு வேர்க்கடலை வாங்கிக் குடுங்க டாடி.."

"இது வேணாம்பா... வீட்டுக்குப் போனப்புறம் அம்மாகிட்ட சொல்லி நெறைய செஞ்சுத் தரச் சொல்றேன், என்ன.."

"போங்க டாடி.. அருண் அப்பா எல்லாம் எப்ப, எது கேட்டாலும் வாங்கித் தருவாராம்.. ஒவ்வொரு எக்ஸாமுக்கும் நியூ ஜாமெட்ரி பாக்ஸ், பென் எல்லாம் கொண்டு வருவான். நான் லாஸ்ட் டூ இயர்ஸா அதே பாக்ஸ் தான் யூஸ் பண்றேன்.."

"அப்பா இந்த தீபாவளி போனஸ் வரும் போது வாங்கித் தருவேனாம். வீடு வந்திடுச்சு..அம்மாகிட்ட போய் மார்க் ஷீட்டைக் காட்டு..."

"ஏய்யா.. என்னய்யா.. மொகமே கள இல்லாம இருக்கு.."

"அம்மா.. பையன் பள்ளிக்கூட பீஸ் ரொம்ப ஆகுதும்மா..."

"ஏய்யா.. இவ்ளோ செலவு செஞ்சு அந்தப் பள்ளிக்கோடத்துல தான் படிக்க வெக்கணுமா..? உங்க அய்யா எல்லாம் எங்க போயி படிச்சாரு..? நிம்மதியா இருந்திட்டு போகலியா..? "

"காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்குமா.. இப்பெல்லாம் இங்கிலீஸ் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கணும்மா.."

"என்னவோ போப்பா.. செலவுக்கெல்லாம் என்னய்யா பண்ணப்போறே..?"

"மில்லுல கடன் தான் கேக்கணும்மா.."

லங்கரை விளக்கம், மேற்கில் இறந்த கதிரின் கடைசித்துளிகளை, ஒளித்து கடற்கரையெங்கும் மஞ்சள் ஒளியைப் பரப்பியது. துறைமுகத்தின் இரைச்சலை நோக்கி, தயங்கி வருகின்றன தூரத்துப் புள்ளிக் கப்பல்கள்.

"ன்னய்யா.. ஏதோ சொல்ல வர்ற போல இருக்கு.."

"அம்மா.. நேத்து ராத்திரி , நானும், அவளும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்மா.."

"என்னய்யா..?"

"பையன் நல்லாப் படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும்னா சென்னைக்குப் போய் நல்ல ஸ்கூல்ல சேக்கணும்னு, இவங்க ஸ்கூல் ப்ரின்சிபாலே சொன்னாரும்மா.. அத்னால நாம எல்லாரும் சென்னைக்கே போயிடலாம்மா.. எனக்கும் அங்க இன்னும் கொஞ்சம் அதிக சம்பளத்தோட வேலை கிடைக்கும்னு நெனைக்கிறேம்மா.."

" நீங்க எங்க வேணா போங்கய்யா... இந்தக் கிழவி இந்த ஊரை விட்டு நகராது.."

"அம்மா...."

"இல்லய்யா.. எனக்கும் வயசாயிடுச்சு... இனிமேல எதுக்குய்யா புது ஊரு எல்லாம்.. இங்கயே இருந்துக்கறேன்.. அப்பப்ப வந்து கெழவியப் பாத்துக்கய்யா.."

வேத நாயகம் எழுந்தார். கண்ணாடியைச் சரியாக அணிந்து கொண்டார். நிமிர்ந்து பார்த்தார். மெதுவாய்ப் படர்கின்ற இருளின் பின்புலத்தில் சச்சரவோடு பறக்கின்றன பறவைகள். 'பாவம் இருப்பிடத்திற்கும், வழ்வதற்கும் அல்லாடுகின்றன்' எண்ணியவாறு, தளர்வாய்ச் சாய்ந்திருந்த கைத்தடியை இறுக்கப் பற்றியபடி, மெல்ல நடக்கத் தொடங்கினார்.

"ப்பா.. அப்பாவ இந்த நிலைமையில விட்டுட்டு, நீ கண்டிப்பா சீமைக்குப் போய்த் தான் ஆகணுமா..?

"பாட்டி.. நீயும் அவர்கூட சேர்ந்துட்டு, இப்படி பேசாத.. பாரின் எல்லாம் போனா தான் நிறய சம்பாதிக்க முடியும்.. இங்கயே இருந்தா அவ்ளோ காசு கிடைக்குமா..?"

"ஏப்பா... அம்மாவும் மாரடைப்புல காலமாயிட்டா.. கெழவிக்கும் வயசாகிட்டே போகுது.. அப்பாவ இந்த நெலமையில நீயும் விட்டுட்டுப் போயிட்டயினா, எப்படிப்பா..?"

"பாரு பாட்டி... நீ என்னவோ சொல்லிக்கோ.. நான் அவளோட அமெரிக்கா போகத் தான் போறேன்.. அவருக்கு மாசாமாசம் பணம் அனுப்பிடறேன்.. வாங்கிக்கச் சொல்லு.. நான் அங்க போயிட்டு, முடிஞ்சா அவரையும் கூப்பிட்டுக்கிறேன்.."

வேத நாயகம் நிமிர்ந்து பார்த்தார். ஒரு இளைஞன் பைக்கில் வந்து கொண்டிருந்தான். கைகாட்டி நிறுத்தினார்.

"என்ன சார் வேணும்..?

"தம்பி.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா..?"

"எது வரைக்கும் சார் போகணும்..?"

"அமெரிக்கா..!!"

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

6 comments:

Anonymous said...

Good One! Wishes for the competition

பழூர் கார்த்தி said...

எளிமையாய் கால மாற்றங்களை காட்டி இருக்கிறீர்.. வாழ்த்துக்கள் !!

***

"காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்குமா.. இப்பெல்லாம் இங்கிலீஸ் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கணும்மா.." என்று மகனை பெரிய ஸ்கூலில் சேர்த்ததை தந்தை நியாயப் படுத்துவது, நிறைவு.

***

"நான் அவளோட அமெரிக்கா போகத் தான் போறேன்.. அவருக்கு மாசாமாசம் பணம் அனுப்பிடறேன்.." என பையன் சொல்லும் போது, நமக்கும் கோபம் வருவது, கதையின் வெற்றி.

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்

கார்த்திக் பிரபு said...

சிறிய ஆனால் ரசிக்கு படியான கதை வாழ்த்துக்கள்

முரட்டுக்காளை said...

படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. ஒரு வரியில சொல்லணும்னா ... இங்கே பாருங்க.

SRK said...

நல்லா இருக்கு வசந்தகுமார். படிப்பதற்கு சலிக்காதபடி எழுதி இருக்கிறீர்கள்.

இரா. வசந்த குமார். said...

அனைவர்க்கும் நன்றிகள்.