Monday, July 09, 2007

வாழ்த்து மடல்!


ரிசாய் என் தமிழ் தான் தரமுடியும்,
தரிசாய் என் கரங்கள் தற்போதைக்கிருப்பதால்!

புகழொளி பட்டுத் திருமேவும் கதிரின்
திகழொளி பட்டுத் திரை வானெங்கும் தித்தித்திட,
வள்ளித் தலைவன் வாசமலர் சூடிநிற்ப,
வெள்ளிக்கிழமை துணை சேர்ந்தாய், வாழி!

நாதசுரம் மேளமெல்லாம் நல்லோர்தம் ஊதிநிற்ப,
வேதமுறை பட்டரெல்லாம் வேண்டும் முறை ஓதிநிற்ப,
கூதலுற்ற காற்றுவந்து கூரையெங்கும் கூடுகட்ட,
பாதவிரல் தரைதேய்ப்ப பாங்குடன் நிற்கின்றாய், வாழி!

சுற்றி நிற்கும் பேரதனால் சுற்றமாயினர்,
உற்ற நண்பர் உறவினர் உவந்து நிற்பனர்,
பெற்ற நேரமெண்ணி அம்மை வாழ்த்திநிற்ப,
உற்றவனின் மணிவிரலில் விரல் கோர்த்தாய், வாழி!

தீவலம் வரும்போது திருமகனின் விரல் பிரியாய்,
நீவலம் வருகின்ற மாமாவின் மனம் பிரியாய்,
சேர்வளம் சேர்கின்ற செழும்வாழ்வு பிரியாய், உங்கள்
பேர்வலம் வரச்செய்யும் பிள்ளைகள் பெறுவாய், வாழி!

ஒருபாதி பெற்று, ஓருயிராய் நின்றாள் அன்னை,
திருமகளோ நாரணனின் துணையாய் நின்றாள்!
தருவாய் உன் அன்பையெல்லம் கற்பகத்
தருவாய் மனம் சேர் மன்னன் மேல், வாழி!

'வாழ்த்துதற்கு வயது வேண்டும்', வயதாகிப் போன மொழி!
வாழ்த்துதற்கு மனம் போதும், வந்து நிற்க மாட்டாமல்,
வாழ்த்த வந்துள்ளேன், வாழி வாழி பல்லாண்டு,
வாழையடி வாழையென்று வாழி வாழி பல்லாண்டு!

எழுதியது : 05 - DEC - 2003.

ன் இருள் காலங்களில் ஓர் அக்காவின் திருமணம் நடந்தது. வெட்கத்தினால் நான் மண விழாவிற்குச் செல்லவில்லை. பின் ஒரு நாள் அவர்களைப் பார்க்கச் சென்று, அப்போதும் அவர்களுக்கு அன்பளிக்க ஒன்றும் கையில் இல்லாததால், வற்றாத அன்னை நதியாய்த் தமிழில் எழுதிக் கொடுத்தக் கவிதையிது!

இப்போதும் படிக்கையில்... ஏதேதோ நினைவுகள்...!

2 comments:

PPattian said...

//என் இருள் காலங்களில் ஓர் அக்காவின் திருமணம் நடந்தது//

என்ன அது இருள் காலம்??

இரா. வசந்த குமார். said...

http://kaalapayani.blogspot.com/2007/05/blog-post_04.html

ppattian ஸார்... இந்த பக்கம் போய்ப் பாருங்க.. என் இருள் காலம் சொல்லி இருக்கேங்க...