Monday, September 25, 2006

பயணங்கள்...!

அப்பாடா...! ஒரு வழியா இந்த மாசத்துக்கான தேன்கூடு போட்டிக்கு, முடிஞ்சளவு படைப்புகள் எல்லாம் அனுப்பியாச்சு. பரிசு கெடைக்குதோ, இல்லயோ நல்லாயிருக்குனு நாலு பேரு சொன்னாங்க. அது போதும். கொஞ்ச நாளைக்கு வேற ஏதாவது பத்தி பதிவுகள் போடலாம்னு தோணுச்சு. ஏற்கனவே கொஞ்சம் ஊர்ப் புராணம் பேசியிருக்கோம். அதக் கொஞ்சம் கண்டின்யூ பண்ணுவோம். அங்கங்க கெடைக்கற எடத்துல நம்ம புராணத்தையும் போட்டு வெப்போம். அப்படியே ஒரு பெரிய கதை சொல்லலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க.?

வாழ்க்கையே ஒரு நெடும் பயணம் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பெரியவர்கள் கூறியிருப்பார்கள். நாமும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் நான் 'ஜல்லியடிச்சு'(உபயம் யாரு? சுஜாதா சாரா..?) பேசப் போறதில்லங்க. நாமளும் இந்தா இருக்கற சூரியன 25 வருஷம் சுத்தி முடிச்சிட்டோம் . எத்தனையோ பயணங்கள் போயிருக்கோம். அதைப் பத்தியெல்லாம் கொஞ்சம் நெனப்புல நிக்கறதெல்லாம் எழுதி வெப்போம். பாக்கறவங்க, படிக்கறவங்க அவங்களும் அவங்க மனசுல இருக்கற அவங்கவங்க பயண நெனப்புகள அள்ளித் தெளிச்சாங்கன்னா, நல்லா இருக்கும்னு தோணுச்சுங்க. ஏன் இப்ப திடீர்னு கேட்டீங்கன்னா, அதில பாருங்க, நாம ஊர்கோலம் போன பல வாகனங்கள் நம்ம பசங்க காலத்துல இருக்குமான்னு தோணுச்சு. அதான், சர்தான் கழுத, ஒரு பதிவு அதப் பத்தி போட்டு வெப்போம்னு...!

குதிரை வண்டி:
எங்க ஊர்ப் பெருமையில கொஞ்சம் இங்க அள்ளி விட்ருக்கோம். காவிரி ஆத்தங்கரையில மேக்கால எங்க ஊரு இருக்குது. கெழக்கால 'கொமாரபாளையம்'னு ஒரு ஊரு இருக்குது. அது முந்தி சேலம் மாவட்டத்துல இருந்தது. இப்ப நாமக்கல் மாவட்டமா மாத்திட்டாங்க. நம்ம ஊரு எப்பவும் ஈரோடு மாவட்டம். நம்ம சொந்தக்காரங்க கொஞ்சம் பேரு அங்க இருந்தாங்க. நாங்க இங்க இருந்து போகணும்னா, ஆத்தைத் தாண்டித் தான் போகணும். 'தாண்டி'னா அனுமார் மாதிரியானுலாம் கேட்கக் கூடாது.

ஆத்தத் தாண்டிப் போக மூணு பாலம் இருக்கு. ஒண்ணாவது கோயமுத்தூர்ல இருந்து, சேலம் போற NH. அது எங்க ஊர்ல இருந்து கொஞ்சம் தூரம்கறதனால நாங்க அது வழியா போக மாட்டோம்.பண்டிகைக்கு வீட்டுப் பொண்ணுங்களுக்கு நகை வாங்கித் தருவோம். ரெண்டு கை நெறைய வளையல்கள் எலாம் போட்டுட்டு கலகலனு சுத்தி வருவாங்க. ஒரு தோடோ, ஒரு கை வளையலோ உடைங்சோ, தொலைஞ்சோ போச்சுன்னா அதுங்க மொகமே களையிழந்து போயிருங்க. அது மாதிரி பாலம் திறந்த புதுசுல, சும்மா ரெண்டு பக்கமும் சோடியம் லைட் போட்டு, ஜெகஜ்ஜோதியா இருந்துச்சுங்க. இப்போ ஒரு பக்க லைட் மட்டும் தான் இருக்கு. பாலமே சோபை இல்லாம போயிடுச்சுங்க.

மூணாவது இப்ப ரொம்ப புதுசா திறக்கப்பட்ட புதுப்பாலம். இது எங்க புது பஸ் ஸ்டேண்ட்ல இருந்து, எடப்பாடி போகறதுக்காக கட்டுனது.

ரெண்டாவதா வர்ற பாலம் வெள்ளக்காரன் கட்டுனதா சொல்வாங்க. பாலமும் அப்படித்தான் இருக்கும். ரொம்ப பழசா இருக்கும்னு நெனச்சுக்காதீங்க. சும்மா கிண்ணுனு 'கில்லி' மாதிரி இன்னிக்கும் நிக்குது. இதுல தான் நாங்க போவோம். பழைய பாலங்கறதுனால லாரி, பஸ்ஸுக்கெலாம் இங்க அனுமதியில்ல. சைக்கிள், பைக், கால் நடை (அட, நடந்து போறவங்கள சொல்றேங்க..) இப்படித் தான் இதுல போக முடியும்.

நாங்க கைப்புள்ளைங்களா (அம்மாவோ, அப்பாவோ கையில தூக்கிட்டு.. அப்புறம் அவங்க கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறப்போ நாம கைப்புள்ளைங்க தானுங்களே..) இருந்தப்போ, அந்தப் பாலத்து வழியா இன்னொரு வண்டியும் போய்ட்டு, வந்திட்டு இருந்துச்சுங்க. அதான் குதிரை வண்டி.

இந்த ரெண்டாவது பாலத்தோட ரெண்டு எல்லைகளிலும் குதிரை வண்டிகள் இருக்குங்க. மூணு பேர் உட்கார்ற மாதிரி பெட்டி மாதிரி பாடி, கட்டை சக்கரங்கள். இப்படித்தான் வண்டிகள் இருக்கும். குதிரை எல்லாம் ரொம்ப நொந்து போய், பார்க்கவே பாவமா இருக்கும். அதுங்க வழியில பார்க்கக் கூடாதுங்கற மாதிரி கண்கள்க்கு சைடுல மறைச்சிடுவாங்க. வாயைச் சுத்தி ஒரு பையில புல் (இது நிஜமாலும் புல்.. நீங்க வேற ஏதும் நெனச்சுக்காதீங்க..) நிரப்பி மாட்டி விட்டுடுவாங்க. வண்டியோட கீழ ஒரு சாக்கு மூட்டையை நாலு பக்கமும் இழுத்துக் கட்டி, அதுல இன்னும் நிறைய புல் வெச்சிருப்பாங்க. இந்த குதிரை வண்டியில தான் நாங்க ஆத்தைத் தாண்டி போறது, வர்றது எல்லாம்.

இப்ப இந்த மாதிரி வண்டிகள் எல்லாம் இல்ல. முடிஞ்சவங்க கார் வாங்க, சொல்லப் போனா எல்லாரும் டூ வீலர் வாங்க, குதிரை வண்டிக்காரங்க ஆட்டோ வாங்க, சாக்கடை நீர் காவிரியில கலக்கற இடத்துல வளர்ற கோரப்புல்லை மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு, குதிரைங்க..!