'ஹரிதாஸ்' ஸினிமா பார்ப்பதற்காக கமலாம்பாளுடன் ஸ்ரீமுருகா டாக்கீஸுக்கு குதிரை வண்டி கட்டி கொண்டு போன போது, வண்டியின் குலுக்கலில் மேலும் , கீழும் புரண்டு எழுந்ததும், பாகவதர் போல் சிகை வளர்த்து, சீஃப் துரையிடம் மண்டகப்படி வாங்கியதும், திருச்சி ஜங்ஷனுக்கு காந்தி வருகிறார் என்று ரெயில்வே ட்ராக்கைத் தாண்டி குதித்து தூரத்தில் ஒரு புள்ளியாய் கையசைத்துப் போனவரைப் பார்த்ததும், 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று துவக்கப் பள்ளியில் இருந்து கேட்ட பாடலுடன் கிடைத்த சுதந்திரமும்... பிறகு..பிறகு..
நாகேஸ்வரத்தில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டதும், லக்ஷ்மி பிறந்ததும், மிஸ்டர்.விநாயகமூர்த்தி பெண் பார்க்க வந்து தட்சணையாக பத்தாயிரம் கேட்டதும், கமலாக்குட்டி பிறந்ததும், மனைவி இறந்ததும், எமெர்ஜன்ஸியில் முட்டியிலேயே லத்தி அடி வாங்கியதும்... பிறகு... பிறகு...
நினைவுகள் வெகு வேகமாக காலியாகிக் கொண்டே வருகின்றன. பாத்திரத்தில் இருக்கும் ஜலம் ஆவியாகிக் கொண்டே போவது போல் எல்லாம் மறைந்து கொண்டே போகின்றன.
வலுவாக மீண்டும் மீண்டும் நினைவுகளை எழுப்ப முயற்சித்தேன்.
உறியடியில் தடி தவறாகப் பாய்ந்து, ஜன்னல் வழி பார்வையை வெளியே அனுப்பி இருந்த சீதாவின் மேல் விழுந்து, பின் திருக்கோயிலின் மண்டபத்தில் அவளை சந்தித்து, கண்ணீரைத் துடைத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து, கைகளை கீழே கொண்டு சென்று....
"ஸ்ஸ்..ஆ" என்றேன்.
ஒரு இவள்..இவள்...மறந்து போய் கொண்டே இருக்கின்றது. வந்து விட்டது. மருத்துவச்சி. ஊசியைக் குத்தி விட்டு என் இடுப்பில் தடவுகிறாள். எனக்கு கூச்சமாகப் போய் விட்டது. கைகளை நீட்டி அரைத் துணியால் மூடப் பார்க்கிறேன். ஆஹா.. என் கைகள். தொங்கிப் போய் இருக்கின்றன. அசைக்கவே முடியவில்லை. விரல்கள் எல்லாம் சுருங்கிப் போய் இருக்கின்றன.
கால்களை நகர்த்தி ஒரு மாதிரி சரி செய்து கொள்ள முயல், அவள் என்னைப் பார்க்க, வெட்கம் என்னை அள்ளி துண்டு போட்டு தின்றது.
"துணியை இழுத்துப் போர்த்தி விட்டுப் போ.." என்று சொல்ல நினைத்து, வாய் திறந்து சொல்ல முயல, வார்த்தைகளே மறந்து போய், மொழியே தொலைந்து போய் வெறும் சங்கேத ஒலிகளாயக் குழறினேன்.
சிரித்து விட்டுப் போனாள்.
என் நிலைமையை சொல்லி விடுகிறேன்.
கை விரல்கள் எல்லாம் சுருங்கிப் போயிருக்கின்றன. வாயில் இருந்து எச்சில் வடிகின்றது. கண்களைக் கொஞ்சமாகத் தான் திறக்க முடிகின்றது. தலையில் சிகை பஞ்சு போல் ஆகி, ஃபேன் காற்றில் தடவுகின்றது. என்னை மெல்ல தூக்கிக் கொண்டு வந்து இங்கே படுக்க வைத்திருகிறார்கள்.
முகங்கள் எல்லாம் மறந்து போய், வார்த்தைகளும் காணாமல் போய், வாய் திறந்து திறந்து மூட ஒரு நீளக் கொட்டாவி...! ஒருக்களித்து ஒரு முறை படுத்துக் கொண்டேன்.
நினைவுகளும், வார்த்தைகளும் மெல்ல மெல்ல தொலைந்து கொண்டே போய் ஒரு மாதிரி ஃப்ரெஷ் நோட்டுப் புத்தகம் போல் மனம் ஆகிக் கொண்டே வருவதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னில் இருந்து விடுபட்டு, என்னை நானே எட்டிப் பார்ப்பது போல் ஆகி, எனக்கு நானே தூரம் போய் என்னை விட்டுத் தொலைந்து போனேன்.
தூக்கம் தூக்கமாய் வருகின்றது.
"குழந்தை பேர் சொல்லுங்க..?" என்று கேட்டாள் ஒரு நர்ஸ் என் அம்மாவிடம்!
***
(
"ஆமா ! உங்களுக்கு எந்த ஊரு..?"
"தஞ்சாவூர்..!"
"தஞ்சாவூரா..? அந்த காவேரித் தண்ணியோட மகிமையே மகிமைங்க..!"
"சத்தியமான வார்த்தைங்க. எங்கப்பா தஞ்சாவூருக்கு மொதல்ல வரும் போது அவரால பேச முடியாது. நடக்க முடியாது. யாராவது தூக்கி நிக்க வெச்சா பொத்துனு கீழ விழுந்திடுவாரு. பேசவே முடியாது. ஆனா தொடர்ந்து நாலு மாசம் காவேரித் தண்ணி குடிச்சாரு பாருங்க, அப்புறம் கிடுகிடுன்னு ஓட ஆரம்பிச்சிட்டாரு. நடக்க ஆரம்பிச்சிட்டாரு.."
"ஆமா, உங்கப்பா அங்க எப்ப போனாரு..?"
"நாலு மாசக் குழந்தையா இருக்கும் போது...பேஏஏஏஏஏ"
கதைக்கு ஐடியா கொடுத்த மைலாப்பூர் எம்.எல்.ஏ. அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நன்றிகளுடன்!)
6 comments:
:-):-):-):-):-)nice......
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...!
;-)
அன்பு யோசிப்பவர்...
இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னே தெரியலையேப்பா...!!
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், சிரிப்புக்கும்...!
சேகரின் நாடக ஆடியோ கிடைத்தால் வாங்கவும்.டைமிங்சென்ஸில் கில்லாடி.
அன்பு வேளராசி...
நானெல்லாம் வளர்ந்ததே சேகர் சாரின் நாடகங்கள் கேட்டு தானே...!
Please See ::
http://kaalapayani.blogspot.com/2008/04/dramatic-life.html
Post a Comment