Monday, April 13, 2009

சில கடிதங்கள்.

ப்போது தான் கடிதம் எழுதும் முறைகளைத் தேடிப் பார்த்தேன். கடிதங்களை 'அன்புள்ள' என்று துவங்க வேண்டும் என்பது விதிகள் நிரம்பிய அட்டவணையில் வி34.2.4. ஆனால் உனக்கும் எனக்கும் இடையே எப்படிப்பட்ட 'அன்பு' இருக்க முடியும்? எங்களால் விதிகளை மீற முடியாததனாலும், உண்மையிலேயே உன் மேல் எனக்கு 'அன்பு' இருக்கின்றது என்பதாலும் அப்படியே எழுதுகிறேன்.

அன்புள்ள...,

ஆமாம், உன் பெயர் என்ன? எனக்குத் தெரியாது. இங்கே பெண்களுக்கு ஜோ, ஸி, ஹா என்று தான் பெயர்கள் வைப்போம். அதுவும் நாங்கள் கூப்பிடுவதற்காக! மையக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கும், பூமியில் இருக்கும் தரைத் தளத்திற்கும் நாங்கள் வெறும் எண்கள். என் எண் என்ன தெரியுமா? 3 - 27 - 194.

நேற்றோடு நான் பிறந்து இருபத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. தீராத ஓட்டத்தால் கடிகாரம் சொல்கிறது. இதனிடம் எங்கள் அனைவரின் வயதும் இருக்கின்றன. மூ, ஆ, நி...அத்தனை பேருடையதும்..!

கொண்டாட்டங்கள் நடந்தன. ஸி முத்தம் கொடுத்தாள். இன்னும் ஒரு வருடத்திற்கான என் காதலியாக அனுமதிக்கப்பட்டுள்ளவள். பத்தாம் காதலி. காதல்கள் எனக்கும் அலுத்துப் போய்க் கொண்டிருக்கின்றன.

பதினேழாம் வயதிலிருந்து காதலிகள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு பெண். அவளுக்கு ஒரு குழந்தை. இப்படி நாங்கள் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் பூமியிலிருந்து எறியப்பட்டு…மூன்றாம் தலைமுறை நான். இன்னும் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்கும் தகவல் தொடர்புப் பாதையில் தான் எத்தனை வித்தியாசம்?

நாங்கள் உங்களுக்குத் தகவல் தர வேண்டும்; நீங்கள் எங்களுக்கு கட்டளைகள் இடுவீர்கள். மாற்றிச் செய்வதற்கில்லை.

இங்கே உங்கள் பூமியின் அத்தனை தகவல்களையும் சேர்த்து வைத்துள்ளார்கள். கேட்டால் கிடைக்கும். உங்கள் நாடுகள், உங்கள் வாழ்க்கைகள், உணவுகள்... அத்தனையும் நாங்கள் இங்கே தெரிந்து கொள்கிறோம். என்னிடம் உன் தாத்தாவைப் பற்றிய தகவல்கள் படங்களாக உள்ளன. அதை வைத்து உன்னை கற்பனை செய்து கொள்கிறேன். உனது வீட்டுக் கிணறு, மல்லிகைச் செடிகள், கோயில் கோபுரம், மழை...!

உன்னைப் பற்றி அப்பா நேற்று தான் சொன்னார்கள். நாங்கள் அங்கேயே இருந்திருந்தால், இப்போது தான் எனக்குத் திருமணம் ஆகியிருக்குமாம். நீ தான் என் மனைவியாக வந்திருப்பாயாம்.

அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

நாங்கள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டேயிருப்போம். எத்தனை நேரம் என்று கேட்காதே! நேரங்கள் எல்லாம் எங்களுக்கு கிடையாது. கட்டளைகள் வரும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். ஆற்றல் சேமிப்பிற்காக! இன்னும் மூன்று தலைமுறைகள் போக வேண்டும். அதுவரைக்கும் நாங்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.

எங்கள் ஆயுளுக்கு எதிரிகள் இல்லை. எந்த வித விபத்துக்களும் இல்லை; பசி, பஞ்சம் இல்லை; கலவரங்கள் இல்லை; ஜாதிகள் இல்லை; ஸ்கூல் அட்மிஷன்கள் இல்லை; வேலை தேடல்கள் இல்லை; எல்லோரும் ஓரினம்; எல்லோரும் ஒரு மக்கள்; ஒரே ஒரு நோக்கம். குழந்தைகள் பெற்றுக் கொள்வது!

பூமியில் இருந்து கிளம்பும் போது ஐந்து தலைமுறைகள் ஆகும் என்று கணக்கிட்ட படி, இப்போது மூன்றாம் தலைமுறையில் நான்! என் தாத்தாவும், பாட்டியும் பூமியில் பிறந்து, பூமியை வாழ்ந்து கலம் ஏறியிருக்கிறார்கள். என் பேரனோ, பேத்தியோ புதிய கிரகத்தை அடைந்து புத்தம் புதிய மனித சாம்ராஜ்யத்தை ஆரம்பிப்பார்கள். அவர்கள் மற்றுமொரு ஆதாம், ஏவாள் என்றும் போற்றப்பட்டு, மதம் துவங்கி, கடவுளாகி...!

இடைப்பட்ட நான் யார்? என் வாழ்க்கை எதற்காக அமைக்கப்பட்டது? என் நாட்கள் முழுதும் ஓர் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் கலத்தின் லட்சியத்தில் இடைப்பட்ட ஒரு பிரதிநிதியா? இதற்காகத் தான் நான் பிறந்தேனா..?

என் பிறப்பின் அர்த்தம் என்ன? என் அர்த்தம் என்ன? நான் யார்? புத்துலக வரலாற்றில் எனது இடம் என்ன?

'பூமியில் இருந்து கிளம்பிய 'அவர்' குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையில் வந்த 'இவர்' நமது கிரகத்தை அடைந்து, புதிய மனித சாம்ராஜ்யத்தைத் துவக்கினார். அவர் குடும்ப வரலாறு : தந்தை தாய் : …, ..., தாத்தா, பாட்டி: நான்,…..'

எனது பங்களிப்பு அவ்வளவு தான்.

ன்பான ரோஹிணி... உனக்கு இந்தப் பெயர் பிடித்திருக்கின்றதா..? நேற்று தேடிப் பார்த்துப் பிடித்தேன். பூமியில் உன் பெயர் என்னவாகவும் இருக்கட்டும். எனக்கு நீ ரோஹிணி தான்.

ரோஹிணி... ரோஹிணி...!

என்னைப் போல் முட்டாள் எங்காவது உண்டா? கலத்தில் தான் எத்தனை பெண்கள்..? லா, ஷி, ம்யூ...! அதிகபட்ச இச்சைகளோடு கொண்டாட இங்கே இருக்கும் போது, பார்க்கவே பார்த்திராத, பார்க்கவும் முடியாத உன்னை நினைக்கிறேனே ரோஹிணி.. இதன் பெயர் தான் நீங்கள் அதிகம் நாடும் காதல் என்பதா..?

தனிமையின் பயப் பிராந்தியங்களில் சில பேருக்கு இங்கே பைத்தியம் பிடித்து விடும். நினைத்துப் பார். எந்த வேலைகளும், சவால்களும், கவலைகளும், சாகசங்களும், இலட்சியங்களும், கவிதைகளும் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கும், இறுதி நோக்கத்திற்கு தேவையில்லாத ஆனால் அவசியமான தலைமுறை மனிதர்கள் நாங்கள். துவங்கியதும் தெரியாது; சென்று சேர்வதும் முடியாது. வாழ்க்கை முழுக்க கலத்தில் நகர்ந்து கொண்டே இருப்பது என்றால்... நான் இன்னும் தெளிவாக இருப்பது ஓர் ஆச்சரியமே!

ஆனால் நிறைய நாட்களுக்கு இப்படியே இருப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை.

ரோஹிணி, என்னைப் பற்றி நீ நினைத்துப் பார்ப்பாயா? நான் ஒருவன் இருப்பதாவது உனக்குத் தெரியுமா? இருக்காது. உன்னைப் பார்க்கச் செய்யாது இப்படி ஒரு கலத்தில் பிறக்கச் செய்து, ஏதோ ஒரு வலியை எனக்குள் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற நிகழ்வுக்குப் பெயர் தான் நீங்கள் சொல்லும் விதியா..?

பூமியில் நிலவும் அத்தனையும் இங்கே பொய். விதி, பண்பாடு, நாகரீகம், கடவுள்கள், மதங்கள், எல்லைகள், வஞ்சனைகள், பழிவாங்கல்கள், பணம்... எவற்றுக்கும் இங்கே அர்த்தம் இல்லை.

உங்கள் பூமியைச் சுற்றிலும் குளிர்ச்சியான வாயு மண்டலம் இருக்கின்றதாமே? எனக்கு 'குளிர்ச்சி', 'வாயு' இவற்றுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. ஆனால் தகவல்களில் பார்க்கிறேன். அதைப் போல, நீங்களும் உங்கள் அற்புதமான வாழ்க்கையைச் சுற்றிலும் பல கொள்கைகளையும், பல தத்துவங்களையும், குழப்பங்களையும் கொண்ட கனமான போர்வைகளால் போர்த்திக் கொண்டு வாழ்கிறீர்கள்.

ன்புள்ள ரோஹிணி... அன்புள்ள ரோஹிணி...

மறுபடியும் மறுபடியும் உன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கின்றது. ஒரு வேளை இதுவே கடைசியாக நான் சொல்லும் வேளையாக இருக்கலாம்.

போன கடிதத்தில், இங்கே சிலருக்கு பைத்தியம் பிடித்து விடும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அவர்கள் கலத்திற்குத் தேவையற்ற கனம். செலவு. எனவே என்ன செய்வார்கள் தெரியுமா..? அவர்களிடம் இருந்து ஆதாரமான, அவசியமான சில பகுதிகளை எடுத்துக் கொண்டு...கலத்தின் இறுதிப் பகுதியில் ஒரு வால் இருக்கின்றது. அங்கே தள்ளி விட்டு, திறந்து விட்டு மூடி விடுவார்கள்.

பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் மிதக்கும் கோடானுகோடி துகள்களில் மைக்ரோ நானோ நொடிகளில் அவர்களும் ஒரு பஸ்பத்துகளாகி காணாமல் போவார்கள்.

இரவும், பகலும் இல்லாத இந்த மிதந்தோடும் அமைப்பில் கவனங்கள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், நான் இப்போது சில எதிர் வேலைகள் செய்து, வால் பகுதியில் அமர்ந்திருக்கிறேன். திறக்கும் நேரத்தைச் சரியாக அமைத்திருக்கிறேன். இன்னும் மூன்று நிமிடங்கள். அதற்குள் உனக்கு இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

ரோஹிணி...ரோஹிணி... இந்த அர்த்தமின்மை நிறைந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் இதனைப்பற்றி அறியாமல் இருந்த போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்னும் நான் இங்கே கழிக்க வேண்டிய வாழ்க்கை முழுக்க இது போல் செயல்களற்ற நகர்வு தான் என்பதை நினைப்பதே எனக்கு பயம் அளிக்கின்றது.

உனக்கு மறு ஜென்மத்தில் நம்பிக்கை இருக்கின்றதா..? என்னைக் கேட்டால் 'தெரியாது' என்பேன். ஆனால் இப்போது நம்ப விரும்புகிறேன்.

மர்மமான கணக்குகள் கொண்ட ஏதோ ஒரு விதியோ, கடவுளோ என்னை இந்தக் கலத்திலும், உன்னை பூமியிலும் படைத்து விட்டது. அதன் கணக்கீடுகளில் நிகழக் கூடிய வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்று அடுத்த முறை என்னை பூமியில் உன்னருகில் படைத்து விடாதா..?

இன்னும் ஒரு நிமிடம் தான். விளக்கு மினுக்கிறது.

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? இங்கே தகவல் தளங்களில் தேடிப் பார்த்து, உன்னைக் கற்பனை செய்து வைத்திருக்கும் வடிவத்திற்கு… மெல்லப் பேசுவது பிடிக்கும்; அடர் ரோஸ் தாவணியும், மென் மஞ்சள் ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு கோயிலுக்குச் செல்லப் பிடிக்கும்; எல்லோரோடும் நட்பாய் இருப்பது பிடிக்கும்; அம்மா கையால் தோசை ஊட்டி விட்டால் பிடிக்கும்; இரவில் பயணம் செய்யும் போது, கூடவே வரும் உங்கள் ஒற்றை நிலவைப் பார்த்து ஏதேனும் பேசப் பிடிக்கும்; காதல் கவிதைகள் பிடிக்கும்; ரோஜா பிடிக்கும்.

ரோஹிணி... எங்கள் கலத்தில் நோவா சாம்பிள்கள் போல் நட்டு வைத்த ரோஜாச் செடிகளில் இருந்து சிவப்பு நிற ரோஜா ஒன்றை எடுத்து வந்திருக்கிறேன். ஈரமாக, வாசமாக இருக்கின்றது.

எனக்கு மறு பிறவி இருந்து உன்னோடு வாழ உன்னருகில் நான் பிறக்க வேண்டுமெனில், இந்த ரோஜாப் பூவுக்கும் மறுஜென்மம் நம்மோடு தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விளக்கு எரிகின்றது. கதவு திறந்து விட்டது.

வருகிறேன் ரோஹிணீணீணீ....

"ரி..! இதான் பார்க்குக்கு வர்ற நேரமா..? தனியா எவ்வளவு நேரம் தான் உக்கார்ந்திட்டு இருக்கறது..?

"இல்ல ரோ! கிளம்பும் போது மானேஜர் கிழம் மந்த்லி அனலிஸிஸ் ரிப்போர்ட் அடிச்சுட்டு வான்னு சொல்லிடுச்சு! அவசர அவசரமா அடிச்சுட்டு வர லேட்டாகிடுச்சு..."

"ஆமா..! எப்போ பார்த்தாலும் ஒரு எக்ஸ்க்யூஸ் சொல்லிடுங்க. ஆமா, அதென்ன கைல..?"

"ஓ! சொல்ல மறந்துட்டேன். வரும் போது வீட்டுக்குப் போய்ட்டு வந்தேன். அம்மா தான் குடுத்தாங்க. 'ரோஹிணியைத் தான பார்க்கப் போற. தோட்டத்துல ரோஜாச் செடில பூ பூத்திருக்கு. என் மருமகளுக்கு கொண்டு போய்க் குடு. சீக்கிரம் வந்திடுடா. ரெண்டு வாரத்துல கல்யாணம் பண்ணப் போறீங்க. அதுக்குள்ள என்ன தான் பேச்சோ..?'னு ஆரம்பிச்சாங்க. பூவ மட்டும் பிச்சிட்டு கொண்டு வர்றேன்.."

"எங்க வீட்லயும் இதே தான் சொல்றாங்க. ஆமா, போன தடவ வந்தப்போ உங்க வீட்ல ரோஜாச் செடியையே நான் பார்க்கலயே? இப்ப எப்படி புதுசா வந்துச்சு..?"

"அதான் எனக்கும் தெரியல! நேத்து வரைக்கும் இல்ல. இன்னிக்கு திடீர்னு புதுசா வந்திருக்கு. கடவுள் நமக்காக நம்ம மேரேஜுக்காக அனுப்பி வெச்சிருக்காருன்னு நினைக்கறேன்.."

"போதும் வழிஞ்சது! கிளம்புங்க. படம் போட்டுடப் போறான்..."

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)

2 comments:

எம்.ஞானசேகரன் said...

இந்தப் பதிவிற்கு (சில கடிதங்கள்) எனது வலைத்தளத்தில் இணைப்பு கொடுத்திருக்கிறேன். தவறில்லையே!?

இரா. வசந்த குமார். said...

அன்பு கவிப்ரியன்...

சொல்லி விட்டீர்கள் அல்லவா..தவறில்லை. ஆனால், எங்கே இணைத்திருக்கிறீர்கள் என்று இணைப்பையும் கொடுத்திருந்தால் பார்த்து மகிழ்வேன்.