Friday, April 18, 2008

மனம் வெட்டவெளியிலே அலைகிறதே...


காற்றே துளியும் அற்ற இருள் பிரபஞ்சம். இருள். இருள். எங்கும் இருள். அருகில், மிக அருகிலேயே கடந்து செல்லும் விண்மீன்கள் வெம்மையால் தடவி விட்டு நகர்கின்றன. குழிக் குழியாய்த் தரைகளில் சாம்பல் நிற பூஞ்சைகளாய்ப் பூத்திருக்கின்றது மெளனம் நிலவில்..!

பொறிப் பொறியாய் மிதந்து கொண்டிருக்கின்றன காற்றில்லாத வெற்று வெளியில் ஒளித் துணுக்குகள். யாருமற்ற தனிமைப் பிராந்தியத்தில், கைகளைத் துழாவியபடி நடக்கிறேன். மென்மணல் மேல் புதைந்து புதைந்து மிதக்க, வெண்ணொளியில் தகதகவென பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது நிலா.

எங்கோ தொலைவில் நீலப் புள்ளியாய் மிதந்து கொண்டிருக்கின்றது பூமிப் பந்து. குண்டூசியின் தலைப் புள்ளிகளாய் கோடிக்கணக்கில் வானத் துணியில் குத்தி பிரகாசிக்கின்றன மீன்கள். சிகப்பாய், மஞ்சளாய், பிரம்மாண்டமாய், புள்ளிகளாய் சுற்றிச் சுற்றி வருகின்றன கோள்கள்.

குளிர் என்ன, கொடும் வெப்பம் என்ன தீண்டாமல் இருக்கின்ற நிலையில் நகர்ந்து கொள்ள தகிக்கின்றது நிலவு. பிரம்மாண்டமான தனிமை சூழ்ந்து நிற்க பரபரவென முன்னால் நின்று கொளுத்துகின்றது மஞ்சள் நிற மிகப் பெரும் அடுப்பாய் சூரியன். தகதகவென அலை அலையாய் மின்னிக் கொண்டே நெருப்பு ஜூவாலைகளை வீசி எறிந்து கொண்டே, எரிந்து கொண்டு இருக்கின்றது.

மெல்ல மண்டி இடுகின்றேன்.

முதுகை எரித்து, கழுத்தின் பரப்புகளில் பெருகி ஓடுகின்றது வியர்வை வெள்ளம். நசநசவென உடலெங்கும் பற்றி எரிய, வெம்மைக் கதிர்கள் உள்ளே ஊடுறுவ பஞ்ச பூதங்களாய் சிரிக்கின்றேன். காற்றாய், அனலாய், புனலாய், பிரபஞ்சமாய், கசங்கி விழ தாங்கிக் கொண்டு சாம்பல் புதர்களில் என்னைச் சிறையிட்டு விட்டு கை தொழுது நிற்கின்றது நிலா.

No comments: