Wednesday, April 16, 2008

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!


"SIM Lockedனு வந்திருக்கு. ஏதோ நம்பர் கேட்டிருக்கு. இவன், என் தம்பி தான், ஏதோ நம்பர் ப்ரெஸ் பண்ணி இருக்கான். இப்படி லாக் ஆகிடுச்சு. இதை ஏதாவது பண்ணி சரி பண்ணித் தர முடியுமா, அங்கிள்...?"

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!

சென்னையில் இருந்து நகர்ந்து எர்ணாகுளம் நெருங்கிக் கொண்டிருந்தது சென்னை மெயில். ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் முக்கால் பாகம் சபரிமலைக்குப் போகும் சாமிகளால் நிரம்பி இருந்தது. ஜன்னல்களில் கதம்ப மாலைகள் தொங்கலில் இருந்தன. அரையாடையும், வழியும் தொப்பையும், முகத்தில் முட்களென முளைத்திருந்த வெள்ளையும் கருப்புமான தாடி காற்றில் ஆட, பெட்டிக்குள் நடந்து கொண்டே இருந்தனர் சாமிகள்.

வீட்டில் இருக்கும் போது அசையவே இருந்திராத மூன்று மணி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த பெட்டிகளைத் தழுவி எதிர்த் திசையில் வெகு வேகமாக நழுவிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு மணிநேரத்தின் தொலைவில் 'செங்கன்னூர்' இருக்கின்றது. அங்கு இறங்கி பேருந்து பிடித்து மலைக்குச் செல்வார்கள்.

இந்தச் சிறுமியும், சிறுவனும் கூட அங்கு தான் இறங்க வேண்டியவர்கள் என்று சொல்லி இருந்தார்கள். என்னை அவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறு கூட வந்து, சேலம் நெருங்குகையில் காலணிகளைக் கழட்டி, நான் சுகமாக பெர்த்தில் படுத்துக் கொள்ள, இறுக்கமான சாக்ஸும், பாலிஷ் மினுமினுத்த ப்ளாக் ஷூவும் அணிந்து கொண்டு இறங்கத் தயாரான பெண் காவலர்கள் இருவரும் சொல்லி இருந்தார்கள்.

சிறுமி இன்னும் பத்தாவது கூட தாண்டி இருக்க மாட்டாள் போல் இருந்தாள். பறக்க விட்ட சின்ன குதிரைவால் முடிக்கற்றையோடு, மென் மஞ்சள் நிற சுடி அணிந்திருந்தாள். காதில் ஏதோ சின்ன கல் மினுத்தது. இது தான் இப்போதைய ட்ரெண்ட் போலும். சிறுவனும் இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல், இறுக்கிப் பிடித்த ஜீன்ஸும், அந்த இரவிலும் இன் செய்த, 77 என்ற NBA நம்பர் பொறிந்திருந்த நீல டீ-ஷர்ட்டும், பழைய விஜய் போன்ற ஒரு ஸ்பெக்ஸும் அணிந்திருந்தான்.

சிறுவன் அவளது தம்பி போல் இருந்தான். அட, தோற்ற ஒற்றுமை எல்லாம் இல்லை. வழியெங்கும் அவர்கள் சண்டை இட்டுக் கொண்டே வந்தார்கள். சிறுமி அவனை மிரட்டிக் கொண்டும், ஏதோ குறை சொல்லிக் கொண்டும் வர, அவனோ காதிலேயே போட்டுக் கொள்ளாமல், இரு கட்டை விரல்களால் செல் போனைப் படுத்திக் கொண்டே வந்தான்.

பொறுமை தாண்டிப் போனால், அவனும் ஏதோ சொல்லித் திட்டுவான். அவ்வப்போது தமிழிலும், சிலசமயம் மலையாளத்திலும் சண்டை நடக்கும். உச்ச கட்டம் தாண்டிய பின் மொழிப் பிரச்னை இன்றி மெளனம் அங்கே நிலவும். சிறிது நேரம் தான்; மிகச் சிறிய நேரம் தான். மீண்டும் அடுத்த சண்டை கிளம்பும்.

இப்படியான ஒரு சூழலில் தான் செல்போன் லாக் ஆகி விட்டிருந்தது.

நானும் என்னால் ஆன டெக்னிக்குகளை எல்லாம் சொல்லி, பின் அதைச் சரி செய்து கொடுத்தேன். ஆனாலும் சரி செய்ய முடியாமல் போனது, அச்சிறுமி சொன்ன 'அங்கிள்....!'

சிறு வயதில் ஒரு ஹேர்டை விளம்பரம் பார்த்திருப்போம்.

ஒரு பெண் தலைமுடியில் ஒரே ஒரு நரைமுடி வந்திருக்கும். அதைப் பார்த்து அவர் வருத்தப் படுவார். அப்போது அவரைக் கடந்து கல்லூரி செல்லும் அவரது தம்பி, 'ஹாய் ஆண்டி' என்று கூறிச் செல்வான். அதிர்ச்சி அடையும் அவர்.. பின்புலத்தில் 'ஆன்ட்டி... ஆன்ட்டி... ஆன்ட்டி...' என்று எக்கோ கேட்டு பயமுறுத்தும். இதற்கு ஏதாவது ஒரு வழி செய்தாக வேண்டும் என்று, ஒரு ஹேர் டையை பூசிக் கொள்வார்.

அடுத்த நாள், அவன் 'ஹாய் அக்கா' என்று சிரித்துச் செல்லும் போது சும்மா போகாமல், ஷூ லேஸ் போட்டுக் கொண்டு இருக்கும் அவரது கணவரைப் பார்த்து 'ஹாய் அங்கிள்' என்று போகின்ற போக்கில் ஒரு குண்டை வீசிச் செல்வான்.

எனக்கென்னவோ அவன் அந்த ஹேர் டை விற்பனையாளனாக இருப்பானோ என்ற சந்தேகம். இவர்கள் இரண்டு பேரும் அதை உபயோகித்தவுடன், வெளியில் தோட்டக்காரர், தள்ளுவண்டி வைத்திருப்ப்பவர் என்று பரப்புவான் போலும்!

அது போன்ற எஃபெக்ட் நேற்று எனக்கு!

ஆமா, வீட்டுல போடறாங்கனு பருப்பு சாம்பரும், தக்காளி இரசமும், ஆஃபீஸுல ஓசியில கூட்டிட்டுப் போறங்கனு பிஸ்ஸா, சிக்கன், மட்டன், ஃபிஷ், தேங்காய் எண்ணெயில் பொறித்த சிப்ஸ், க்ரீம் வழிந்து இனிக்கின்ற கேக், பக்கோடா, வாழைப்பழம் என்று வெரைட்டியாக வளைத்துக் கட்டினால்.. பிறகு என்ன 'மிஸ்டர் வேர்ல்டு லார்டு லபக்குதாஸ்' பட்டமா தருவார்கள்...?

சென்ட் கணக்கில் ஆரம்பித்து விட்ட க்ரெளண்ட், ஆங்காங்கே 'வெள்ளி முளைத்தது' போல் பறக்கத் துவங்கி இருக்கும் வெண் முடிகள்... கன்ஃபார்மே செய்திருக்கும்.

இதெல்லாம் போதாதென்று விழித்துப் பயணித்த நான்கு மணி நேரத்திலேயே, அசோகமித்திரனின் ஒற்றன், Idries Shah-வின் 'Thinkers of East', Partition பின்னணியில் கங்கை நதிக்கரையில் ஒரு குடும்பம் படும் பாடு பற்றிய நாவல் (பெயர் ஞாபகமில்லை. நேற்று தான் படிக்கத் துவங்கி உள்ளேன்.) , குமுதம் ரிப்போர்ட்டர் என்று வகை தொகை இல்லாமல் படித்துக் கொண்டே வரும் ஒரு மனிதனைப் பார்த்து, '100 எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்' என்ற குறு நூலை 10ரூ. கொடுத்து வாங்கி, செல்போனில் எழுத்தெழுத்தாக டைப் அடித்து சேமித்துக் கொள்ளும் சிறுமி 'அங்கிள்' என்று விளிக்காமல் வேறு என்னவென்று கூறுவாள்?

இருந்தாலும் வயதாகிக் கொண்டே செல்வதை ஒப்புக் கொள்ளாத மனம் கூறுகிறது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!

5 comments:

பிரேம்ஜி said...

கவலைப்படாதீங்க மனசை இளமையா வெச்சுக்குங்க

இரா. வசந்த குமார். said...

அன்பு பிரேம்ஜி... தங்கள் வருகைக்கு நன்றி...

/*
கவலைப்படாதீங்க மனசை இளமையா வெச்சுக்குங்க
*/

இப்படி சொல்லித் தான் சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.....

Anonymous said...

அலல. நீ நினைத்தாள் நிச்சயம் சாதிக்க முடியும். இது ஒன்றும் தீர்க்க முடியாத problem அல்ல வாரம் ஒரு நாள் விரதம் வாரம் இரு முறை அமைதியான உடல் பயிற்சி . தினமும் காலையும் மாலையும் காய கல்ப பயிற்சி. இது உன்னால் முடியாதா .இதை மட்டும் ஒரு இரண்டு மாத காலம் தவறாது செய்து வா.உனக்கே ஒரு புத்துணர்ச்சியும் உடலில் மாற்றமும் தெரியும்.காய கல்ப பயிற்சியினால் உடல் என்றும் இளமையுடன் இருக்கும். முதுமை அவ்வளவு விரைவில் உன்னை அண்டாது. அதனால் நோயும் வராது. காய கல்ப பயிற்சியினால் உடல் கல் போல் ஸ்ட்ராங் ஆக ஆகி விடுமாம். இது விளையாட்டல்ல முற்றிலும் உண்மை. இது உனக்கே தெரியும் .சுமார் நாற்பது ஆண்டுகளாக கானகத்தில் கொடிய விலங்குகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் இடையில் சென்று கிடைப்பதர்க்கரிய கனிகளைக் கொண்டு வந்து தான் உண்டு டெஸ்ட் செய்து பிறகே அதைப் பிழிந்து தம்ளரில் ஜூஸ் ஆக கொடுத்துள்ளார். ஆனால் அதை குடிக்க நாம் கஷ்டப்படுகிறோம் .அவர் பொது நலத்துக்காக செய்தார். நாம் நமது சுய நலத்துக்காக கூட காய கல்ப பயிற்சியினை செய்ய மறுக்கிறோம்.. சரி. இப்படி செய்து வந்தால் இன்னும் பத்து வருடம் கழித்து அந்த சிறுமி பார்த்தால் கூட என்ன பிரதர் நலமா என்று கேட்பாள் , இவை அனைத்தும் அந்த சிறுமி அங்கிள் என்று கூப்பிட்டதர்க்காக மட்டும் அல்ல. என் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்ற சுய நலத்துககாக் தான் .இந்த அம்மா எப்பவும் இப்படித்தான் என்று நினைப்பது புரிகிறது. இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு டைப் செய்ததைக்க்காகவவது பலன் கிடைத்தால் மகிழ்வேன்

Anonymous said...

அங்கிள் சிறுமி இவ்வாறு கூறியிருப்பதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையே இல்லை மனசு இளமையாக இருந்தால் போதும் . இது தியரி. ஆனால் மனசு வெளியே யாருக்கும் தெரியாது.இநத பிரச்னையைpracticalppractical ஆகத்தான் solve செய்ய முடியும்.இது ஒன்றும் தீர்க்க முடியாத problem அல்ல. நிச்சயம் முடியும். நீ மனது வைத்தால். முதலில் நரை முடி. அதுவும் இள நரை. அதுவும் கேரளத்தில் இருந்து கொண்டு இதை சரி செய்ய முடியாதா ஒரு டாக்டரிடம் சென்று இள நரை வந்ததற்கான காரணத்தை அறிய வேண்டும்.ஏதேனும் சத்து குறைவாக இருக்கலாம். அல்லது பித்த நீர் அதிகம் சுரப்பதால் கூட இருக்கலாம். அதற்கு நமக்கு தெரியாத காரணங்கள் எவ்வளவோ இருக்கும். டாக்டர் அதை கண்டுபிடித்து சொல்வர். அத்துடன் இள நரை மறைவதற்கும் மீண்டும் வராமல் இருப்பதற்கும் முடி விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வதற்கும் வழி காட்டுவார் பிறகு பார்.ஒரு இருபது வயது பெண் கூட உன்னிடம் வந்து என்ன தம்பி என்ன காலேஜ் என்று கேட்பார். பிறகு உன்னை அறியாமலேயே உனக்குள் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். .

இரா. வசந்த குமார். said...

கண்டிப்பாக அம்மா... இனிமேல் தினமும் பயிற்சி செய்கிறேன்...