நம்மளைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேங்க. நம்ம பேரு...அட..அது அவ்வளவு முக்கியமாங்க...'காலப்பயணி'யே ரொம்ப நல்லாயிருக்குங்க... நாம எல்லாரும் காலத்தோட ஓடிட்டு இருக்கிற பயணிகள் தானுங்களே... நமக்கு சொந்த ஊரு வந்து ஈரோட்டுக்குப் பக்கத்துல பவானினு ஊருங்க... நல்ல அமைதியான ஊருங்க...கிழக்கால காவேரி ஓடுதுங்க..மேற்கால பவானி (இது ஆறு பேருங்க...) ஓடுதுங்க...இந்த ரெண்டு ஆறும் நம்ம ஊருல தாங்க சங்கமிக்கறதுங்க...இதைத் தவிர நம்ம கண்ணுக்குத் தெரியாம சரஸ்வதினு ஒரு நதியும் சங்கமிக்கறதா ஐதீகங்க...வடக்குல அலகாபாத் போல 3 நதி சங்கமிக்கறதால, நம்ம ஊரை 'தக்ஷிண பிரயாகை','திரிவேணி சங்கமம்'னு எல்லாம் சொல்லுவாங்க...இந்த நதிகள் கூடுற இடத்துக்கு பேர் 'கூடுதுறை'ங்க...இங்க ஒரு அற்புதமான பழைய காலத்துக் கோயில் இருக்குங்க..சங்கமேஸ்வரர் கோயில்னு பேருங்க..கோயில்ல அப்பா பேரு சங்கமேஸ்வரருங்க...அம்மா பேரு வேத நாயகி அம்பாளுங்க... நம்ம ஊருல அப்பா, அம்மா போட்டோ எடுக்கும் போது, கடைக்குட்டியை நடுவில உக்கார வெச்சிக்குவாங்கல்ல...அது போல இங்கே, குறும்பன் முருகன், வள்ளி,தெய்வானையோடு அம்மா,அப்பா நடுவில 'சோமாஸ்கந்த மூர்த்தியாய்' நிற்கிறாருங்க. அப்ப மூத்தவர்? அவருக்கென்னங்க...அம்சமா கோயில் முன்னாடி 'கோட்டை வினாயகரா' இருக்கிறாருங்க...கோயில்ல இருக்கிற அரசமரம், இலந்தை மரம் (இது தான் நம்ம கோயில் ஸ்தல மரம்ங்க..) இங்கயும் பிள்ளையார் தாங்க.கோட்டை வினாயகருக்கு துணையா ''கோட்டை ஆஞ்சனேயர்' இருக்காருங்க..இவர் எங்க இங்க வந்தாருன்னு பாக்கறீங்களா... நம்ம கோயில்ல பெருமாளும் தாயாரோடு இருக்காருங்க..அதுதான் இராம தாசர் மாருதி, கோட்டை வாசல்ல காவலுக்கு இருக்காருங்க. இங்க எம்பெருமான் 'ஆதிகேசவப் பெருமாளா' எழுந்தருளியிருக்காருங்க. அம்மா பேர் 'செளந்தரவல்லித் தாயாரு'ங்க. கருடாழ்வார்,வேணுகோபால் சுவாமி, எல்லாரும் இருக்காங்க. நம்ம கோயிலைப் பத்தி நிறைய சொல்றதுக்கு இருக்குங்க...அப்புறமா சொல்றேங்க.. நீங்க இங்க போய் பாருங்க. சரி இப்ப வரட்டுங்களா....
1 comment:
Hey Vasanth!! Name of the THird River is Amirthavakini...Not Saraswathy
Post a Comment