Tuesday, July 24, 2007

தீபாவளி வருதேன்னா..!


"ன்னா.."

"என்னடி?"

"இல்ல.. தீபாவளிக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு.."

"அதுக்கென்ன இப்போ..?"

"போன வருஷமே நம்ம பொண்ணுக்கு 20 பவுன் தங்க நெக்லஸ் போடறதா சொன்னேள். இப்ப, அடுத்த வருஷமே வந்திடுத்து. மாப்பிள்ளை தங்கமான மனுஷன். இன்னும் அதப் பத்தி எதுவும் கேக்கல.."

"உன் பொண்ணு தான் கேட்டு நச்சரிக்கறாளா..?"

"அப்படி இல்லேன்னா... அவ சின்னப் பொண்ணு. இப்போ தான் கல்யாணம் ஆயிருக்கு. புருஷனோட நாலு எடத்துக்கு நக, நட்டோட போய் வந்தாத் தான நமக்கும் பெரும. அவா ஆத்துக்காரவாளுக்கும் சந்தோஷமா இருக்கும்னு நெனக்கறா.. தப்பில்லையேன்னா..?"

"உம் பொண்ணுக்குத் தோணலினாலும், நீயே எடுத்துக் கொடுத்துரு. ஏண்டி.. எனக்கு மட்டும் நம்ம பொண்ணு அப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசயில்லயா? போன வருஷம் தலதீபாவளிக்கு எடுத்த போனஸ் பண்மே இன்னும் முழுசா கட்டி முடிக்கல. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திடுத்து. பாப்போம். வேற எங்கயாவது கடன் வாங்க முடியறதானு..?"

"அப்படி விட்டேத்தியா சொன்னா, ஒண்ணும் நடக்காதுன்னா.."

"சரி..சரி.. ஆரம்பிச்சுடாத.. நான் ஆபிஸுக்கு கிளம்பறேன்.."

"ம்மா.. அப்பாகிட்ட பேசினியா..? என்ன சொன்னார்?"

"என்னடி இந்த மனுஷன் இப்படி இருக்காரு..! நானும் இன்னிக்கு சொல்லிப் பாத்துட்டேன். பொண்ணுக்கு நகை போடணுங்க. வருஷம் ஆகிப்போச்சுன்னு! மனுஷன் காதுலயே போட்டுக்கலயே! பாப்போம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு..!"

"அம்மா! சீக்கிரம் செய்யச் சொல்லும்மா! இவர் தங்கைக்கு மறு தீபாவளிக்கு 25 பவுன் நகை போட்டாங்களாம். மாமி சொல்லிக் காட்டிண்டே இருக்கா. உங்க வீட்டுல எவ்ளோடி போடுவானு கேட்டுண்டே இருக்கா.."

"நானும் சொல்லிட்டு தாண்டி இருக்கேன். இப்போ உன் மாமி பக்கத்துல இல்லியா..?"

"இல்லம்மா. கோயிலுக்குப் போயிருக்கா. அவங்க வர்றதுக்குள்ள வீட்டு வேலையெல்லாம் முடிக்கணும்னு இருக்கேன்..."

"சரி வெச்சிடுடி. போன் பில் எக்கச்சக்கமாகிடப் போகுது. அப்புறம் உங்கப்பா அதுக்கும் என்ன, ஏதுனு கேப்பாரு.."

"சார்.. உங்களைப் பாக்க கிருஷ்ணன்னு ஒருத்தர் வந்திருக்கார். உங்க மாப்பிள்ளையாமே... ரிஷப்ஷன்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார். சீக்கிரம் போங்க.."

"மாப்பிள்ள.. வாங்க.. வாங்க.. என்ன ஆஃபிஸ் வரைக்கும் வந்திருக்கேள்? வீட்டுக்கே பொண்ணையும் அழைச்சிண்டு வந்திருக்கலாமே.."

"இல்ல மாமா.. உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் இங்க வந்தேன். கேண்டீன் வரைக்கும் போய்ப் பேசிட்டு வரலாமா..?"

"ஒரு நிமிஷம்.. உள்ள சொல்லிண்டு வந்திடறேன்.."

"மாமா.. இந்த வருஷம் தீபாவளியும் வந்திடுத்து.. இன்னும் நீங்க அந்த நகையைப் பத்தி ஒண்ணும் சொல்லலயே..?"

"கொஞ்சம் பணமுடை மாப்ள.. உங்களுக்குச் சொல்லப்படாது. இருந்தாலும் சொல்றேன். தலைதீபாவளிக்குப் பண்ணின செலவுக்கே இன்னும் வட்டி கட்டிண்டு இருக்கேன். இருந்தாலும் எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு, இந்த தீபாவளிக்குள்ள வாஙிக் குடுத்திடறேன்.."

"நீங்க அது மாதிரி சிரமப்படுவேள்னு தெரியும் மாமா.. அந்த மாதிரி எல்லாம் எதுவும் நீங்க பண்ண வேணாம்னு தான் சொல்ல வந்தேன்.."

"என்ன சொல்றேள் நீங்க..?"

"உண்மை தான் மாமா. போன வருஷம் என் தங்கைக்கு 25 பவுன் நகை போட்டேன். சரி. நான் நல்லா சம்பாதிக்கிறேன். இன்னும் வயசும் இருக்கு. இன்னும் நிறைய சம்பாதிப்பேன். நிறைய நகை போட என்னால முடியுது. நீங்க சம்பாதிச்சதெல்லாம் பொண்ணுக்குக் குடுத்திட்டேள்னா, கடைசி காலத்துல, உங்களுக்குனு என்ன இருக்கும்? அதனால நீங்க நகையைப் பொறுமையா குடுத்தாப் போறும்னு சொல்லத் தான் நான் வந்தேன்.கடன், கிடன் எல்லாம் பட்டு குடுக்க வேணாம்.."

"மாப்ள.."

"அது மட்டுமில்ல மாமா. நேத்து டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணியதுல, உங்க பொண்ணு கன்சீவ் ஆகியிருக்கிற விஷயம் தெரிஞ்சிது. அப்பதான் ஒரு அப்பா ஸ்தானத்தோட பெருமை, பொறுப்பு புரிஞ்சுது. இப்போ நம்ம வீட்டுக்கு ஒரு மஹாலக்ஷ்மி வர்றானு வெச்சுக்கோங்க. அப்ப நான் என்ன பண்ணனுங்கிறதை, உங்களைப் பாத்துத் தான் கத்துக்கணும் மாமா. பொண்ணப் பெத்தா என்ன பண்ணனும்னு உங்ககிட்ட தான் கேட்டுத் தெரிஞ்சிக்கணும் நான். உங்களுக்குக் கஷ்டம் குடுக்க நான் நெனப்பனா? பிறகு எனக்கும் அந்த கஷ்டம் வராதா..? அதனால நீங்க பொறுமையா நகை பண்ணிக் குடுத்தாப் போறும்.."

"மாப்ள.. ரொம்ப சந்தோஷம்.. கங்கிராட்ஸ். பேரர், ரெண்டு ஸ்வீட் அல்வா எடுத்திண்டு வாப்பா.."

3 comments:

Anonymous said...

///அதனால நீங்க பொறுமையா நகை பண்ணிக் குடுத்தாப் போறும்.."///

apavum vendaamnu solla maatar pOla iruku...:))

andha kutti ponnu pic-la rompa cutee..:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...

/*
apavum vendaamnu solla maatar pOla iruku...:))
*/

மாப்ள இப்பதானே அப்பாவாகி இருக்கார்... இன்னும் கொஞ்ச நாள் ஆகும், அனுபவத்தில் ஒரு அப்பாவோட கஷ்டங்களை முழுதாகப் புரிந்து கொள்ளுவதற்கு....

/*
andha kutti ponnu pic-la rompa cutee..:)
*/

ரொம்ப நன்றிங்க...

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தப் படைப்பும் வேறு கட்டுரையும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com