Tuesday, July 10, 2007

மாலை நேர மயக்கம்..!


கீழ்வானின் எல்லைப்புறங்களில் பெருத்த கரும்பூதங்களாய் மேகங்கள் காட்சியளித்தன. தூரத்தில் பெருமழை பெய்து கொண்டிருப்பதை, தெளிவற்ற ஒரு புகைப்படம் போல் தெரிந்த, ஈரப் பொழிவு, தொலைவின் ஒற்றைக் குயிலின் ஓசையோடும், குளிர்ந்த காற்றின் வாசத்தோடும் தெரிகின்றது.

படிகளை எல்லாம் மீறி, கரைகளைத் தொட்டு ஓடுகின்ற காவிரியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். மந்தமான மதியப் பொழுதின் மயக்கமான பகல், இலேசான சூடு கலந்த, காற்றில் நதியை அசைத்துக் கொண்டிருந்தது.

பெயரறியா, உறவறியா பறவைக் கூட்டமொன்று அவ்வப்போது எழும்பி, எழும்பி பறந்து கொண்டிருந்தது.

அருகின் மயானத்தின் இறுக்கி மூடிய பச்சை நிறக் கம்பிக் கதவுகள், பயமுறுத்துகின்ற வாழ்வின் நிஜமுகத்தை மறைத்து, இறுக்கமாய் இருக்கின்றன.

கதவுக்குக் கட்டுப்படாத பிணப்புகையொன்று மேடையின் கூரையையும் தாண்டி மேலெழுந்து மறைகையில், வாழ்கின்ற வாழ்வைப் பற்றின வேதனையொன்று என் கண்களில் நிழலாடுகின்றது.

மாயை! மாயை! என்று உளறிச் சென்ற வார்த்தைகளின் வரிகளில், வரிசை கட்டி நிற்கின்ற வருத்தங்கள் நெஞ்சில் வந்து வந்து செல்கின்றன.

மழை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. உள்நோக்கி உற்றுப் பார்த்தால் உறுத்தும் உள்ளதெல்லாம் அசிங்கம்! ஓரளவுக்கு மேல் ஒதுங்கிக் கொள்! தத்துவங்களையெல்லாம் தருவது போல் பாசிபடர்ந்த பாறைகள், சிக்க வைக்கும் பச்சைத் தாவரங்கள்,இடமறியா சுழல்களை மூடியபடி நகர்ந்து கொண்டிருக்கின்றது நதி!

மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்து வருகின்றது! சில்வண்டுகளின் ரீங்காரம் அதிகமாகின்றது. சில்லென்ற துளிகள் சடசடவென்று பெரிதாகின்றன!

இருளின் மழையில், கடைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் தாரைகளின் வேகத்தில், சின்னச் சின்னக் குழிகளில், பூமியே பால்லாங்குழி மேடையாகின்றது.

எழுதியது : 2004-ல் ஏதோ ஒரு நாள். குறித்து வைத்துக் கொள்ளவில்லை.

2 comments:

Sowmya said...

ungal mugavurai arumai :) ungal pathivugalai pathidaga vendum endru kuritthu vaithullen. :) nandri

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com