Monday, July 09, 2007

அசத்திப்புட்ட புள்ள...!


ஆண் : நெல்லறுக்க வந்த போது
நெஞ்சறுத்து போன புள்ள!
பருத்தி பறிக்க வந்து
பறிச்சதென்ன என் உசுர!

பெண் : மதுர மல்லி வாங்கித் தந்து
மனசெடுத்துப் போனவரே!
மத்தியான நேரம் பார்த்து
மணம் பேச வந்தீரா?

ஆண் : மணம் பேச மனை செல்ல,
மாமனில்லை, மாமியில்லை!
மகராசி ஒம் முகம் பார்த்து,
மாலை மாத்த ஓடி வந்தேன்!

பெண் : ஆளப் பார், ஆசையப் பார்,
அழகான நெனப்பப் பார்!
அலையற மனசக் கொஞ்சம்
அடக்கியாளற வழியப் பார்!

ஆண் : அடியாத்தீ சொல்லப் போற
அறிவுரையாத் தள்ளப் போற!
சொல்லு கொஞ்சம் பாப்போம், உன்
சொல்லக் கொஞ்சம் கேட்போம்!

பெண் : உம்மளவு அறிவுமில்ல,
ஒலக்கைக் கொழுந்துமில்ல,
அழகா நான் சொல்றதெல்லம்,
அய்யனாருசாமி அருளே!

ஆலமரம் அரசமரம்
அடுத்திருக்கும் திண்ணையோரம்
ஆடுற ஆட்டமெல்லாம்
அறுத்தெறியச் சொல்றேன்!

கையில மல்லியப்பூ, கலர்கலரா சட்டை,
கழுத்துல புலிநகமும்,
கழத்தி விட்டு கழனியில
கால் வைக்கச் சொல்றேன்!

குந்திக் குந்தித் தின்னாக்கா
குன்றுபணம் கரைஞ்சோடும்!
குன்றிமணி சேத்தாலும்
குனிஞ்சுநிமிரச் சொல்றேன்!

சொந்தமா ஒரு முடிச நீ
செதுக்கி வெக்க வேணும்! ஒவ்வொரு
செங்கலிலும் உன் ரத்தம்
செழிச்சிருக்கச் சொல்றேன்!

அப்படியொரு குடிச
ஆசயாக் கட்டிவிட்டு
அத்த மகளக் கேளு,
ஆரு தடுப்பா, பாத்துக்கலாம்!

ஆண் : அழகழகா வார்த்த வச்சு
அன்பால பூசி
அத்தான் மனசுல ஏத்தி,
அசத்திப்புட்ட புள்ள!

எழுதியது : 19 - MARCH - 2004.
(On the way to Bangalore)

1 comment:

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com