ஆரம்ப காலத்தில் ஒரு டேப் ரிக்கார்டர் வீட்டில் இருந்து வந்தது. அதில் தான் 'உயிரே உனக்காக' மற்றும் 'நானும் ஒரு தொழிலாளி' என்ற காம்பினேஷன் கேஸட் (TDK) கேட்ட நினைவு இருக்கிறது. ஒரு முரை அதில் ஏதோ ரிப்பேர் ஆகி விட , அதைச் சரி செய்யக் கொடுத்த கடையில் ஸ்வாஹா செய்து விட்டு கொஞ்சம் பைசா கொடுத்தார்கள்.
அத்தோடு பாடல்கள் கேட்கும் பழக்கம் வானொலி (His Master's Voice) மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஒரு பழைய காலத்து வஸ்து. பெரிய செவ்வகப் பெட்டி. முகத்தின் அடிப்பக்கம் இரு குமிழ்கள். சட்டை பட்டன் பெரிய சைஸ் போல் இருக்கும். ஒன்று ஆன் செய்து, வால்யூம் கூட்ட, குறைக்க உதவும். மற்றொன்று ட்யூன் செய்ய.
முகத்தின் மேல்பாகம் 80% பட்டை பட்டையாய் இருக்கும். அதன் வழியாகத் தான் ஒலி கேட்கும். குமிழ்கள் அருகில் ஸ்கேல் போல் பல எண்கள். எஃப்.எம். ஏ.எம் என்று பின்பு தான் புரிந்தது. வானொலி ஆன் செய்ததன் அடையாளம் ஒரு ரேடியம் நிற ஒளி அந்த அளவுஸ்கேலின் உடலெங்கும் பரவும். குமிழைத் திருப்பிக் கொண்டே பாடல்கள் , நாடகங்கள் கேட்போம்.
வானொலியின் முக்கிய பங்கு நேரம் அறிவதற்காகத் தான் இருந்து வந்தது. காலை 8 மணிக்கு பள்ளிக்கு பேருந்து இருக்கின்றது. 7:30க்கு திருச்சி வானொலியில் பாடல்கள் வைக்க ஆரம்பிப்பார்கள். அதிகமில்லை ஜென்டில்மேன், மூன்றே பாடல்கள் தான். முதலில் புதுப்பாடல். இரண்டாவதாக மீடியம் கால பாடல். மூன்றாவதாக பழைய பாடல். இந்த வரிசையும், வகைப்பாடும் மாறுவதே இல்லை. சரியாக இரண்டாம் பாடல் முடிந்தவுடன் கிளம்பி விடுவோம். அப்போது தான் பஸ் ஸ்டாப்பிற்குச் செல்ல கரெக்டாக இருக்கும்.
8 மணிக்கு பாடல்கள் முடிந்தவுடன் டெல்லிக்கு அலைவரிசை மாற்றப்படும். முதல் கால் மணிநேரம் இந்தியிலும், பின் அடுத்த கால் மணி நேரத்திற்கு ஆங்கிலத்திலுமாக செய்திகள் சொல்லப்பட, 08:30 ஆகி இருக்கும்.
சனிக் கிழமைகளில் மட்டுமே அவற்றை கேட்க முடியும். கோவை வானொலியில் 08:30க்கு நாடகம் போடுவார்கள். அற்புதமாக இருக்கும். சில சமயம் கொங்கு வட்டார வழக்கில் நாடகங்கள் இருக்கும். கேட்க கேட்க இனிமை...!
அப்படி ஒரு சனிக்கிழமையில் கேட்ட ஒரு நாடகம் நினைவுக்கு வருகின்றது. சகுனி ஏன் கொளரவர்களுக்கு கூட இருந்தே குழி பறித்து, பாண்டவ மற்றும் கெளரவ வம்சங்கள் பகை கொள்ள காரணமாய் இருந்தார்? அவரது வாழ்வில் இவர்களால் ஏற்பட்ட பிரச்னை என்ன? என்பதை சொல்லி இருந்தார்கள். நன்றாய் இருந்தது.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
இன்றைக்கும் 'ஒரே நாள் உனை நான்..' பாடலைக் கேட்டால் திருச்சி வானொலி தான் நினைவுக்கு வருகின்றது.
ஒன்பதாம் வகுப்பின் பாதியில் ஒரு டேப் ரிக்கார்டர் வந்தது. மாடர்னாக வானொலி, டேப், ரிக்கார்டர் எல்லாம் இருந்தன.
அதில் தான் எல்லா சித்து விளையாட்டுகளும் விளையாடி, எக்கச்சக்க அடிகள் வாங்கிய்து நடந்தது.
பாடல் கேஸ்ட்களை எல்லாம் உருவிப் போட்டது, புதிது புதிதாக பாடல்கள் ரெக்கார்டிங் செய்வது, அதிலேயே சொந்தக் குரலில் பாடுவது (கரோக்கி), பேசுவது, பழைய கேஸட்டுகளை குரல் அழிப்பு... என்று பல விதங்களில் இன்று PodCasting செய்வது போல் பல வேலைகள் செய்தோம்.
பிறகு தான் அறிமுகம் ஆயினர் எஸ்.வி.சேகர் மற்றும் கிரேஸி மோஹன் நாடகங்கள்.
ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி இராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஆர்.எஸ்.மனோகர் என்று பல ஜாம்பவான்கள் நாடகங்கள் இருந்தாலும் இவர்கள் இருவரின் நாடகங்கள் தான் மிகவும் கவர்ந்தனவாக இருந்தன.
அவற்றில் கிரேஸியின் நாடகங்கள் கொஞ்சம் பிராமண டச் இருந்து கொண்டே இருக்கும். இன்று வரை அந்த நிழல் படிவதை அவரும் விலக்க முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. அதை அவர் விரும்பியே செய்வது போலவும் இருக்கிறது. சேகர் திறமையாக அது போன்ற தவற்றைச் செய்யாமல், பொதுத் தமிழை பயன்படுத்தியதால் எல்லோரையும் எளிதாக ரீச் செய்ய முடிந்தது.
சேகரின் நாடகங்களில் அவரைச் சுற்றியே கதை இருக்கும். செய்வது போலவும் இருக்கும். கிரேஸி அப்படி எல்லாம் செய்யாமல், எல்லோர்க்கும் சம வாய்ப்பு கொடுப்பது போல் இருக்கும்.
சேகரின் நாடகங்களில் வண்ணக் கோலங்கள், அதிர்ஷ்டக்காரன், பெரியதம்பி, 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, காட்டுல மழை, காதுல பூ, மகாபரதத்தில் மங்காத்தா ஆகியனவும், கிரேஸியின் நாடகங்களில் மீசை ஆனாலும் மனைவி, சாட்டிலைட் சாமியார், ரிடர்ன் ஆஃப் கிரேஸி தீவ்ஸ் ஆகியனவும் மிகவும் பிடித்தனவாக இருக்கின்றன.
அமுல் மில்க் பவுடர், ஹார்லிக்ஸ், மாஸ்,கிஸான் ஜாம்.... இவற்றுக்கும், இப்பதிவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். சனிக்கிழமை பகல்களில் சும்மா இருக்கையில் இந்த நாடகங்களை டேப் ரிக்கார்டர்ல் ஓட விட்டு, இவற்றை எல்லாம் ஸ்பூனால் எடுத்து 'இது தான் லாஸ்ட் ஸ்பூன்' என்று சொல்லிக் கொண்டே பூரா பாட்டிலையும் காலி செய்து விட்டு, சுவை பழகி, நாடகம் கலந்து... இப்போது நாடகங்களைக் கேட்கும் போது அவற்றின் சுவை நினைவுக்கு வந்து, இவற்றைச் சாப்பிடும் போது நாடக வசனன்களும், அச்சூழலும் நினைவுக்கு வந்து, Pavlov's Dog Experiment-ஐ ருசுப்படுத்துகின்றன.
இன்று வரையில் பாடல்கள் கேட்கப் போரடிக்கையில் அமைதியாக ஏதேனும் ஒரு நாடகத்தை ஓட விட்டு (இப்போது கணிணியில்..!) கேட்டுக் கொண்டே வேலைகள் செய்வதிலும், இன்றி படுத்துக் கொண்டு கழுத்து வரை போர்த்திக் கொண்டு சும்மா படுத்திருப்பதிலும் சுகம் இருக்கத் தான் செய்கின்றது.
2 comments:
நண்பர் வசந்த்துக்கு...
நாடகவாழ்க்கை நன்றாக இருந்தது.
//அவற்றில் கிரேஸியின் நாடகங்கள் கொஞ்சம் பிராமண டச் இருந்து கொண்டே இருக்கும். இன்று வரை அந்த நிழல் படிவதை அவரும் விலக்க முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. அதை அவர் விரும்பியே செய்வது போலவும் இருக்கிறது. சேகர் திறமையாக அது போன்ற தவற்றைச் செய்யாமல், பொதுத் தமிழை பயன்படுத்தியதால் எல்லோரையும் எளிதாக ரீச் செய்ய முடிந்தது.
// இருக்கலாம்.
எனக்கும் +2 வரை வானொலியே நல்ல உ(க)ற்ற நண்பன்.மதுரை வானொலியில் இரவில் போடௌம் நாடகங்களுக்காகத் தவமிருந்த்து நினைவுக்கு வருகிறது.ஏனெனில் இரவு 7 மணிக்கு மேல் இலங்கை வானொலி கேட்காது.எங்கள் வீட்டிலும் வால்வ் செட் வானொலிதான்.அதில் வெளிநாட்டு வானொலி(சிங்கப்பூர் ஒலி95.4(....?),பிபி.சி,சீனவானொலி) ஒலிபரப்புகளைக் (கரகரப்புடன்) கேட்பதில் இருந்த சுகம், இப்போது ஒரு தொடலில் துல்லிய ஒலிபரப்பு கேட்பதில் இருப்பதில்லை.இவற்றைக் கேட்பதற்காக வானொலியின் குமிழிகளை நோண்டி,நொங்கெடுத்தது(தாத்தாவிற்குப் பயந்து கொண்டே)இன்று நினைவுக்கு வருகிறது.
மதுரை(எல்லா தமிழக வானொலிகளிலும்) வானொலியில் ஒவ்வொரு வருடமும், ஒரு வாரத்திற்கு இரவு 9.30 முதல் 10.30 வரை அகில இந்திய நாடக விழா ஒலிபரப்புவார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு வானொலி நிலையத்தின் நாடகம் ஒலிபரப்பாகும்.தூங்கி வழியும் கண்களோடு காத்திருப்பேன்.ஒவ்வொரு செவ்வாய் இரவும் 'மனோரஞ்சிதம்' எனும் தலைப்பில் பழைய பாடல்கள் போடுவார்கள்.
அப்புறம் நாடகக்குரல்களில் என்னால் இன்றும் மறக்க முடியாத குரல்,இப்போது கூட என் காதுகளைச் சுற்றுவது போல் ஒரு பிரமை...அப்படிஓர் கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் மறைந்த நாடக நடிகர் ஹெரான் ராமசாமி அவர்கள்.பெரும்பாலும் சரித்திர நாடகங்கள்தான்.கெட்டியான எருமை மாட்டுப்பாலில் குடித்த ஸ்ட்ராங்கான காஃபி போல் சுவையான குரல் அவர் குரல்.நீங்கள் 'யார்?' படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் முதலில் வந்து இறந்துவிடும் முனிவர் வேடத்தில் நடித்தவர் அவர்தான்.
எனது சிறுவயது கனவு டேப் ரெக்கார்டர் வாங்குவது. கல்லூரி முடியும் வரை இயலவில்லை. வேலைக்கு வந்தபிந்தான் நிறைவேறியது.ஆனால் அதற்காக அலைந்த பருவங்களின் தொலைந்த கன்வுகளைத்தான் என்னால் மீட்டெடுக்க முடியவில்லை.தற்போதைக்கு நினைவுகள் மட்டுமே மிச்சமாய்...
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள்.
அருமை. நீங்கள் இந்த பின்னூட்டத்தையே இன்னும் கொஞ்சம் டெவலப் செய்து, விரிவாக்கி ஒரு பதிவாக உங்களது ப்ளாக்கிக் இடலாமே...!
Post a Comment