Thursday, April 17, 2008

பாதச் சுவடுகள் போகும்...



டலளவு வருமெனினும் கடுகளவும் கவலைப்பட்டதில்லை அக்கணத்தை நினைத்து! மேகம் யாவினும் நனைத்து நனைத்து பெய்ய பெருந்துளிகள் உள்ளன எனினும் நிழல் படிகின்ற கலங்கிய குளம் தானே அருந்த நீர் தருகின்றது?

தொலைவில் ஒளிகின்ற சிறுகையின் கடைசி விரல், மறைந்து செல்கையில் தருகின்ற கனத்தை தாங்கிக் கொள்ளும் பாதையில் தான் எத்தனை எத்தனை தடங்கள்? ஈரம் கொண்டு குழைந்த சகதிகளால் உருக் கொண்ட இதன் மேனியைச் சற்றே சுவைக்க கண்ணீரின் வாசம் அடிக்கின்ற உண்மை என்ன?

சலசலவென இலைகளின் மேல் படிந்து என் நடையின் முழுதும் கூட வருகின்ற வெயிலின் கரங்கள் என்னோடு விளையாடி, வெம்மையை உடலிலிருந்து மனதிற்கு உடலுக்கு நகர்த்தும் முயற்சியில் இறங்க, நில்லாது கனக்கின்ற மனதின் அடைப்பையும் தகர்த்தெறிந்து விழி வழி நனைக்கின்ற கண்ணீர் குளிர்மையை மனதிலிருந்து உடலுக்கு நகர்த்த முயல.... எந்நிலையில் கட்டுண்டேன் என்ற குழப்ப நிலையில் பயணம் தடுமாறி நிற்கின்றது.

குளிர்ப் போதுகள் நிழலாடும் கண்களின் படலங்களை அழுத்தமாகத் துடைத்து, தெளிவைக் கொடுக்க கூரிய நகக் கிரீடங்கள் தரித்த விரல்கள் வரவேயில்லை. பொல்லாத கணம் என்று நினைக்கத் தோன்றுகையில், இதுவும் நிலையல்ல என்ற நினைவைத் தேடி வந்து கொடுத்துச் செல்கின்றன, சென்ற காலங்களின் நிறைவுறா வட்டங்கள்.

மெல்ல மெல்ல நிலா உதிக்கையில், உறங்கிப் போக நான் என்ன கல்லெறிந்து விளையாடிக் களிக்கும் குளச் சுழலா என்று கேட்க, இல்லை பகலின் நேரங்களில் பொறிந்த வெப்பம் தகிக்கும் பொழுதுகளைக் கடந்து செல்ல இராப்போதில் அமைதியாக உறங்கச் செல் என்றேன் மனதிற்கு....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் நன்றி :: http://www.oceandharma.org/images/Goodbye.jpg.

No comments: