வெ.நா. சிவகுமார், சென்னை.
கே: இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
ப: கண்டிப்பாக. ஏனென்றால் அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
நன்றி : குமுதம் . 23.04.2008. பக்கம் :: 28.
இணையம் என்றாலே அதில் எழுதுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்பது இல்லை. யூட்யூப் போன்ற ஒளி ஊடகப் பரிமாற்ற தளங்களும், கூகுள் மேப்ஸ் போன்ற வரைபடச் சேவை வழங்கும் தளங்களும் இன்னும் பல நாம் அறியாத வகையில் சேவை அளிக்கும் தளங்களும் உள்ளன. இந்திய, தமிழக, ஊரக, உள்ளாட்சி அரசாங்க தளங்களும் தமது பணிகள் பற்றி அவ்வப்போது தளம் வழி கூறி வருகின்றன.
இந்த அரசு வலைப்பதிவர்களைப் பற்றி தான் கூறினார் என்றால், நானும் அதில் ஓர் ஆள் என்பதால் அதைப் பற்றி எனது...
இந்த அரசு என்பவர் யார்? ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் இருந்தவரை அவர் தாம் கேள்வி பதில் பகுதியை நடத்தி வந்ததாக அறியப்பட்டது. இப்போது யார் எழுதுகிறார்கள்? விகடனில் 'ஹாய் மதன்' என்று பகுதி பெயர் இருப்பதால், பதில் கூறுவது மதன் தான் என்பதற்கு ஓர் எழுத்துபூர்வமான ஆதாரம் இருக்கின்றது. ஆனால் இந்த அரசு என்பது யார்?
இவருக்கும் இணையத் தளங்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஒளிந்து நின்று தங்கள் இஷ்டம் போல் சமூக/ தன் நன்மைக்கு ஒவ்வாத எழுத்துக்களை எழுதும் மிகச் சிலருக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
இது போன்ற பதில்களைப் படிக்கும் ஒரு சாதாரண வாசகன் என்ன செய்ய வாய்ப்பு அதிகம்? 'இணையப் பக்கம் சென்றால் அது ஒரு தீய செயல். குமுதமே சொல்லி விட்டதே!' என்று ஒதுங்குவார். தந்திரம்.
ஆனால் இந்த ஊடகங்களைப் போன்று பணத்திற்காக பக்கங்களை நிரப்பும் அவசர கர்ப்பிணிகள் அல்ல இங்கு இருக்கும் இணையப் பதிவாளர்கள். தமது எண்ணத்திற்கு ஏற்ப, தமக்குப் பிடித்ததை எழுதி வெளியிடுகின்றனர்.
அணையில் மிக்க காலமாக நீர் தேங்கி இருக்கும். பின் ஒரு நாள் அணை திறக்கப்படும் போது, முதல் இரண்டு நாட்களுக்கு யாரும் குளிக்கச் செல்ல மாட்டார்கள். அப்போது, அவ்வளவு நாள் வெளியிட முடியாது தேங்கி இருந்த கசடுகள் நீரோடு சேர்ந்து வரும். இரண்டு நாட்கள் கழித்து தெளிந்த நீர் பொங்கிப் பிரவாகிக்கும்.
அதன்ன, தமிழ் இணையம் துவங்கிய சில காலத்திற்கு சில அழுக்குகள் வரலாம். ஆனால் அத்தோடு ஆற்றின் பெரும் பாகம் நீர் தான் பாயும் என்பதையும் மறக்கலாகாது. காலப் போக்கில் தெள்ளிய நீர் மட்டுமே பாயும்.
இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்பது ஒரு கேள்வி. தேவை இல்லை தான்.
ஆனால் இணையத் தமிழ் பற்றியும், அதில் தானும் பங்கேற்க ஆர்வமுடன் இருக்கும் புதியவர்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி வலைப்பதிவு பக்கம் வராமல் ஓட விட்டு, பதிவர்கள் எண்ணிக்கையை குறைத்து வைத்தே இருக்க வேண்டும் என்ற தீய எண்ணம் இது போன்ற செயல்களில் தெரிவதால் இவற்றை எதிர்த்து குரல் தர வேண்டியதாக இருக்கின்றது.
ஒரு புது தொழில் நுட்பம் வருகையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய நுட்பம் பயப்படுவதும், முதலில் அதனை எதிர்க்க முயல்வதும், முடியாமல் போகையில் அதனை ஒட்டி தம்மை மாற்ற முயல்வதும், அதிலேயே சமாதானப்படுத்திக் கொண்டு ஜீவிப்பதும் நடைமுறை.
விகடன் இதை சரியாகப் புரிந்து, வலைப்பதிவு மறுக்க முடியாத மறைக்க இயலாத அடுத்த ஊடகம் என்று புரிந்து கொண்டுள்ளதால், தாமும் அவற்றை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தமது பிம்பத்தை இன்னும் ஆழப் பதித்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளது. அச்சு ஊடகத்தை தாண்டி அடுத்ததாக சினிமா என்ற மாய உலகம் வந்த போது எதிர்க்கப் பார்த்தும் பின் முடியாமல், தாமும் அதனை ஒட்டி வாழ தொப்புள்களாலும் கொங்கைகளாலும் தம் பக்கங்களை நிரப்பினார்கள்.
சினிமாவிற்கு அடுத்து, தொலைக்காட்சி வந்த போது, அதிலும் தமது தொடர்களையும், 'சக்தி கொடு'வை காட்டுவதும் தமது ஆதார பத்திரிக்கை ஜீவனத்திற்காகத் தான் என்று கூறலாம்.
இணையம் என்ற அடுத்த ஊடகம் வந்த பின், தங்களது தளம் அமைப்பும் பதிவுகள் பற்றி தவறான/சரியான செய்திகளை வெளியிடுவதும் தாங்களும் இந்த புது நுட்பத்தை ஆதரிக்கிறோம் என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்தி, தமது பத்திரிக்கைக்கு உறுதி சேர்ப்பிக்கும் உத்தி என்று நம்புகிறேன்.
குமுதம் இந்த விஷயத்தில் கொஞ்சம் லேட் தான். எனவே தான் ஜூ.வி. வந்து பல ஆண்டுகள் கழித்து தான் ரிப்போர்ட்டர் வந்தது. 'ஜெமினி பிக்சர்ஸும்', 'கோலங்கள்' வந்து பல ஆண்டுகள் கழித்து தான் 'ஆஹா எஃப்.எம்.' வந்தது.
எனவே இந்த விஷயத்திலும் விகடன் தற்போது கையாண்டு வரும் நிலைக்கு குமுதம் வந்து சேர இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதுவரை இது போன்ற -ve விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.
அது வரை பாலச்சந்தருக்கும், குஷ்பூக்கும் ஏப்ரல் ஒன்று கல்யாணம் செய்து வைத்த குமுதத்திடம் இருந்து வேறு எந்த வித உயர்ந்த விமர்சனத்தையும் எதிர்ப்பார்க்கலாகாது.
இவர்களது கூட்டுக் கை குலுக்கலைப் பற்றி முன்னமே கூறிய பதிவு ::
இரு நிலைப்பாடுகள்.
அடுத்தது,
இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்து விட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக் கொண்டார்கள்.
நன்றி : குமுதம் . 23.04.2008. பக்கம் :: 107.
இதில் சில கேள்விகள் எனக்கு ::
* 'இதற்காகவே காத்திருந்தது' - எவ்வளவு வக்கிரமான வார்த்தை இது! எனக்குத் தெரிந்து சுஜாதாவிற்காக இரங்கிய, அஞ்சலி செலுத்திய (இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ) எவரும் சுஜாதா இறக்க வேண்டும் என்று காத்திருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எங்கிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்து விழுந்திருக்க முடியும்? ஒரு வேளை இக்கட்டுரையை எழுதிய மகானுபவர் அப்படி காத்துக் கொண்டிருந்திருக்கலாம்.
* தெரியாதவர்கள் எப்படி அஞ்சலி செலுத்தி இருக்க முடியும்? இன்றைய பொழுதில் உலகத்தில் மூலைகளில் எத்தனையோ இறப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் யாரேனும் அஞ்சலி செலுத்தினால் இறந்தவரைத் தெரிந்தவர்களாய்த் தான் இருக்க வேண்டும். இவர்கள் 'தெரியாதவர்கள்' என்று எந்த அளவுகோலை வைத்து கட்டுரையாளர் எழுதினார் என்று புரியவில்லை. 'தெரிந்தவர்கள்' என்று எழுதப்பட்டவர்கள் தெரிந்து கொண்ட அளவிற்கு தெரியாதவர்கள் என்று பொருளா? எனில், இவருக்கு அந்த அளவை யார் அளித்தது? பொது வாழ்விற்கு வந்த பின் ஒருவர் பல விதங்களில் பொது மக்களைப் பாதிக்கிறார். கட்டுரையாளர், சுஜாதா புழங்கிய துறையில் இருந்த படியால், அத்துறையில் புழங்காத அல்லது கட்டுரையாளர் அளவிற்குப் புழங்காத ஒருவர் சுஜாதா பற்றி தெரிந்ததை விட குறைவாகவே தெரிந்து கொண்டிருக்க முடியும். பொது வாழ்விற்கு வந்த பின் தெரிந்து கொண்ட அளவை வைத்து தான், அவர் தம் மனதில் ஏற்படுத்திய பாதிப்பிற்குத் தக்க தான் அஞ்சலிகள் அமைந்திருக்க முடியுமே தவிர, தாம் மட்டுமே அவரைத் தெரிந்து வைத்துள்ளோம் எனவே தம்மைத் தவிர வேறு யாரேனும் பொது வாழ்வு நபரைப் பற்றிக் கருத்து தெரிவிப்பது தவறு என்ற எண்ணம் கட்டுரையாளருக்கு இருக்குமேயானால், அது எல்லோரும் சொல்வது போல் உண்மையிலேயே 'சிறுபிள்ளைத்தனமானது தான்'.
'நீங்க இன்னும் வளரணும் தம்பி..!'.
* அது என்ன வேடர்கள் என்ற ஒரு செருகல்? இது சுத்தமாகப் புரியவில்லை. எதுகை மோனைக்காக எழுதப்பட்டதெனில் மன்னித்து விடலாம். இந்த பத்தியில் இப்பதம் யாரைக் குறிப்பிடுகிறது என்பதைக் கட்டுரையாளர் சற்று தெளிவுபடுத்தினால் நலன்.
* 'பத்திரிக்கை...கைகுட்டை' - இது யாரைப் பார்த்து என்று தெரியவில்லை. இணையப் பதிவாளர்களைப் பார்த்து இருக்காது என்றே நினைக்கிறேன். வலைப்பதிவு வைத்திருக்கும் அச்சு ஊடகத்தில் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருக்கும் எழுத்தாளர்களை நோக்கித் தான் வீசப்பட்டிருக்க வேண்டும். பின்னே, பொது வாழ்வு நபரின் மறைவிற்குப் பின் நான் போய் 'சார், என்னுடைய இரங்கல் செய்தியை வெளியிடுகிறீர்களா?' என்று கேட்டால் அது ஏற்கப்படுமா? எனவே அது பெரியவர்களைப் பார்த்து சொல்லப்பட்டது தான் என்றே கருதுகிறேன். அவர்களுக்கும் அவ்வாறே தோன்றினால், அவர்கள் எதிர்வினை புரியட்டும். இதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.
விகடனில் வரிசையாக சுஜாதா கதைகளை வெளியிட்டு சிம்பதியை சில்லறை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, கோட்டை விட்ட குமுதம் யோசித்து, சுஜாதா இல்ல விஜயம் ஒன்றை நிகழ்த்தி துட்டு பார்க்க நினைத்து எழுதிய கட்டுரை இது. போகிற போக்கில் ஒரு வெடியை வீசி விட்டுப் போகலாம் என்ற வயிற்றெரிச்சல் வாக்கியங்களாய் முதல் பத்தியில் வந்து விழுந்து விட்டது.
முன்பே கூறியது தாம். குமுதம் கொஞ்சம் லேட்டாகத் தான் விகடனை ஃபாலோ பண்ண நினைக்கும். அதற்கான அடுத்த அத்தாட்சி இது...!
தொடர்புடைய மற்றும் இரு பதிவுகள் :
http://blog.balabharathi.net/?p=93
http://valai.blogspirit.com/archive/2008/04/19/kumudam.html
No comments:
Post a Comment