
முன்னமொரு நிலாக் காலத்தில் படித்த சிறுவர்மலர் கதை நினைவுக்கு வந்தது. நம்ம கதைப் பைத்தியம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. (எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!)
மூன்று பேர் ஓர் ஊரிலிருந்து மற்றுமொரு ஊருக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது வழியில் கனமழை பிடித்துக் கொள்ளும். காட்டோரம் சென்று கொண்டிருக்கும் அவர்கள் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்குவார்கள்.
பெய்த பெருமழையால், பெருமரங்கள் எல்லாம் சாய்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இருக்கும் மண்டபமும் மெதுவாக ஆட்டம் காண ஆரம்பிக்கும்.
முதலில் ஒருவன் வெளியேறுவான். மண்டபம் இலேசாக ஆட்டம் காணும். அடுத்து இரண்டாமவன் வெளியே ஓடுவான். இப்போது மண்டபம் இன்னும் கொஞ்சம் ஆட்டம் அதிகரிக்கும்.
கடைசியாக மூன்றாமவன் வெளியேறியது தான் தாமதம். மண்டபம் பொலபொலவென இடிந்து விழும்.
முதலிருவர் கடைசியாக வந்தவனைப் பார்த்துக் கூறுவர். "அடப்பாவி..! உன்னால் அல்லவோ இந்த துரதிர்ஷ்டம் வந்தது. நாங்கள் வெளியேற, வெளியேற மண்டபம் இடிந்து விழ ஆரம்பித்தது. நீ வெளி வந்தவுடன் மொத்தமாக இடிந்து விழுந்து விட்டது.."
கடைசியாக வந்தவன் சொல்லுவான். "தவறு. நான் கடைசி வரை இருந்ததால் தான் மண்டபம் முதலிலேயே இடியாமல் இருந்தது. ஒருவேளை நான் முதலிலேயே வெளியேறி இருந்தால், அடுத்த கணமே இடிந்திருக்கும். நீங்கள் மாட்டிக் கொண்டிருப்பீர்கள்.." என்றான்.
இந்த மூவரில் யார் அதிர்ஷ்டசாலி என்ற சந்தேகத்துடன் சில நாட்கள் கழிந்தன.
இந்தக் கதை எதற்கு இப்போது என்றால், பணியில் ஒரு பிரச்னை. Debug செய்ய வேண்டும். எந்த காரணி இதற்குக் காரணம் என்று Divide and Conquer வழிமுறையில் பிரித்து ஆராய்ந்து கொண்டிருந்த போது, சடாரென இக்கதை நினைவுக்கு வந்தது.
சிறு வயதில் படித்த சிறுவர்மலர் கதை நினைவுக்கு வந்த அளவுக்கு, 'நாலு வருஷம் உக்காந்து படித்த' இஞ்சினியர் படிப்பு ஞபகத்திற்கு வரவில்லையே என்ற சுய பரிதாபமும் வந்து தொலைத்தது.
4 comments:
இஞ்சினியர் படிப்பையும் சிறுவர் மலர் பாணியில் தந்திருக்கலாமோ?
வசந்த்
அந்தக் கதை சின்ன வயதில் படித்தது எப்படி நினைவு இருக்கிறது என்றால் சிறிய வயதில் மனம் கள்ளம் கபடம் அற்று பசுமரத்தாணி போல் இருக்கும் . மேலும்r உனக்கு கதை என்றால் உயிர். எந்த வேலையுமே விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் செய்யும் பொழுது மனதில் நன்கு படிந்து விடும். ஆனால் நாம் பிற்காலத்தில் வளர்ந்து விடும் பொழுது உலகத்தில் உள்ள நன்மை தீமை சூது வாது கள்ளம் கபடம் விருப்பு வெறுப்பு எல்லாம் மனதில் இடம் பிடித்து விடுவதால் மனம் ஒன்றி படிக்க முடிவதில்லை. அதுவே ஆர்வத்துடன் collegel படித்த பாடங்கள் மறக்காது
ம்ம்.. நினைத்துப் பார்க்கவே நல்லாத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது சார்...
ஐயா அனானி.. மிக்க நன்றிகள்...
Post a Comment