Wednesday, July 11, 2007

அருவிப்பூ..!


மேல் வானில் திரண்டு வரும் கரு மேகங்களே! கீழ் வானில் கிளைத்தெழும் வெண் மின்னல்களே! பச்சை நூலாடை விரித்த காவிரிக் கரையோரங்களே! வெள்ளைப் பருத்தியாய் வானம் விரிக்கும் கொக்குக் கூட்டங்களே! அவளைக் கண்டதுண்டா, நீங்கள்?

விண்ணும், மண்ணும் கம்பிக் குச்சிகளால் கரம் கோர்த்துக் கொண்ட, ஒரு மழைநாளின் மாலையில் தான் பார்த்தேன்.

முன்பனிக்காலப் பின்னிரவில் ஒரு மெல்லிய மேலாடை போல், பெய்து கொண்டிருந்த வெண் பனிப்பரப்பின் வழியே, முழுப் பெளர்ணமியைப் பார்த்ததுண்டா? எனில் அவள் முகத்தை நீங்கள் பார்க்கும் அவசியமில்லை.

மலைத்தொடர்களின் அடிவாரச் சரிவுகளில், அடர்ந்து வளர்ந்திருக்கும் நெடுநெடு மூங்கில் மரங்கள், மேலைக் காற்று மேனி தீண்டுகையில், வளைவதைக் கண்டதுண்டா? எனில் அவள் புருவங்களை நீங்கள் பார்க்கத் தேவையில்லை..!

இருள் வானெங்கும் மிதந்தோடும் வெண்ணிலாவைக் கண்டிருப்பீர்கள்! வெண்பரப்பில் உருண்டு ஜதிபாடும் கருநிலவைக் கண்டதுண்டா? இன்றெனில் அவள் கண்களை நீங்கள் பார்த்ததில்லை போலும்!

இறக்கைகளே இருகைகளாகப் பறக்கும் சின்னஞ்சிறு குருவிகளின் கீச்கீச்சைக் கேட்டதுண்டா? அவள் பேசுவது கூட அப்படித் தான் இருக்கும்.

செவ்விள மாதுளை மொட்டுகளைப் போர்த்தியிருக்கும் சிவந்த முரட்டுத் தோலைச் சுவைத்ததுண்டா? நல்லவேளை, அந்த இதழ்கள், அது போல் சிவந்திருப்பினும், அவை போல் கடினமில்லை.

மென் மஸ்லின் காஷ்மீர் துணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, மிருதுவாக்கி, முத்தமிட்டதுண்டா நீங்கள்? மிட்டேன். அவள் அவற்றை உதடுகள் என்றும் கூறுவாள்!

வெண்மணி முத்துக்கள் கோர்த்த மாலைகள் இரண்டு ஒளி வெள்ளம் தெறிப்பதை இரசித்ததுண்டா? அவள் சிரிக்கையில் த்திருக்கிறேன்.

பச்சைப் பெரியவர்கள் பார்த்திருக்க, குட்டிச் செடிச் சிறுவர்கள் தலையசைக்க, மென் தென்றல் தடவிச்ச் எல்லும் பூங்காக்களில் சிறுவர்கள் சறுக்கு விளையாடுவது போல், அவள் பின் கழுத்தின் சரிவில் வியர்வைத்துளிகள் சறுக்கி விளையாடும் போதும், நான் அங்கு சிறுவனாகிறேன்.

வெண் பஞ்சுக் குன்றுகள் இரண்டை அருகருகே பார்த்ததுண்டா? வேண்டாம், நீங்கள் பார்க்கவே வேண்டாம்.

வள் ஓர் அருவிப்பூ! குருவிக் குரல்! சருகுக் கும்பலின் நடுவே பூத்திருக்கும் சாமந்திப் பூச்சரம்! உருகி உருகி ஓடுகின்ற வெண்பனித் துளி! என்னை உருக்கி உருக்கிப் பார்க்கின்ற எரிமலைக் கரம்!

மென் சோகங்களைத் தூண்டுகின்ற குழலோசை! என் யோகத்தைத் தீண்டுகின்ற நிழல் பாஷை!

பேசிப் பேசிக் கொல்கின்ற சொல்லின் பெரு ஆழி! என்னைப் பேசாமல் வெல்லுகின்ற மெளனப் பேரூழி...!





எழுதியது : 2004 - ல் ஏதோ ஒரு நாள்.

No comments: