Saturday, May 12, 2007

இவனை இவளால்..!

ர் ஒளிக் கார்த்திகைத் திருநாள்.

வெட்டவெளிகளில் நிறமிழக்கும் மாலை நேரப் பொழுதுகளில், மயக்கும் ஈரத் தென்றல் உலாப் போகும் வேளையொன்றில் உனைக் கண்டேன். உன் விரல் பிடித்த சிறுமி பயந்து பார்த்த என்னை, நீ திரும்பிப் பார்க்கையில் தான் நீ சிலையல்ல என்பதை அறிந்தேன்.

கொலுசொலிகளின் ஒலி கேட்டது. நீ சிரித்திருக்க வேண்டும்.

என்னைக் காட்டி சிறுமியிடம் ஏதோ சொன்னாய். பூதம் என்றாயோ, பூச்சாண்டி என்றாயோ, திரும்பிப் பார்த்த சிறுமியின் கண்களில் பயம் இன்னும் மிச்சமிருந்தது.

இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை, தூவி, உன் விரல் நுனிகளிலிருந்து சொட்டுகையில், வெள்ளி உருகி ஊற்றியது என்று சொல்லத் தோன்றியது.
விளக்குகள் பொருத்திய தட்டைச் சுமந்து நடக்கையில், மஞ்சள் ஒளி பட்டுத் தெறித்த பொன் வளைகளில் மாலைக் கதிரின் மிச்சத் துளிகள் சிதறின.

அந்தச் சிவப்புத் தாவணியும், நீயணியும் போதெல்லாம் வெட்கப் பெருமிதமடையும் போலும்! இன்னும் சிவக்கின்றதே! உன் பூபோட்ட எல்லை வகுத்த ஆடை தரையில் உரசிச் சென்ற பாதைகளில் எல்லாம் சிறுசிறுதாய் பூவாசம் வாசம் செய்கிறது.

நடக்கையில் ஜதியோடு அசைந்து செல்லும், கருங்கூந்தல் வரப்போகும் இருட்டின் திரட்சியாகத் தோன்றியது.

ளியைச் சுரக்கும் விளக்குகள் அடர்ந்த மாடங்கள் கொண்ட வீடுகள் நிரம்பிய வீதிகள். மஞ்சள் பிள்ளையைச் சுமக்கும் மாக்கோலம் போட்ட வாசல்களில் தேங்கியிருக்கின்றது, முன்மாலையில் பெய்த மழை ஈரம். சிலுசிலுவென வீசுகின்ற குளிர்த்தென்றல் அசைக்கின்ற மரங்கள் சிலிர்க்கின்ற வேளையில், ஈரமான காற்றுக்குள் புகுகின்றன, முன்னம் அடித்த மழையின் மிச்சத் துளிகள்.

கருப்பா, நீலமா, கரு நீலமா என்று ஐயந்திரிபற அர்த்தம் கொள்ளவியலா உன் கண்கள் போல், முகில் நிறைந்த வானம் நிறம் கொள்கிறது. எட்டிப் பார்க்கின்ற குட்டி நிலாவின் மென் பிம்பங்கள் விழுந்த ஈரத் தெருவின் நடுவில் இருக்கின்றது, அழகரும், அம்மையும் வீற்றிருக்கின்ற திருக்கோயில்.
மாலை நேரப் பூஜைகளில், மணிக் கதவுகளின் உள்ளே, பிரபஞ்ச இருளைத் தின்னும் குமிழ் விளக்குகளின் ஒளியில் நின்று கொண்டிருக்கிறார் அழகர்.

வெண்ணெயும், திருச்சாந்தும்,செந்தூரமும், துளசிமாலையும், குங்குமமும் நிரம்பிய குழலழகர் மேனி முழுதும் தழுவிய தேவியின் உடையெங்கும் வர்ணக் கோலங்கள். நெற்றிச்சுட்டியும், கொண்டையணிகளும், பொன் தோடுகளும், முத்துமாலைகளும், தங்க வளையல்களும், வைரமூக்குத்தியும், லோலாக்கும், ஒட்டியாணமும், புஜநகையும், வெள்ளிக் கொலுசுகளும், ஒட்டிய மோதிரமும், மரகதமெட்டியும் அணிந்த அன்னையின் இடையை வளைக்கின்ற அழகரின் விரல்களில் எல்லாம் ஒட்டியிருக்கின்றது காதல்..!

நெய்ப்பொங்கலும், காரப் புளியோதரையும், அக்காரவடிசிலும், கட்டித்தயிரன்னமும், சித்ரன்னமும் நிறைந்த பிரசாதத் தட்டுகளில் எல்லாம் நிரம்பியுள்ளது அவனது பேரன்பு.

கற்பாறை விளக்குகளின் நுனியில் கரும் எண்ணெய்த் துளிகள் படிந்த திரிகளின் தலையெங்கும் திகுதிகுவென ஜொலிக்கும் தீபங்களின் ஒளியில் அன்னையின் முகம் பார்க்கிறான் ஆசையுடன் அழகன்! அப்பனின் கண்கள் பார்க்கிறாள் அன்புடன் அம்மை!

முட்டி, முட்டிப் பாலருந்தும் கன்றினைக் காணும் தாய்ப்பசுவின் மடி முழுதும் நிரம்புகின்றது தாயன்பு! துளசித் தோட்டத்தின் இலைகளில் எல்லம் தேன் தேடும் பூச்சிகளைத் தேடித் தேடி விளையாடுகின்றது தென்றற்காற்று!

கம்பிவலையால் மூடப்பட்ட கேணியின் மேல் குதித்த ஈரச் சருகொன்று வழுக்கிய இடைவெளியில், சுழன்று, சுழன்று ஓடிய இருள் பாதையெங்கும் மழை படிந்த ஈரப் பிசுபிசுப்பில் நிறைந்த பச்சை பாசிகளாலான, வழுக்குப் பாறைகள்.

டறி விடக் கூடாதென்று நீ இலேசாகத் தூக்கிப் பிடித்த, ஆடையால் தெரிந்த சிவந்த பாத நுனிகளால், பச்சைப் பாசிகள் சூழ்ந்த கோயில் படிக்கட்டுகளில் நீ ஏறுகையில், பச்சைக் குளத்தில் பூத்த செந்தாமரை என் நினைவுக்கு வந்தது.

கோபுரத்தின் கூம்புகள், ஒவ்வொரு வாசல்கள், கருந்தூண்கள், ஈரத் திட்டுகள், சன்னதிகள், கோலநடுக்கள், கூரைகளிலிருந்து தொங்கிய தூங்காமணி விளக்குகள்...எங்கும் நிறைந்திருக்கின்றது மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஒளிச் சிதறல்கள், ஈரமான வெளிக் காற்றை மென் சூட்டால் ஓட்டிவிடுகின்றன.

ஒவ்வொரு சன்னிதியாய்ச் சென்று நீ முணுமுணுக்கையில், உன் முன் நின்று முகம் விழுங்கும் என்னை, உன் பின் நின்று ஒளிந்து, வெருண்ட விழிகளால், எட்டிப் பார்க்கின்ற சிறுமியின் வேண்டுதல் என்னவாயிருக்கும்?

நீ தொட்டு வைக்கின்ற பூக்களை, மன்னிப்பு கேட்டுக் கொண்டு நான் எடுத்துக் கொள்வதை, கள்ளம் கொண்ட கண்களால் நீ இரசிப்பதை, உணரா சிறுமி, குறை சொல்லிக் கொண்டே வருகிறாள் உன்னிடம்.

கொட்டி நிரப்பிய உதிரி மல்லிகைகளாய் மீன்கள் நீச்சலிடுகின்ற இருள் வானம் வந்து விட்டது.

புஷ்கரணியில் தெரியும், நம் முகங்களைக் கண்டு புன்னகைக்கின்ற நாம், அளவளாவும் நீரின் அலைகள் நம் கரங்களிலிருந்து விலகி, ஒன்றோடொன்று மோதி, உடைந்து, மீண்டும் நம் திசைக்கே திரும்புகின்றன, நம் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டு.

மேலும் இரவு உருக் கொள்வதற்குமுன், நாம் திரும்பிச் செல்கிறோம்.

மற்றுமொரு நாளும், மாலையும் கழிந்தது, நாம் பேசாமல்.

'இவனை என்னவென்று அழைப்பாள்? பாதங்களை நனைத்து வழிந்து சென்று விடுகின்ற நீர்த்துளிகள் என்றா? பயணம் தோறும் தொட்டுப் போகும் மென்காற்று என்றா? வழியை அடைத்து நிற்கின்ற கரும் இருள் என்றா? வாழ்வை நிறைக்க வருகின்ற வசந்தம் என்றா?' கேட்கிறார் அழகர்.

'உள்ளம் பறித்துப் போகும் கள்ளன் என்றும், மெள்ள அணைத்துப் போகும் வாசம் என்றும், அள்ளிக் கொண்டு போகின்ற அன்பு என்றும், உயிரைக் கரைத்துப் போகும் காலம் என்றும் சொல்லலாம்' பதில்கிறாள் அன்னை.

2 comments:

சேதுக்கரசி said...

இதென்னங்க.. கவிதையாக எழுத முற்பட்டதா? (கவிதைப் போட்டிக்காக) வடிவம்...?

சேதுக்கரசி said...

http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html