Friday, January 18, 2008

ரஜினியும் நாசரின் முகமும்...!

இது ஒரு லேட்டான பதிவு. கொஞ்சம் லேட்டான.! 6 வருடங்கள்.

'லகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான ...' என்று முழங்க சன் டி.வி.யில் போடப்படும் ஓடாத படங்களைப் பார்த்திருப்பீர்கள். எப்போதாவது இந்த மாதிரி படங்களில் எது மிகவும் குறைந்த காலத்திலேயே சன் டி.வி.யில் ரிலீசான படமாக இருக்கும் என்று யோசித்ததுண்டா? அப்படியொரு ஐயம் வந்தால், நீங்கள் கவலையே பட வேண்டாம். நான் இப்போதே அதற்கான விடையைக் கூறி விடுகிறேன். கோடீஸ்வரன் நிகழ்ச்சிகளிலோ, 'ஆர் மனசில் ஆரு' நிகழ்வுகளிலோ தலையை மேலும் கீழுமோ, சைடுவாக்கிலோ ஆட்டுவதற்கு முன் ஞாபகப்படுத்திக் கொள்ளவோ தேவைப்படலாம்.

அது நாசர் அவர்களின் 'முகம்' என்ற படம்.



என்ன, பேரைக் கேள்விப்பட்டது போலவே இல்லையா? இது போதுமே, நான் சொல்லும் தகவலின் நம்பகத்தன்மைக்கு..! என்னங்க இது, YouTube-ல் தேடினாலும் ஒரு Clip கூட கிடைக்கவில்லை..!

கதை இது தான்.

ஓர் அவலட்சணமான முகம் கொண்டவர் நாசர். அவரது முகத்தைப் பார்த்தாலே மக்கள் அடிக்கக் கூடிய அளவிற்கு அருவெறுப்பாக இருக்கும். ஏதோவொரு ஆர்ட் இயக்குநர் கண்களில் பட்டு விடுவார். விடுவாரா அவர்? அவரது படத்தில் நடிக்க வைத்து விடுவார். ரசிகர்கள் திரையைக் கிழித்தே விடுவார்கள்.

நாசர் பின் ஒரு பெட்டியைக் குடையும் போது ஒரு முகமூடி முகத்தில் விழுந்து மெழுகுவர்த்தி சூட்டில் உருகி அவர் முகத்தோடு ஒட்டிக் கொள்ளும். அவர் அதிரூப சுந்தரனாகி விடுவார். திரைப்படங்களில் நடித்து பெரிய ஹீரோவாகி, ரோஜா என்ற பேரழகியையும் மணந்து கொள்வார்.

ரசிகர்கள் அவரது முகத்தைத் திரையில் பார்த்தாலே உணர்ச்சி பெருகி 'தலைவா.. தலைவா' என்று பெருங்குரலெடுத்துக் கூவுவார்கள்.

அவரோ தனது உண்மையான முகத்தை அவ்வப்போது தனியறையில் பார்த்து மகிழ்வார். ஒருமுறை அவர் தன் உண்மையான முகத்தோடு மனைவி முன் நின்று உண்மையைக் கூற முயல, அவரே நம்பாமல் வேறு யாரோ கிறுக்கன் என்று பயந்து அடித்துத் துரத்தி விடுவார்.

அவரும் ரசிகர்கள் கூட்டத்தில் வந்து 'நான் தான் அவன்' என்று கூறிப் பார்ப்பார். அவர்களும் ஏதோ பைத்தியக்காரன் போலும் என்று பயந்து அவரைத் துரத்தி விடுவார்கள்.

பிறகு அவர் ரசிகர்களுக்கு தனது பொய் முகம் தான் சந்தோஷம் அளிக்கிறது என்பது புரிந்து, அந்தக் கோலத்திலேயே மீண்டும் மாஸ்க் அணிந்து 'ஹேய் ஹேய்' என்று பாடுவார். ரசிகர்களும் அவரை அப்படியே அள்ளிக் கொள்ளுவார்கள்.

இப்படி படம் முடியும்.

உண்மையில் பார்க்கப் போனால், நமது அடையாளம் என்று எது இருக்க முடியும்? முகம் தானே..! கழுத்துக்கு கீழ் எல்லோர்க்கும் ஒன்று தானே! நமது முகம் தானே நாம் யார் என்று காட்டுகிறது.

சரி, இதில் ரஜினி எங்கு வந்தார்?



தனது ஆசைக்காக 'பாபா' என்றொரு படம் எடுத்தார். ரசிகர்கள் துரத்கி விட்டார்கள். பிறகு ரசிகர்கள் விரும்புவது தான் தனக்கும் என்று தன்னை மாற்றிக் கொண்டு, சந்திரமுகி, சிவாஜி கொடுத்தார். இளமையாக, தனது பெண் போன்ற ஸ்ரேயாவுடன் டூயட் பாடிக் கொண்டு, காலைதூக்கி நின்று ஃபைட் கொடுத்து, கணிணிக் கலையில் நிறம் மாற்றிக் கொண்டு....எத்தனை மாற்றங்கள் திரையில் காட்டும் முகத்திற்காக..!

சந்திரமுகி வந்த சில நாட்களிலேயே இமயப் பயணம். விகடனில் அட்டையில் அந்த சொட்டைத் தலை, வெள்ளைத் தாடி, அக்குளில் கிழிந்த கதர்ச் சட்டை, ஜோல்னாப் பை...

எது உண்மை...?

இந்தக் கோலத்தில் அவர் நடித்தால் படம் ஓடுமா..? ஓடாது என்று காட்டி விட்டது 'பாபா'..

இப்போது அடுத்த ஏமாற்று வேலை. 'ரோபோ' என்ற பெயரில்.! தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, மாற்றிக் கொண்டு..!

என்னமோ போங்க.!

பி.கு.: ரோபோ -க்கு தமிழ் பெயர் யோசிக்கிறார்களாம். 'ரோட்டோரம் போய்க்கினேயிரு' என்று வைத்து, ரோ - வையும் போ - வையும் ஹைலைட் பண்ணினால் போதுமே..! ஆமா, இந்த வார்த்தை தமிழ் வார்த்தை தானே!. இல்லையென்றால் அவ்ளோ தான், வூடு கட்டி அடிப்போம், அக்காங்..!இன்னா நெனச்சிகினுகிறீங்க...! கீசிப்புடுவோம்..!

எனது 'சென்னைச் செந்தமிழ்' பதிவுகள் இங்கே..!

இப்ப இன்னான்ற..?

கூவக்கரையாண்ட...!

இன்னா சார்?

(இந்த பந்தாவுக்காகத் தான் இந்தப் பதிவா..?)

2 comments:

Anonymous said...

Very excellent vimarshanam

இரா. வசந்த குமார். said...

அருமை அனானி... மிக்க நன்றிகள். அடிக்கடி வாங்க...