Wednesday, August 06, 2008

சாரு Sir-u...!

இன்று சாரு ஸ்பெஷல்.

1. சாரு Sir-uவின் சுனாமி பற்றிய ஒரு பதிவைப் பார்த்ததும் எனக்கும் சுனாமி பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது.

ராமாவரத்தில், எம்.ஜி.ஆர். அவர்களின் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள ஓர் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தோம். நான், சண்முகம், சிவராஜ், பாலாஜி, ஆண்டனி, கீர்த்தி. சனிக்கிழமை இரவு வழக்கம் போல் நெடு நேரம் பேசி விட்டு தூங்க ஆயத்தப்படும் போது பார்த்தால், நள்ளிரவைத் தாண்டி முட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

மென் குளிர், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்ததும் ஒரு கவிதை போல் லேசாக சில வார்த்தைகள் கிளர்ந்தெழ வைத்திருந்த 80 பக்க லார்ஜ் சைஸ் நோட்டில் கிறுக்கிக் கொண்டேன். அது கடைசியில்!

ஞாயிறு காலையில் எட்டு மணிக்கு மேலாக எழ முயற்சி செய்கையில், ஆண்டனி தான் சொன்னான்.

"டேய், பூமி அதிர்ச்சிடா..! நீ ஃபீல் பண்ணினியா..?"

எனக்கு ஒன்றும் அது போல் தோன்றவில்லை. ஏதேனும் தூக்கத்தில் புரண்டிருப்பேன் என்று சொல்லி விட்டேன். பெத்த பாடி.

பிறகு தான் சுனாமி, கடல் ஊருக்குள் புகுந்து விட்டது என்றெல்லாம் மக்கள் சொன்னார்கள்.

சுனாமி? புதிதாக இருந்தது.

அவசரமாக கீழே போய், ஆபீஸ் சீனியர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்க்க, சன் டி.வி. நியூஸில், கோட் சூட் அணிந்த வாசிப்பாளர், "இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இராணுவ ... (காமிரா ஆடுகின்றது) சார்... செட் ஆடுது பாருங்க.. (காட்சி அதிர்கிறது)..கேமிரா ஆடுது சார்...(கோட், சூட், டை எல்லாம் எல்.ஜி. திரைக்கு 45 டிகிரி வாக்கில்..) என்னங்க நடக்குது... எர்த் க்வேக்கா...?"

"நீங்கள் பார்த்த இக்காட்சி நமது சன் டி.வி.யின் காலை 8 மணி செய்திகளுக்காக வீடியோ எடுக்கப்படும் போது அலுவலகத்தில் ஏற்பட்டது. இந்தோனேஷியாவில்..." அப்போதும் பட்டுப் புடவை, செயின், மல்லிகைப்பூ என்ற முதலிரவு அலங்காரத்தில் ஒரு பெண் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் பெண்களாய் இல்லாத காரணத்தால், அவரது அலங்காரங்களில் கவனம் செலுத்தாமல், காத்திருக்கும் ஆண்களாய் இல்லாத காரணத்தால், அவரில் கவனம் செலுத்தாமல், ஆர்வமான இளைஞர்களாய் இருந்தமையால், திரையில் கீழே காபிக் கொட்டை சைஸில் ஓடிக் கொண்டிருந்த ஃப்ளாஷ் நியூஸில் கண்களைப் பதித்திருந்தோம்.

FLASH NEWS : இன்று அதிகாலை ஆறு மணி சுமாருக்கு இந்தோனேஷியாவில் கடல் கொந்தளிப்பால், வங்காள விரிகுடாவில் கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தமான், இலங்கை, இந்தியா, பர்மா, பங்களாதேஷ் கடற்கரைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீடியோக்கள் காட்டப்பட்டன. கடல் பொங்கி ரிசார்ர்ட்டுகளில் புகுந்திருந்தது. மெரினாவில் மாருதி கார் முக்கால் செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. பீச் ரோடு வரை வாய்க்கால் போல் தேங்கி இருந்தது. திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி அசிங்கமாய் பச்சைப் பாறைகள் படிந்து தெரிந்தன. நாகையில் படகுகள் தெறித்திருந்தன. குமரியில் விவேகானந்தர் மண்டபம் முழுக்க நனைந்திருந்தது. இலங்கையில் தென்னைகள் மிதந்தன.

ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒழிய, இதன் கடும் பயங்கரம் புரியவில்லை.

சுனாமி என்பதன் அர்த்தம் தெரியாததால், வதந்திகள் றெக்கை அல்ல, ராக்கெட் கட்டி பறந்தன.

"பீச் ரோட்ல ட்ராஃபிக் ஃபுல்லா ப்ளாக் பண்ணிட்டாங்களாம். நேப்பியர் ப்ரிட்ஜ்ல இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் ப்ளாக். அப்படியே தூர்தர்ஷன் ரோட்ல திருப்பி விட்டுருக்காங்க.."

"பெசண்ட் நகர்ல கடல் ஒரு கி.மீ.க்கு உள்ள போயிருக்கு. எல்லாரும் ஜாலியா உள்ள போய்ட்டு வர்றாங்களாம். என்ன, கொஞ்சம் வழுக்கறதால பாத்து பாத்து போறாங்களாம்.."

"பொன்னியின் செல்வன்ல வர்ற மாதிரி நாகப்பட்டினத்துல தான் செம அட்டாக். பாதி ஊரை காலி பண்ணிடுச்சு..."

"திருச்செந்தூர்ல கடல் கோயிலை மட்டும் விட்டுட்டு, சுத்திட்டு போய் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் வந்திருக்கு. ஒரு காலத்துல வருண பகவான் முருகன்கிட்ட சத்தியம் பண்ணி இருக்காராம், உங்க கோயிலை தொட மாட்டேன்னு.! அதான்...!"

"ஸ்ரீலங்கா மட்டும் இல்லைனா, அவ்வளவு தான் கன்யாகுமரி உட்பட சவுத் ஃபுல்லா க்ளோஸ் ஆகி இருக்கும்..."

"அந்தமான்ல தான் பயங்கரமான சேதமாம்..."

அரட்டை அரங்கம், டாப் டென்களின் கீழே நகர்ந்தபடி இருந்த நியூஸிலேயே எங்கள் கவனம் நிறைந்திருக்க, அவ்வப்போது அதை கலைத்தபடி ஃபோன் கால்கள் வீட்டிலிருந்து...!

"வீட்டிலேயே இருடா...! எங்கயும் போயிடாத..! எர்த் க்வேக் வரலாம்னு சொல்றாங்க..!"

"ம்மா..! நாங்க இருக்கறது ராமாபுரத்துல..! கடல் இங்க இருந்து மூணு கிலே மீட்டர் தள்ளி. சுனாமி எல்லாம் வராதுமா..!"

"எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க...!"

திடீரென்று ஒரு ஞானோதயம்.

ஊரில் இருக்கின்றவர்கள் தான் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், நாமும் ஏன் அதையே செய்ய வேண்டும்? நடந்தது நமக்கு அருகில் தானே! நேரில் சென்று பார்த்தால் என்ன..?

அவசர அவசரமாக குளித்து விட்டு (மதியம் 12:30) நானும் கீர்த்தியும் கிளம்பினோம்.

M54 பிடித்து ஒரு ஸ்டாப்பிங்கில் (சைதைக்கு முன் ஸ்டாப். எட்டு மாதத்திற்குள் பேர் மறந்து விட்டதே!) இறங்கி, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, 23C பிடித்து பெசண்ட் நகர் சென்றோம்.

கல்லூரிக் காலத்தின் அந்திம செமஸ்டர்களில் கிண்டி கேம்பஸில் இருந்து நடந்தே பெசண்ட் நகர் பீச் போய் அரட்டை அடித்து விட்டு, ஆங்காங்கே கிடைத்ததை உண்டு விட்டு, மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட 'அந்த ஒரு கனாக் காலத்தில்' அலைகள் வந்து தீண்டும் இடத்தில் ஒரு மேடு போல் உருவாகி இருந்தது. அதில் அமரலாம்.

இப்போது அந்த மேட்டையே சுத்தமாக காணோம்.வழித்து எடுக்கப்பட்டு இருந்தது. ரோட்டில் இருந்து கடல் வரை சீரான மணல் தளமாக இருந்தது.

அது மட்டுமல்ல. கடல் பச்சையாக உள் வாங்கி இருந்தது.

மேட்டுப் பாறைகள் பாசி பூண்டிருந்தன. அழுக்காய், கறுப்பாய் சாக்கடையாய் இருந்தது. நகரத்தின் முழுக் கழிவுகளும் கலக்கும் கடலின் ஆரம்பமே இப்படி என்றால், கடல் முழுதும் எவ்வளவு மாசுபட்டிருக்கும் என்று தோன்றியது.

காய்ந்த இளநி, செருப்புகள், வாழைத் தோல், உடைந்த பலூன், அபூர்வமாய் சில்லறைகள், பூச் சரங்கள், நண்டு என்று எக்கச்சக்கமாய் தெரிந்தன.

சிக்னல் எடுக்கிறதா என்று செக் செய்து பார்த்தேன். எடுத்தது. வானம் கொஞ்சம் மேக மூட்டமாய் இருந்தது. எப்போதும் மழை வரலாம். எனினும் சென்னையின் வெயில் சூழ் காற்று இருந்தது.

நானும், கீர்த்தியும் கைகளைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம். வழுக்கியதும், இறுக்கம்.

கொஞ்ச நேரத்தில் எங்களையும் தாண்டி உள்ளே சென்றிருந்த எல்லோரும், 'தடார் புடார்' என்று வெளியே ஓடி வர, நாங்களும் கூடவே ஓடி... திரும்பிப் பார்த்தால், கடல் எங்களைத் துரத்திக் கொண்டு வருகின்றது.

தன் எல்லையில் வந்து விட்ட அயலானைத் துரத்தும் வெறித் தெரு நாயின் வேகத்துடன், மீண்டும் தன் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் போர் வீரனின் தாவலுடன் அலைகள் எங்களை ஆக்ரமிப்பு செய்ய ஓடி வந்தன.

நான் ஒரு முட்டாள்தனமான யோசனை கூறினேன்.

கடலின் எல்லையை ஒட்டி, மீனவக் குடிசைகளைத் தாண்டி, அஷ்டலக்ஷ்மி கோயிலின் கிழக்குப் பார்த்த படிக்கட்டுகளில் ஏறிக் கொள்வோம் என்று.

கீர்த்தி, 'அதெல்லாம் வேண்டாம்! என்று மெயின் ரோட்டுக்கே ஓடுவோம்' என்று சொல்லி.. அங்கேயே ஓடினோம்.

பிறகு பெருமூச்சு விட்டு, கோயிலுக்கு செல்லலாம் என்று நடந்து போய் சர்ச்சை கடந்தால், அது வரை ஈரம். கடலின் உப்பு ஈரம். காலையில் வந்த அலை ஈரம்.

லேசாக பூத்த பயத்துடன் அவற்றை, அவர்களை கடந்து சென்று கோயிலுக்கு அருகில் பார்த்தால்...

படிக்கட்டுகள் வரை கடல் வந்திருந்தது. இப்போது கிளம்பிய கடல்..!

அப்போது தான் 'தப்பித்தோம்!' என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த கவிதை ::

ஐந்து புள்ளிக் கோலங்களாய்.

உன் வார்த்தைகளின் வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்ட மனம், உன் மெளனத்தின் எடை தாங்க முடியாமல் தவிக்கிறது. அந்த கனத்தையெல்லாம் கரைத்து ஊற்றிய மையில் எழுதிய கவிதைகளின் எழுத்துக்கள், நான் இறக்கி வைத்த எடை தாளாமல் வளைந்தும், நெளிந்தும் கிடக்கின்றன.

சொல்லாமல் நீ நகர்ந்து சென்று விட்ட பின்பு, உனது ' நாளை பார்க்கலாம் ' என்ற சொல்லுக்காக, என் மனதில் நான் ஒதுக்கி வைத்த உள்ளம், காலியான வெறும் பள்ளமாக உள்ளது.

ஆயிரமாயிரம் கரங்களால் கரை தழுவும் நுரைகளால் ஆர்ப்பரிக்கும் கடலும் அந்த மெளனத்தை நிரப்ப முடியாமல் பின்வாங்கிச் செல்கிறது.

வழக்கமாய் நீ பிரிந்து செல்கையில், உடையிலிருந்து உதிரும் மணற்துளிகளை தாங்கி முத்தமிடுவதை, திரும்பிப் பார்த்துச் சிரித்துச் செல்வாய். இன்று நீ உதறாத மணற்துகள்களுக்காக, என் உதடுகள் உலர்ந்து கிடப்பதை, திரும்பிப் பார்க்காமலேயே அறிவாயா?

நீ சென்று விட்டபின்பு, கடற்கரை மணலில் நீ பதித்த பாதச் சுவடுகள், ஐந்து புள்ளிக் கோலங்களாய் மின்னுகின்றன.

அவற்றின் ஓரமாகவே என் மனமும் சென்று கொண்டிருக்கிறது.....

2. சைனாவில் இருந்து அனீஸ் என்ற எனது நண்பரின் கடிதத்தையும் அதற்கு சில கேள்விகளை பதிலாகவும் சாரு இன்று தன் பதிவில் இணைத்துள்ளார்.

மகிழ்ச்சியாக இருந்தது.

அவரின் அனுமதி இல்லாமல் இங்கே அதை கொடுப்பது சரியல்ல (தவறா என்பது மற்றொரு கேள்வி!) என்பதால் க்ளிக்குங்க!

பிப்ரவரி 27, 2008 இரவில் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த Chat-ஐ படிக்க விரும்பின் இங்கே க்ளிக்குங்க!

No comments: