Monday, January 11, 2010

இந்திய அறிவியல் மாநாடு - 2010.

லைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநாடு ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். இந்த ஆண்டு (97-வது மாநாடு ) பிரதமர் சிங் துவங்கி வைக்க, ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 3லிருந்து 7 வரை திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் ( கார்யவட்டம் கேம்பஸ் ) நடைபெற்றது.

'முத்துடைத் தாமம்' என்றெல்லாம் இல்லாமல், கார்பெட் ஷீட் போட்ட பிரம்மாண்ட பந்தற்கீழ் கண்காட்சி நடைபெற்றது. 'Stealing the Show' என்று ISRO அள்ளிக் கொண்டது. நடுவில் ஒரு பெரிய ஸ்டால் கட்டி, சந்திராயன் வீடியோக்கள், நவீன ஸேட்டிலைட் வடிவ மாதிரிகள் என்றெல்லாம் சுற்ற வைத்தார்கள். ஓரத்தில் ஒரு மாதிரி ராக்கெட் சீறிப் பாயும் போஸில் நிற்க, காதலர்கள் காதலிகளுடன் 'காதல் வானிலே... காதல் வானிலே...' என்று பாடிக் கொண்டே அதன் மேல் ஒய்யாரமாய்ச் சாய்ந்து, போஸ் கொடுக்க, நண்பர்கள் 'க்ளிக்'..!

கேரளப் பயிர்க் கல்லூரியின் வெவ்வேறு பிரிவுகளில் 'கொழுகொழு' ஹைப்ரிட் கோழி வளர்த்து, டெமோவுக்கு காட்ட, கூண்டுக்குள் அது ஒண்டி நின்று எங்களை வேடிக்கை பார்த்தது.

மண்ணே தேவையில்லாமல், தேங்காய் நாரிலேயே அக்ரியில் உருவாக்கிய சில கெமிக்கல்களைச் சேர்த்து,செடி வளர்ப்பதால், மண் மாசுபடுதலைத் தவிர்க்கலாம், அதே சமயம் மறுசுழற்சிக்கும் தயார் படுத்தலாம் என்று ஒரு பெண்மணி விளக்க, கூட அமர்ந்திருந்தவர் செல்போன் விளையட்டில் பிஸியாக இருந்தார்.

சதீஷ் தவான் அவர்களைப் பெருமைப்படுத்தித் தனியாக ஒரு ஸ்டால். அதில் அவர் பணிகளைப் பாராட்டும் இந்திரா, கலாம் புகைப்படங்கள்; அவர்களது பாராட்டுரைகள்; அவரது பொன்மொழிகளென்று பெய்ண்ட் பூசி வைத்திருந்தார்கள். சுற்றியும் எல்.ஈ.டி. விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

வீடியோகான் தனி ஸ்டாலில் ஸேடிலைட் டிஜிட்டல் எல்.ஸி.டி., என்று ஆரவார விளம்பரம் இருக்க, ஆர்வமாய் விசாரித்தால், வெளியே இருக்கும் செட்டாப் பாக்ஸை டி.வி.மானிட்டருக்குள்ளேயே செட் செய்து வைத்திருக்கிறார்கள். ரூ.26699 லிருந்து பட்ஜெட் போகிறது. மானிட்டர் இஞ்ச் பொறுத்து விலை நிர்ணயம்.

பிரியத்ர்ஷினி அறிவியல் ம்யூஸியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் அவதாருக்குத் தாத்தா வகையறா 3-டி காட்சிகள் காட்டினார்கள்.

சந்தடி சாக்கில் பி.எஸ்.என்.எல். இரண்டு ஸ்டால்களைக் கைப்பற்றி கார்டுகளை விற்றுக் கொண்டார்கள்.

காதி பவன் ஸ்டாலில் கதர்த் துண்டுகளும், சட்டைகளும் இன்னபிற நார்ப் பைகளும் தொங்கிக் கொண்டிருக்க, சரசர மணிகள் நிரப்பப்பட்ட குழாய்களைக் குலுக்கி விற்க முனைந்தார்கள்.

அரசுக் கைவினைப் பொருட்கள் ஸ்டாலில் தென்னை மினியேச்சர், குடை சுமக்கும் மஞ்சள் பார்டர் மார்க்கச்சைப்பெண்கள், கதகளி முகம், கோரைப் பாய்கள் என்று மாறாமல் கேரளப் பண்பாட்டைக் கடை விரிக்க, அதற்கு எதிர்ப்புறத்தில் வங்காளத்தில் இருந்து வந்திருந்த ஸ்வாமி பிரபுபாத சைதன்ய மகாபிரபு மடத்தின் ஒரு ஸ்டாலில் சில புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள்.

அறிவியல் கண்காட்சியில் ஆன்மீகத்திற்கு இடம் என்ன என்று பார்த்தால், அத்தனை புத்தகங்களிலும் இரண்டையும் லிங்க் செய்த முயற்சிகள். மாதிரிக்கு ஒன்று படிக்கலாம் என்று 50% தள்ளுபடியில் ஒரிஜினல் ரூ.95, வாங்கிய விலை ரூ45 என்று எடுத்துக் கொண்ட புத்தகம் 'Vedanta and Biotechnology'.

அத்தனை பள்ளிக் கூட்டங்கள்! தைரியமாய்ச் சைட் அடிக்கலாமா என்று ஆசை கொள்ள வைக்கும் சுடிதார் சுந்தரிகள்! பட்டாம்பூச்சிக் குழந்தைகள்! யூனிஃபார்ம் யூத்கள்! யூனிவர்சிட்டி இளம் சிட்டுக்கள்! கேண்டீன்கள்! இரண்டு மணிநேரமும் ஸ்டால்களோடு, கண்களுக்குக் கூல்களாகவும் பார்த்து ரசித்து வெளியேறினால், காக்கிக் காவலர்களோடு, 'Quick Operation' என்ற பெயரில் ஸ்பெஷல் செக்யூரிட்டி போர்ஸினர், ஓபன் ஜீப்பில் கனமான துப்பாக்கியோடு செல்போன்களுக்கு விறைப்பாய் போஸ் கொடுத்தனர்.















































3 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கேள்விப்பட்டதில்லை இ.ரா. தகவலுக்கு நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீ...

நன்றிகள். நானும் இப்ப தான் கேள்விப்படறேன். நம்ம ஊர்ல நடந்தா கண்டிப்பா ஒரு எட்டு போய் என்னன்னு பாத்துட்டு வந்திடுங்க..! :)

thamizhparavai said...

தகவலுக்கு நன்றி வாத்யாரே...